தமிழ், இந்தி, தெலுங்கு: எந்த மொழி பழமையானது, இவற்றின் வேர்கள் எங்கே உள்ளன?

  • பிரிதிவிராஜ்
  • பிபிசி தெலுங்கு

மனிதர்களின் தினசரி வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக மொழி இருக்கிறது. சமூகத்தில் உரையாடுவது, அரசின் நிர்வாக விவகாரங்கள் என மொழி தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, நமக்கு பாரம்பரியமாக தொடர்ந்து வரக் கூடிய கலாசாரத்தில், தாய்மொழி என்பது முதன்மையான இடத்தை வகிக்கிறது.

அதேசமயத்தில், மற்ற மொழிகளால் தங்கள் தாய் மொழிக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. முக்கியமாக இந்தியாவில் அவ்வப்போது உணர்வுபூர்வமான கொந்தளிப்புகள் ஏற்படுவதற்கு, இந்தப் பிரச்சினை முக்கிய காரணமாக உள்ளது.

இந்தி மொழி பேசுபவர்கள் - பெரும்பாலும் வட இந்தியர்கள் - இந்தி தான் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி என்றும், அதுதான் தேசிய மொழி என்றும் பிடிவாதம் காட்டுகின்றனர். இருந்தபோதிலும், இந்தி அல்லாத மொழிகள் பேசும் மக்கள் - குறிப்பாக தென்னிந்தியர்கள் - இந்தி மொழி பேசுபவர்களைக் காட்டிலும், மற்ற மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

பரவலாகப் பேசப்படும் மொழியை எல்லோரும் கற்க வேண்டும் என்று கோருவது மொழி ஆதிக்கத்தைத் தவிர வேறெதுவும் கிடையாது. அது பல்லாயிரம் ஆண்டு பழமையான மொழி மற்றும் கலாசாரங்களுக்கு சாவுமணி அடிப்பதாக அமைந்துவிடும் என்று, கோபத்தில் உள்ள தென்னிந்தியர்கள் கூறுகின்றனர்.

இந்திய கலாச்சாரத்தின் குறியீடாக இந்தி மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று சிலர் வாதாடும் நிலையில், தங்களுடைய திராவிட கலாசாரத்தின் மீது கட்டாயப்படுத்தி இந்தியைத் திணிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சையை ஒட்டி மொழிகள் மற்றும் அவற்றின் வேர்கள் பற்றியும் விவாதங்கள் எழுந்துள்ளன. ``இந்தியை நாட்டின் தொடர்பு மொழியாக்குதல்'' பற்றி சமீபத்தில் அமித்ஷா பேசிது, இந்த நாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் மற்றும் அவற்றின் வேர்கள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இன்டிக் மொழிகள் மற்றும் அதன் வேர்கள் பற்றி இப்போது தான் அறிவியல்பூர்வமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய விவாதங்களின் பின்னணியில், முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இன்டிக் மொழிகள் மற்றும் அவற்றின் வேர்கள் பற்றி பின்வரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

படக்குறிப்பு,

சிந்து நாகரிக மக்களின் மொழி மற்றும் அவர்களுடைய மூதாதையரின் வேர்கள் ஆகியவை பற்றி ஆதாரபூர்வமாக இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. இந்த விஷயம் குறித்து விவாதங்களும், ஆட்சேபங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன.

இன்டிக் மொழிகளும் மொழியியல் புரட்சியும்

16 ஆம் நூற்றாண்டு வரையில் இன்டிக் மொழிகள் மற்றும் அதன் வேர்கள் பற்றி குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி எதுவும் நடைபெறவில்லை. வேதங்கள் தொகுக்கப்பட்ட மொழியாகக் கருதப்படும் சம்ஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்துக்கும் பழமையானது என்று பொதுவாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால் 16ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், இன்டிக் மொழிகளுக்கும், கிரேக்கம், லத்தீன், பெர்சியன், ஜெர்மன் மற்றும் பிற மொழிகளுக்கு இடையில் உள்ள தொடர்புகளை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, தங்கள் ஆய்வைத் தொடங்கினர்.

அப்போதைய வங்காள உச்சநீதிமன்ற நீதிபதியும் மொழியியல் அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் அதுபோன்ற ஓர் ஆராய்ச்சியாளர். 1786 ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த ராயல் சொசைட்டி ஆஃப் இந்தியா நிகழ்ச்சியில் இன்டிக் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு இடையிலான உறவுகள் என்ற தலைப்பில் பேசிய அவர், இந்த அனைத்து மொழிகளும் ஒரே ஆதாரத்தில் இருந்து தான் உருவாகியிருக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் தாமஸ் யங் என்ற மற்றொரு ஆராய்ச்சியாளர் இந்த மொழிகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ததில், ``மேற்கு ஐரோப்பாவில் இருந்து வடக்கு இந்தியாவுக்கு இவை பரவியிருக்கும் என்றும், ஒரே தொகுப்பை ஆதாரமாகக் கொண்டவையாக இருக்கும் என்றும் கூறினார். இவற்றுக்கு `இந்தோ-ஐரோப்பிய' மொழிக் குடும்பம் என அவர் பெயரிட்டார்.

படக்குறிப்பு,

ராபர்ட் கால்டுவெல் (வலது ) மற்றும் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி (இடது) ஆகியோர் திராவிட மொழிகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர்)

திராவிட மொழி குடும்பத்தைக் கண்டறிதல்

இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இருந்து திராவிட மொழிகள் முழுமையாக வேறுபட்டவை என்றும், அவை வேறு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அடையாளம் கண்டறிந்த முதலாவது மொழி அறிஞர் ராபர்ட் கால்டுவெல். அவற்றுக்கு அவர் `திராவிட' மொழி குடும்பம் என அவர் பெயரிட்டார்.

உண்மையில், வில்லியம் ஜோன்ஸ் 1786ல் `இந்தோ-ஐரோப்பிய' மொழிகள் பற்றிப் பேசியதற்கு 30 ஆண்டுகள் கழித்து, 1816ல் ஆங்கிலேயே நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் ``தெலுங்கு மொழி பற்றிய ஆய்வேடு'' என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் தனிப்பட்ட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வு செய்வதாக அந்தக் கட்டுரை இருந்தது.

அதன்பிறகு, 12 திராவிட மொழிகளை ஒப்பீடு செய்து ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகள் குறித்த தனது புரட்சிகரமான ஆராய்ச்சி அறிக்கையை 1856ல் வெளியிட்டார். தென்னிந்தியர்களையும், அவர்களுடைய மொழியையும் - பிரதானமாக தமிழர்களை - `திராவிடர்கள்' என்று சம்ஸ்கிருத மொழி அறிஞர்கள் குறிப்பிடுவதை அவர் விளக்கியுள்ளார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தை அதே பெயரில் தாமும் குறிப்பிடுவதாக அவர் கூறியுள்ளார்.

திராவிட மொழிகள் பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சி மேற்கொண்டவர்களில், தெலுங்கு அறிஞர் பேராசிரியர் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அவர் பணியாற்றியுள்ளார். `திராவிட மொழிகள்' என்ற அவருடைய புத்தகம், திராவிட மொழியியல் ஆராய்ச்சிக்கான அடித்தளமாகக் கருதப்படுகிறது.

இந்த மொழியியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இன்டிக் மொழிகள் பல்வேறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டன.

121 முக்கிய மொழிகள் - 5 குடும்பங்கள்

அரசு வெளியிட்டுள்ள மொழி கணக்கெடுப்பின்படி, இந்திய மக்களில் 99.85 சதவீதம் பேர் 121 மொழிகளைப் பிரதானமாகப் பேசுவதாகவும், இந்தப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களின் தாய்மொழிகள் ஐந்து வெவ்வெறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்திலும் இந்திய மக்கள் தொகை இணையதளத்திலும் உள்ளன.

அளிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, பின்வருபவைதான் அந்த பிரதானமான 5 மொழிக் குடும்பங்கள் மற்றும் அந்தக் குடும்பங்களுக்கு உள்பட்ட மொழிகளுமாக உள்ளன.

1.இந்தோ-ஐரோப்பிய குடும்பம்: இந்தக் குடும்பத்தில் இந்தோ-ஆரியன், ஈரானியன், ஜெர்மானிக் பிரிவுகள் இந்தியாவில் உள்ளன. அவை -

a) இந்தோ-ஆரியன் பிரிவு: 1. அசாமி, 2. பெங்காலி, 3. பிலோடி, 4. விஷ்ணுப்ரியா, 5. டோக்ரி, 6. குஜராத்தி, 7. ஹலாபி, 8. இந்தி, 9. காஷ்மீரி, 10. கான்டேஷி, 11. கொங்கணி, 12. லஹின்டா, 13. மைதிலி, 14. மராத்தி, 15. நேபாளி, 16. ஒடியா, 17. பஞ்சாபி, 18. சம்ஸ்கிருதம், 19. ஷினா, 20. சிந்தி, 21. உருது.

b)ஈரானியன் பிரிவு : 1. ஆப்கானி / காபூல் / பாஷ்ட்டோ

c) ஜெர்மானியம் பிரிவு: 1. ஆங்கிலம்

2. திராவிடக் குடும்பம்: 1. கூர்கி / குடகு, 2. கோண்டி, 3. ஜடப்பு, 4. கன்னடம், 5. கோண்ட் / கோந்த், 6. கிசன், 7. கொலமி, 8. கோன்டா, 9. கோயா, 10 குயி, 11. குருக் / ஒரான், 12. மலையாளம், 13. மால்ட்டோ, 14. பர்ஜி, 15. தமிழ், 16. தெலுங்கு, 17. துளு.

3. ஆஸ்ட்ரோ-ஆசியாடிக்: 1. பர்மியம், 2. கடபா, 3. ஹோ, 4. ஜுவாங், 5. காரியா, 6. காசி, 7. கோன்டா/கொரா, 8. கொர்க், 9. கொர்வா, 10. முன்டா, 11. முன்டாரி, 12. நிகோபாரிஸ், 13. சந்தாலி, 14. சவரா.

4. திபெத்தோ-பர்மியம்: 1. பழங்குடியினர் மொழிகள் பட்டியலில் போடோ மற்றும் மணிப்புரியுடன் சேர்த்து, காரோ, குக்கி, லடாக்கி, ஷெர்பா, திபெத்தியன், திரிபுரி மறறும் 66 பிற மொழிகள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

5.செமிட்டோ-ஹமிட்டிக்: அரபிக் / அரபி

`இந்தோ - ஐரோப்பிய' மொழிகளின் வேர்கள்

இந்தியாவில் பெரும்பகுதி மக்கள், அதாவது மக்கள் தொகையில் 78 சதவீதம் பேரால் பேசப்படும் இந்தி மொழியும், 21 வேறு மொழிகளும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இந்தோ-ஆரியன் தொகுப்பைச் சேர்ந்தவை.

இனக்குழுவியல் இணையதளத்தின் தகவலின்படி பார்த்தால், இப்போது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் 8 பிரிவுகள், பல துணைப் பிரிவுகளும், 448 மொழிகளும் உள்ளன. தொன்மையான கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருத மொழிகளுடன், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் இந்தி மொழிகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன.

இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் ஆரியர்கள் வடமேற்கு திசையில் இருந்து சுமார் 1500 BC காலத்தில் இந்தியாவுக்குள் வந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் இதைத்தான் தெரிவிக்கின்றன.

``பெருமளவில் மக்களும், இனக் குழுக்களும் இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு வந்ததால், பல இனக் குழுக்கள் இங்கே உருவாகியிருக்க வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் (அநேகமாக டாச்சாரியன்கள்) 3800 ஆண்டுகளுக்கு முன்பு வரத் தொடங்கியிருக்கலாம். மேலும், சுமார் 1000 ஆண்டுகள் (அல்லது அதைவிட அதிகம்) முன்னதாக இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள், யூரல் குன்றுகளுக்கு தெற்கே , கருங்கடலுக்கு வடக்கே, கஜகிஸ்தானுக்கு மேற்கே உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இடம்பெயர்ந்து, இறுதியாக தெற்குப் பகுதிக்கு வந்து, (அனுமானத்தின்படி) திராவிடர்களுடன் அல்லது தெற்காசியப் பிராந்தியத்தில் பூர்வகுடி மக்களுடன் கலந்திருக்கலாம்'' என்பதாக இணையதளத்தின் தகவல் விவரிக்கிறது.

சம்ஸ்கிருதம்-இந்தி

இந்தோ-ஆரியன் மொழிகளைப் போல இந்தியும் வேதகால சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிறந்துள்ளது. இந்த வழிமுறை பின்தொடர்ச்சிகள் மற்றும் ஆதிக்கத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

கி.மு. 1500 -க்கு முன்பிருந்து வேதகால சம்ஸ்கிருதம் புழக்கத்தில் இருந்துள்ளது என்று மொழி அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். முதலாவது வேதமான ரிக் வேதம் அந்த காலகட்டத்தில்தான் எழுதப்பட்டிருக்கும் என்றும், இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்கு பிராந்தியத்தில் அது எழுதப்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மொழியில் உரையாடியுள்ளனர். வேத கால சம்ஸ்கிருதம், காலப்போக்கில் மாற்றம் கண்டு கி.மு. 250ல் வேத மொழியாகவே மாறியது என்று மத்திய இந்தி இயக்குநரக ஆவணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காலம் அது இலக்கிய மற்றும் நிர்வாக மொழியாக இருந்துள்ளது. பிறகு அது வேத விளக்கவுரைகளுக்கான மொழியாகிவிட்டது.

இதற்கு மாறாக, மக்களால் பெருமளவு பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கி.மு. 500ல் முதன்மை இடம் பிடித்தது. புத்த மற்றும் ஜைன மதத்தவர்கள் தங்களுடைய போதனைகளை பிராகிருத மொழியில் எழுதினர். கி.மு. 268 முதல் கி.மு. 232 வரையில் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்த அசோக மன்னர், தனது தகவல்களை வெளியிட பிராகிருத மொழியைப் பயன்படுத்தியுள்ளார். கிமு.100 - கி.பி.100க்கு இடைப்பட்ட காலத்தில் பிராகிருதத்தின் இடத்தை சம்ஸ்கிருதம் பிடித்தது.

கி.பி. 400-ல் பிராகிருதத்தின் பேச்சு வழக்கான அபபிரம்சா முதன்மை இடத்துக்கு வந்தது. 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்த அபபிரம்சா பேச்சு மொழியில் இருந்து இந்தி உருவானது. இருந்தாலும், அப்போது அது இந்தி என பெயரிடப்படவில்லை. 13ம் நூற்றாண்டில் கவிதைகளை `ஹெயின்டவி' மொழியில் எழுதியதாக முகலாயர்களின் அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ரூ கூறியுள்ளார்.

அதற்கு முன்பு இன்டஸ் மக்களை - `சிந்து' நதிக்கு கிழக்கே வாழும் மக்களை - குறிப்பிடுவதற்கு `இந்தி' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த வார்த்தைக்கான வேர் பெர்சிய மொழியில் உள்ளது. பெர்சிய மொழியில் `இந்தி' என்பது இப்போதைய `இந்தியர்' என்பதைக் குறிப்பதாக உள்ளது.

இந்துஸ்தானி - இந்தி - உருது

ஆனால், இப்போதைய வட இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. எனவே அப்போதைய பிராகிருத மொழியில் பாரசீக மற்றும் அரபிக் மொழிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. சம்ஸ்கிருதம், பிராகிருதம், பாரசீக மற்றும் அரபி மொழிகளை கலவையாக்கி இந்துஸ்தானி மொழி உருவாக்கப்பட்டது.

டெஹ்லாவி மொழி - பிராகிருதத்தின் பேச்சு மொழி - ஆட்சியாளர்களின் அப்போதைய தலைநகரிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் பரவலாகப் பேசப்பட்டது. இந்த மொழி கடிபோலி என்றும் கூறப்படுகிறது. தரப்படுத்தப்பட்ட மொழி என்று அதற்கு பொருள்.

கடிபோலி என்பது ஒருபுறம் இந்தி எனவும், மறுபுறம் உருது என்றும் கருதப்பட்டதாக மொழி அறிஞர்கள் கூறுகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் தேசிய மொழியாக இந்துஸ்தானி தான் இருக்க வேண்டும் என்று, சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் காந்தியும் ஜவஹர்லால் நேருவும் கருதியதற்கு இந்தப் பின்னணிதான் காரணமாக இருந்தது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் தேசிய மொழியாக உருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது.

``இந்தியும், உருதுவும் ஒரே மொழியின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட துணை பேச்சு மொழிகளின் வேறுபட்ட இலக்கிய நடை கொண்டவை, சாதாரண நடையில் கூறினால், இரண்டுமே ஒன்றுதான். பயன்பாட்டிலும் உச்சரிப்பிலும் சிறிய வேறுபாடுகள் உண்டு. இந்தியானது தேவநாகரியில் எழுதப்படுகிறது. உருது பெர்சோ-அராபிக் வரி வடிவில் எழுதப்படுகிறது. அவ்வளவுதான்.''

மத்திய இந்தி இயக்குநரக ஆவணங்களில், துருக்கி, பெர்சிய, அராபி, போர்ச்சுக்கீசிய, ஆங்கில மற்றும் திராவிட மொழிகளுடன் இந்தியும் செம்மையானது தான் என்று கூறப்படுகிறது.

திராவிட முன்னோடி மொழியின் வேர்கள்

இரண்டாவது பெரிய மொழிக் குடும்பமாக திராவிட மொழிக் குடும்பம் உள்ளது. இந்தக் குடும்பத்தில் உள்ளவற்றில் 25 மொழிகள் இந்தியாவில் பேசப்படும் நிலையில், இதே குடும்பத்தைச் சேர்ந்த பிராஹுயி மொழி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுகிறது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னோடி மொழி பேசிய மக்கள் வடமேற்கு திசையில் இருந்து இந்திய துணைக் கண்டத்துக்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும் அவர்கள் தான் சிந்துவெளி நாகரிக பகுதியில் வசித்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும், `திராவிட மொழிகள்' என்ற தனது புத்தகத்தில், இவை அனைத்துமே அனுமானங்கள் தான் என்றும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். ஏற்புடைய கோட்பாடு இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், திராவிட மொழி பேசியவர்கள் இந்திய துணைக் கண்டம் முழுக்க கி.மு. 3500 வாக்கில், அதாவது 5,500 ஆண்டுகளுக்கு முன்பு பரவி இருந்தார்கள் என்ற கருத்தை மொழி அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர். இப்போதைய திராவிட மொழிகள், இந்திய துணைக் கண்டத்தின் பூர்விக கால மொழிகளாகக் கருதப்படுகின்றன.

ஆரியர்கள் இந்திய துணைக் கண்டத்தில் கி.மு. 1500ல் நுழைந்து இங்கு திராவிடர்களுடன் கலந்துவிட்டனர் என்று பெரும்பாலான மொழியியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சம்ஸ்கிருத வேதங்களில், திராவிட வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதை அவர்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இருந்தபோதிலும், ஆரியர்கள் திராவிடர்கள் என்பதன் மூலம் மொழிக் குடும்பங்களைத் தான் குறிப்பிடுகிறோமே தவிர, இனக் குழுக்களைக் குறிப்பிடவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆரிய மொழி வருகையால், திராவிட மொழி பேசிய பலரும் ஆரிய சமூகத்தில் அங்கமாக மாறிவிட்டனர் என்றும், ஆரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிடர்கள் படிப்படியாக கிழக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்துவிட்டனர் என்று மொழி அறிஞர்கள் கோட்பாடாகக் கூறியுள்ளனர்.

திராவிட முன்னோடி மொழி - பிரிவுகள்

இன்றைக்கு அறியப்பட்ட நிலையில் 26 திராவிட மொழிகள் உள்ளன என்று தனது `திராவிட மொழிகள்' புத்தகத்தில் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

திராவிட முன்னோடி மொழி 5000 ஆண்டுகளுக்கு முன்பு 4 பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. அவை a) தெற்கு திராவிடம், b) தென் மத்திய திராவிடம், c) மத்திய திராவிடம், d) வடக்கு திராவிடம்.

அவருடைய ஆய்வின்படி, தெற்கு திராவிட மற்றும் தென் மத்திய திராவிட உட்பிரிவுகள் ஒரே தென் திராவிடம் என்ற முன்னோடி பிரிவில் இருந்து பிரிந்தவை என கூறப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிகள், தென் திராவிட பிரிவில் இருந்து உருவானவை என்றும், தென் மத்திய திராவிடப் பிரிவில் இருந்து தெலுங்கு உருவானது என்றும் அவர் கூறியுள்ளார்.

1.தெற்கு திராவிடம்: தமிழ், மலையாளம், இருளா, குரும்பா, குடகு, தோடா, கோடா, படுகா, கன்னடா, கொரகா, துலா.

2.தென் மத்திய திராவிடம்: தெலுங்கு, கோன்டி (பல்வேறு பேச்சு மொழிகள்), கோன்டா, குயி, குவி, பெங்கோ, மன்டா

3.மத்திய திராவிடம்: கொலாமி, நாய்க்ரி, நாய்க்கி, பார்ஜி, ஒல்லாரி, கடபா

4.வடக்கு திராவிடம்: குருக், மால்ட்டோ, பிராஹுயி.

படக்குறிப்பு,

பாட்டிபுரோலு வெட்டெழுத்துகள்

வடக்கு திராவிடப் பிரிவுக்குச் சொந்தமான பிராஹுயி மொழி இப்போது பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண மக்களால் பேசப்படுகிறது. குருக் மற்றும் மால்ட்டோ மொழிகள் வட இந்தியாவில் தொலைதூரத்தில் உள்ள மக்களால் பேசப்படுகிறது.

தமிழ் - தெலுங்கு

கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட அயிட்ரேய பிரஹ்மனாவில் ஆந்திரா மற்றும் சபாரா பழங்குடியின பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளதாக தனது புத்தகத்தில் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். டிரமிலா (பழங்கால தமிழ்) மற்றும் ஆந்திரா (பழங்கால தெலுங்கு) மொழிகள் பற்றி கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அயிட்ரேய பிரஹ்மனா தொகுக்கப்பட்டதற்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு - அதாவது கி.மு. 11வது நூற்றாண்டில் - தெற்கு திராவிட மொழி (பழங்கால தமிழை பிரதான மொழியாகக் கொண்டது) மற்றும் தென் மத்திய திராவிட மொழி (பழங்கால தெலுங்கை பிரதான மொழியாகக் கொண்டது) ஆகியவை பிரிந்திருக்க வேண்டும் என்று அவர் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதேபோல கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அந்தப் பிரிவில் வேறு மொழிகளில் இருந்து பழங்கால தமிழ் மொழி பிரிந்து வந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆரம்பகால தமிழ் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவானது என்று அவர் உறுதிப்படுத்துகிறார். தமிழில் அனைத்து இலக்கியங்களும் அதற்குப் பிறகு தான் தொகுக்கப்பட்டுள்ளன என்கிறார். கி.பி. 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மலையாளம் தனி மொழியாக உருவாகியுள்ளது என்று அவர் கூறுகிறார்.

`தெலுங்கு மொழியின் வரலாறு' என்ற தனது புத்தகத்தில், தென் மத்திய திராவிட பிரிவில் இருந்து தெலுங்கு மொழி எப்போது பிரிந்தது என்பதைக் கூற முடியாது என்றாலும், தனி மொழியாக தெலுங்கு உருவானது கி.மு. 5 - 6 நூற்றாண்டு காலத்தில் தான் நடந்துள்ளது என்று கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

குண்டூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பாட்டிபுரோலு வெட்டெழுத்துப் படிமங்கள் கி.மு.4 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்றும், இந்தப் படிமத்தில் காணப்பட்ட முதல் மொழி தெலுங்கு தான் என்றும், இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளர் டி. ஜிதேந்திர தாஸ் 2007ல் கூறியுள்ளார்.

திராவிட மற்றும் இந்தோ-ஆரிய மொழிகளின் சங்கமம்

கி.மு. 500 மற்றும் அதை ஒட்டிய காலத்தில் இந்திய துணைக் கண்டத்துக்கு வந்த ஆரியர்கள், அப்போது பெரும்பான்மையினராக இருந்த திராவிடர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக் வேதத்தில் திராவிட வார்த்தைகள் இடம் பெறுவதற்கு இது வழிவகுத்துள்ளது என்று தனது புத்தகத்தில் பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

வடக்கில் வசித்து வந்த திராவிட சமுதாயத்தினரில் சிலர் ஆரிய சமூகத்தில் ஒரு அங்கமாக மாறி, இந்தோ-ஆரிய மொழிகளை பயன்படுத்தினர் என்று அவர் விவரித்துள்ளார்.

"வேதங்கள் தொகுக்கப்பட்ட சமயத்தில் மிக பழமையான மற்றும் புதிய சம்ஸ்கிருத மொழிகள் உருவெடுக்கத் தொடங்கிவிட்டன'' என்று மகாதேவ் எம். தேஷ்பாண்டே தனது ``இந்தியாவில் சமூக - மொழியியல் போக்கு'' என்ற நூலில் கூறியிருப்பதாக பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். பாலி, பிராகிருதம் போன்ற பேச்சு மொழிகள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வாக்கில் முதன்மை இடம் பிடிக்கத் தொடங்கின. புத்த மற்றும் ஜைன மன்னர்களின் ஆதரவுடன் பிராகிருத உச்சத்தை எட்டியது. பிராகிருதி மொழி மேலே வந்ததை அடுத்து, முதன்மை இடத்தை சம்ஸ்கிருதம் இழந்துவிட்டது. பதஞ்சலி காலத்தில் (கி.மு. 1 ஆம் நூற்றாண்டு), பிராகிருதி முதன்மை மொழியாகிவிட்டது. இறுதிச் சடங்குகள் செய்வதற்கான மொழியாக சம்ஸ்கிருதம் நீடித்தது என்று மகாதேவ் எம். தேஷ்பான்டே நூலை மேற்கோள் காட்டி பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார்.

ஆரிய மொழி அல்லாத மொழிகளைப் பேசும் மக்கள் (குறிப்பாக திராவிட மொழிகள் பேசுபவர்கள்) ஆரிய சமூகத்துடன் கலந்து, அந்த மொழிகளை தங்கள் மொழியாக ஏற்றுக் கொண்டதால், ஒரு நூற்றாண்டுக்குள் அவ்வளவு வேகமாக மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவ்வளவு வேகமாக மாற்றம் ஏற்பட்டிருக்காது என்று பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும், ஆரிய மொழிகளை அவ்வளவு சரியாக திராவிட மொழி பேசுபவர்களால் கற்றுக் கொள்ள முடியாத காரணத்தால், பல்வேறு பிராந்திய பிராகிருத மொழிகள் உருவாயின என்றும் அவர் கூறுகிறார்.

ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் மொழிகள்

ஆஸ்திரிக் மொழிக் குடும்பம் ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் மற்றும் ஆஸ்ட்ரோனேசிய பிரிவுகளாகப் பிரிந்துள்ளது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆவணம் தெரிவிக்கிறது. ஆஸ்ட்ரோ - ஆசியாட்டிக் பிரிவு, மேலும் மூன்று உட்பிரிவுகளாக - முன்டா, மோன்-கிமர் மற்றும் வியட்நாமிய முவாங் என பிரிந்துள்ளது. அவற்றில் முன்டா மொழி இந்தியாவில் பேசப்படுகிறது.

சந்தாலி, முன்டாரி, பூமிஜ், சவரா உள்ளிட்டவை முன்டா மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த மொழிகளைப் பேசுபவர்கள் பெரும்பாலும் வனங்களிலும், மலைகளிலும் வாழ்கின்றனர்.

திபெத்தோ-பர்மிய மொழிகள்

திபெத்தோ-பர்மிய மொழி சைனோ-திபெத்திய மொழி குடும்பத்தின் பிரிவாக உள்ளது. இது வடக்கே திபெத்தில் இருந்து தெற்கே பர்மாவுக்கும், ஜம்மு காஷ்மீரில் லடாக்கில் இருந்து தெற்கே சீனாவின் கிழக்கில் யுனானுக்கும் பரவியுள்ளது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஆவணம் தெரிவிக்கிறது.

வடகிழக்கில் பேசப்படும் லெப்ச்சா, சிக்கிமிஸ், காரோ, போடோ, மணிப்புரி, நாகா போன்ற மொழிகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

ஆப்ரோ-ஆசியாட்டிக் மொழிகள்

செமிட்டோ - ஹமிட்டிக் என்ற இந்த மொழிக் குடும்பத்தில் இருந்து உருவான அராபிக் போன்ற மொழிகளும் இந்தியாவில் பேசப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :