ஷி ஜின்-பிங் - மோதி சந்திப்பு: மாமல்லபுரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?

சீன அதிபர் ஷி ஜின்பிங் படத்தின் காப்புரிமை Pool
Image caption சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீன அதிபர் ஷி ஜின்-பிங் சென்னைக்கு வருவதையொட்டி சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகைக்கான ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

சீன அதிபர் ஷி ஜின்-பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமையன்று சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்லும் ஷி ஜின்-பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாமல்லபுரத்திற்குச் செல்லும் வழியில் 34 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

மாலை 4.55 மணி அளவில் சீன அதிபர் மாமல்லபுரம் வந்தடைவார். அங்கு அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்கிறார். இதன் பிறகு இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில்கள் ஆகியவற்றை ஒன்றாகப் பார்வையிடுகின்றனர்.

மாலை 6 மணியளவில் கடற்கரைக் கோயிலிலேயே கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாலை 6.45 மணியளவில் இந்தியப் பிரமதர் சீன அதிபருக்கு விருந்து ஒன்றை அளிக்கிறார்.

அதற்கு அடுத்த நாள், சனிக்கிழமையன்று காலை 9. 50 மணியளவில் கோவளத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதியில் நரேந்திர மோதியும் ஷி ஜின்-பிங்கும் தனியே சந்தித்து உரையாடுகின்றனர். 10.50 மணியளவில் அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

11.45 மணியளவில் சீன அதிபருக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது. அந்த விருந்தை முடித்துக்கொண்டு 12.30 மணியளவில் சென்னைக்குப் புறப்படும் சீன அதிபர், ஒன்றரை மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து அவர் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

சீன அதிபருக்கு முன்பாகவே, அதாவது 12.30 மணியளவில் இந்தியப் பிரதமர் தில்லியிலிருந்து சென்னையை வந்தடைவார். 12.35க்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்குப் புறப்படுகிறார். 12.55க்கு கோவளத்தில் உள்ள ஹோட்டலில் தங்கும் அவர், மாலை 5 மணிக்கு சீன அதிபரை வரவேற்க மாமல்லபுரம் சென்றடைவார்.

சனிக்கிழமையன்று சீன அதிபரை வழியனுப்பிய பிறகு பிற்பகல் 2.05க்கு பிரதமர் நரேந்திர மோதி சென்னையிலிருந்து புறப்படுகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு காரணமாக சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 காவலர்கள் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீன அதிபர் ஷி ஜின்-பிங் தங்கவிருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஏழடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அதேபோல பிரதமர் நரேந்திர மோதி தங்கவிருக்கும் ஃபிஷர் மேன் கோவ் ஹோட்டலிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்வை ஒட்டி, மாமல்லபுரத்திலும் அதனைச் சுற்றியும் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் இரு நாட்களுக்கு காட்சிகளை ரத்துசெய்துள்ளன.

வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும் மாமல்லபுரத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SOUMYA SUMITRA BEHERA

சீன அதிபர் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு சாலை வழியாகச் செல்வதால் அவர் செல்லும் வழியெங்கும் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. விமான நிலையத்திலேயே சிறிய அளவில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, ஐடிசி ஹோட்டல் முதல் மாமல்லபுரம் வரை 32 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன.

விமான நிலையம் முதல் சீன அதிபர் தங்கும் ஹோட்டல் வரையிலான சென்னை ஜிஎஸ்டி சாலையின் இரு பக்கங்களிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையின் இரு புறங்களும் வண்ணம் தீட்டப்பட்டு, புதிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சீன அதிபர் சென்னை விமான நிலையத்தின் ஐந்தாவது வாயில் வழியாகத்தான் வெளியில் வருவார் என்பதால், அந்த வாயில் முன்பாக புதிதாக பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய, சீன தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. சென்னை முதல் மாமல்லபுரம் வரை சாலையின் நடுவில் புதிதாக மரங்கள் நடப்பட்டுள்ளன.

சீன அதிபரின் வாகனம் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு வரும் வழியிலும் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் தொடர்ச்சியாக வாகன ஓத்திகைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக சென்னையில் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களின் வருகையை ஒட்டி, சென்னையிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் பல இடங்கள் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இருக்காது என்பதால் பொதுமக்கள் அதற்கேற்றபடி தங்கள் பயணங்களைத் திட்டமிடும்படி காவல்துறை அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :