காஷ்மீர் முடக்கம் பொருளாதாரத்தை நெரிப்பதால் தீவிரமாகும் சோகங்கள்

ஆப்பிள் தோட்டம். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிள் தோட்டங்கள்.

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் முடக்கப்பட்ட நிலை காரணமாக அந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரம் இரண்டு மாதங்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிபிசி இந்தி பிரிவின் வினீத் கரே அளிக்கும் செய்தி.

அரசு அதிகாரிகளிடம் இருந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் ``பாதுகாப்பு அறிவுறுத்தல்'' வந்தது முஸ்தாக் சாய் -க்கு நினைவிருக்கிறது. உள்ளூரில் குறிப்பிடத்தக்க வணிகராக இருக்கும் அவருக்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்திய நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீர் பகுதியில் பல ஹோட்டல்கள் உள்ளன.

``பயங்கரவாத அச்சுறுத்தல்'' இருப்பதாக கூறி, சுற்றுலாப் பயணிகளும், இந்து புனித யாத்ரிகர்களும் ``தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு கூடிய சீக்கிரம் வெளியேற வேண்டும்'' என்று அந்த அறிவுறுத்தல் இருந்தது என்று முஸ்தாக் தெரிவிக்கிறார்.

மற்ற பலரையும் போல சாய் இந்த அறிவுறுத்தலை தீவிரமானதாக எடுத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரில் அனந்த நாக் மாவட்டத்தில் முக்கிய இந்து புனிதத் தலமான அமர்நாத் குகைக்கு சென்று விட்டு திரும்பிய இந்து யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்ரிகர்கள் கொல்லப்பட்டனர்.

``சுற்றுலாப் பயணிகளும், யாத்ரிகர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது காஷ்மீர் வரலாற்றில் இதுதான் முதல்முறை'' என்று சாய் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு அமலுக்கு இடையில் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.

சீக்கிரத்திலேயே உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் வந்து சேர்ந்துவிட்டனர். தங்களுடைய விருந்தினர்கள் பத்திரமாக உடனே வெளியேற சாய் மற்றும் அவருடைய அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சில நாட்களில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, தகவல் தொடர்பு முடக்கப்பட்ட நிலைக்கு ஆட்படுத்தியது.

இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், அங்குள்ள நிலைமை, இயல்பு நிலையை எட்டாமல் தள்ளியே உள்ளது. இன்டர்நெட் மற்றும் செல்போன் இணைப்புகள் இன்னும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. மக்களுக்கு போக்குவரத்து வசதி எளிதாகக் கிடைக்கவில்லை. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன - அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, இந்திய ஆட்சிக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் பலர் மூடியுள்ளனர்.

மாநிலம் முடக்கப்பட்ட பிறகு சுமார் 4,00,000 தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதால், இப்போது தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

700,000 மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய சுற்றுலா தொழில் முடங்கிவிட்டதால் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன என்பது பெரிய சோகமாக உள்ளது.

முடக்க நிலையால் நேரும் வேதனை

மத்திய அரசிடம் இருந்து `நிதித் தொகுப்பு அறிவிப்பு'' வரும் என்று எதிர்பார்ப்பதாக, மாநில அரசில், பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி கூறினார். ஆனால், இந்த முடக்க நிலையால் காஷ்மீர் பகுதியில் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன என்றும் காஷ்மீர் தொழில் வர்த்தக சபை கூறியுள்ளது.

தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலும் காலியாக உள்ள தனது ஹோட்டலில் அமர்ந்திருக்கும் சாய், ``பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் 3,000 ஹோட்டல்கள் உள்ளன. அவை அனைத்தும் காலியாக உள்ளன. அவை கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தினசரி செலவுகளை சமாளித்தாக வேண்டும்'' என்று கூறினார்.

ஆனால் வியாழக்கிழமையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளதால், வரும் நாட்களில் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

நூற்றுக்கணக்கான படகு இல்லங்கள் காலியாகக் கிடக்கின்றன.

ஆனால், ஹோட்டல்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளன என்று சொல்லிவிட முடியாது.

``இன்டர்நெட் இல்லை என்பது 5,000 டிராவல் ஏஜென்ட்கள் வேலையிழந்துள்ளனர் என்பதன் அர்த்தம்'' என்று டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் ஜாவித் அகமது கூறினார். ``இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள் என்று அரசு கூறுகிறது. நாங்கள் இளைஞர்கள், வேலை இல்லாமல் இருக்கிறோம். அரசியலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எங்களுக்கு வேலை வேண்டும்.''

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காலியாக கிடக்கும் நூற்றுக் கணக்கான படகு இல்லங்கள்.

ஸ்ரீநகரின் அடையாளச் சின்னமாக இருக்கும் சுமார் 1,000 படகு இல்லங்கள் காலியாகக் கிடக்கின்றன.

``ஒவ்வொரு படகு இல்லத்துக்கும் பராமரிப்புக்கு ஆண்டுக்கு 7,000 அமெரிக்க டாலர் வரை தேவை'' என்று காஷ்மீர் படகு இல்லங்களின் உரிமையைளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஹமித் வாங்னூ கூறுகிறார். ``பலருக்கு இதுதான் வாழ்வாதாரமே'' என்கிறார் அவர்.

மேலும் சுற்றுலா மட்டும் தான் பாதிக்கப்பட்டது என்றில்லை.

``கம்பளம் தயாரிக்கும் தொழிலில் 50,000 க்கும் மேற்பட்ட வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று தொழில் சபைத் தலைவர் ஷேக் ஆசிக் கூறுகிறார்.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் தான் ஏற்றுமதிக்கு கம்பள உரிமையாளர்களுக்கு ஆர்டர்கள் வரும் - குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரும். கிறிஸ்துமசை ஒட்டி அனுப்பி வைக்கும் வகையில் இந்த மாதங்களில் ஆர்டர் வரும் என்ரு அவர் தெரிவித்தார்.

ஆனால் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டிருப்பதால்,, இறக்குமதியாளர்களை, அல்லது தங்களுடைய அலுவலர்களையே கூட அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆப்பிள் தோட்டங்கள் பாதிப்பு

காஷ்மீரின் புகழ்பெற்ற ஆப்பிள் தோட்டங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தெற்கு காஷ்மீரில், அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற ஆப்பிள் தோட்டங்களில், பழங்கள் பறிக்கப்படாமல் மரங்கள் காத்திருக்கின்றன. ஆனால் கடைகள், குளிர்பதனக் கிடங்குகள் எல்லாமே மூடிக் கிடக்கின்றன. பிரதான ஆப்பிள் சந்தை காலியாக உள்ளது. கடந்த ஆண்டு அங்கு 197 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முடங்கிக் கிடக்கும்க காஷ்மீர்.

``மரங்களில் ஆப்பிள் பழங்கள் தொங்குவதைப் பார்த்து என் மனது வலிக்கிறது. அதனால் தோட்டத்துக்கே நான் செல்வது இல்லை'' என்று ஆப்பிள் தோட்டம் வைத்திருக்கும், பெயர் குறிப்பிட விரும்பாத பெண்மணி ஒருவர் கூறினார்.

``காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஆப்பிள்கள் 12 - 15 சதவீத பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டவை பறிக்கப்படவே இல்லை'' என்று பொருளாதார செய்தியாளர் மசூத் உசேன் தெரிவித்தார். ``அதேநிலை அக்டோபரிலும் தொடர்ந்தால், பேரழிவான பின்விளைவுகள் ஏற்படும்'' என்று அவர் கூறினார்.

ஸ்ரீநகரில் கடைகளுக்கு வெளியே சில உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். வாடிக்கையாளர் வந்தால் திறந்துவிட்டு, அவசர அவசரமாக கடையை மூடிவிடுகின்றனர் - அடுத்த வாடிக்கையாளர் வந்தால் திறக்கின்றனர்.

அரசின் முடிவால் தாம் அதிருப்தி அடைந்திருப்பதாக கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அவரும்கூட, கடையை மூடி வைக்க வேண்டும் என்று விரும்பும் உள்ளூர் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்.

``ஆனால் தினசரி வருமானம் இல்லாமல் நான் எப்படி உயிர்வாழ முடியும்'' என்று அவர் கேட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :