வானவில் ரேவதி: கெளதம் வாசுதேவின் உதவி இயக்குநர் பூம் பூம் மாட்டுக்கார குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கிய கதை #iamthechange

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பூம்பூம் மாட்டுக்கார சமூகத்திற்காக பள்ளி நடத்தும் வானவில் ரேவதியின் கதை #iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் மூன்றாவது அத்தியாயம் இது.)

அவர் விருப்பத்தின் வழியில் சென்று இருந்தால், இந்நேரம் ஒரு திரைப்படத்தை இயக்கி இருப்பார். இதழியல் துறையிலேயே சிறப்பாக இயங்கிய அவர் அந்த திரைப்படங்களுக்காக விருதுகளைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு புள்ளியில் திரைத்துறை தந்த அனைத்து சௌகரியங்களையும் உதறிவிட்டு ஆதியன் சமூக குழந்தைகளுக்காகச் செயல்படத் தொடங்கிவிட்டார். ஆதியன் சமூகம் என்றால் உங்களுக்குப் புரியாமல் போகலாம். எல்லாருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் பூம் பூம் மாட்டுக்கார சமூகம்.

அவர் 'வானவில்' ரேவதி.

கோடம்பாக்கத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு

இதழியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ரேவதி, பின்னர் பெண்களின் பிரச்சனைகள் குறித்து காட்சி மொழியில் பேச வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்குச் சென்றிருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்திருக்கிறார்.

தமிழகத்தையே புரட்டிப் போட்ட சுனாமிதான் ரேவதியின் வாழ்வையும் மாற்றி அமைத்திருந்திருக்கிறது.

சுனாமிக்குப் பிறகு நாகப்பட்டினத்திற்கு ஒரு தன்னார்வலராகச் சென்றவருக்கு அங்கு நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன.

அவரே சொல்கிறார், "சுனாமி ஊரின் வடிவத்தையே மாற்றி இருந்தது. எல்லா திசையிலிருந்தும் அழுகுரல்கள். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் அங்கு நிலவிய சாதிய பாகுபாடு என்னை அதிர்ச்சி அடையச் செய்தது" என்கிறார்.

"உதவிப் பொருட்கள் வந்து குவிந்தன. ஆனால், அது எதுவும் விளிம்பு நிலை சமூகமான ஆதியன் சமூகத்திற்குச் சென்று சேரவே இல்லை. அவர்களை யாரும் சக மனிதர்களாகக் கூட பாவிக்கவில்லை" என்று அப்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார் அவர்.

"நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நான் பார்த்த இரு காட்சிகள் எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. வறுமையில் உழலும் சில ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளின் புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம் தானே? அப்படியான ஒரு குழந்தையை நான் நேரில் பார்த்தேன். இரக்கம் என்பதையெல்லாம் கடந்து எனக்கு குற்ற உணர்வுதான் ஏற்பட்டது. எல்லா செளகர்யங்களுடன் நான் வாழும் அதே சமூகத்தில் ஒரு இனம் எதுவும் இல்லாமல் வாழ்வது அதிர்ச்சியடையச் செய்தது. அந்தப் புள்ளிதான் என் வாழ்க்கையையே மாற்றியது" என்று தெரிவிக்கிறார் ரேவதி

இயக்குநர் கெளதம் வாசுதேவுக்கு கடிதம்

அந்த சம்பவத்தைக் கண்ட பின் கெளதமுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ரேவதி.

அதில், "என்னால் இந்தப் படத்தில் பணியாற்ற முடியாது. இந்த ஒரு படத்தில் நான் பணியாற்றவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. ஆனால், இப்போது நான் சந்தித்த மக்களை நான் அப்படியே விட்டுவிட்டு வந்தால் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வு துரத்தும்" என்று எழுதி இருந்தேன்.

கெளதமும் புரிந்து கொண்டார்.

வானவில் பள்ளி

"பின் அந்த பூம் பூம் மாட்டுக்கார குழந்தைகளுக்காக ஒரு இணைப்பு பள்ளி தொடங்கினோம். முழு நேர பள்ளியாகலெல்லாம் இயங்கவில்லை. அவர்களுக்குக் கல்வி குறித்த புரிதலை ஏற்படுத்தி, அடிப்படையான பயிற்சிகளை அளித்து அரசுப் பள்ளியில் சேர்த்தோம். ஆனால், பள்ளியில் விட்டுவிட்டு நாங்கள் வீடு திரும்புவதற்கு முன்பே அந்தக் குழந்தைகள் வீடு திரும்பி இருப்பார்கள். மைய சமூகத்திற்கும், ஆதியர்களுக்கும் இருக்கும் தொலைவை ஒரு சின்னப் பாலத்தால் மட்டும் ஏதும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து வானவில் பள்ளி தொடங்கினோம்" என்கிறார்.

இப்போதும் அந்தக் குழந்தைகளைப் பள்ளியை நோக்கி ஈர்ப்பது பெரும் சவாலாக இருப்பதாகக் கூறும் ரேவதி, பெரும் பிரச்சனையா இருந்தது குழந்தை திருமணம்தான் என்கிறார்.

அவர், "பல்லாண்டுகளாக அந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அது தவறு என்ற எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை. அதனைத் தடுத்து நிறுத்துவதுதான் பெரும் சவாலாக இருந்தது. இப்போதும் அதிலும் கொஞ்சம் வெற்றி கண்டிருப்பதாக நான் நம்புகிறோம். எங்களிடம் படித்த பிள்ளைகள் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள்" என்று தெரிவிக்கிறார்.

மாற்று வழிக் கல்வி

இவற்றை எல்லாம் கடந்து எந்தக் கட்டணமும் வாங்காத ஒரு மாற்றுப் பள்ளியாகத்தான் வானவில் பள்ளி இயங்குகிறது. வெறும் கட்டடங்களுக்குள் மட்டும் இயங்காமல் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வது, சமூக அரசியலைக் கற்பிப்பதென, அரசு பாடத்திட்டத்துடன் அந்தப் பிள்ளைகளுக்குத் தேவையான சமூக கல்வியையும் அளிப்பதாகக் கூறுகிறார் 'வானவில்' ரேவதி.

"அவர்களுக்கென ஒரு மரபு தொடர்ச்சி இருக்கிறது. அதனையும் நாம் கெடுத்துவிடக் கூடாது. அதே சமயம் மைய சமூகத்துடன் அவர்கள் இணைக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறுதான் நாங்கள் கல்வியை வழங்குகிறோம்" என்று கூறுகிறார் ரேவதி.

அதுமட்டுமல்ல, மாற்றுப் பள்ளி என்பதெல்லாம் இங்குப் பணக்காரர்களுக்கானதாக இருக்கிறது. அதை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தாம் பணியாற்றுவதாகக் கூறுகிறார் அவர்.

கல்வி மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வியை கயிறாக பற்றித்தான் மேல் எழ முடியும். கல்வி மட்டுமே வழி. கல்வி மட்டுமே தீர்வு. ஆதியன் மக்கள் வசிக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பள்ளியை விரிவுபடுத்துவதுதான் தம் நோக்கம் என்கிறார் அவர்.

ஜியோ-வில் இருந்து பிற நெட்வொர்க் எண்ணை அழைத்தால் இனி 6 பைசா கட்டணம் - காரணம் என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்