மோதி - ஷி ஜின்பிங்: ஐந்து மணி நேரம் நீடித்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் என்ன? - விரிவான தகவல்

மோதி - ஷி ஜின்பிங் படத்தின் காப்புரிமை @INDIANDIPLOMACY

இரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் மாமல்லபுரத்தில் வர்த்தகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் ஐந்து மணி நேரம் பேசியுள்ளனர்.

இந்த ஐந்து மணி நேரத்தில், கலாச்சார நிகழ்ச்சி நடந்த நேரம் தவிரப் பிற நேரங்கள் அனைத்தும் சீன அதிபரும் இந்தியப் பிரதமரும் தனித்தே பேசியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.

தன்னை வரவேற்கச் சென்னையில் செய்யப்பட்டிருந்த விரிவான ஏற்பாடுகளைக் குறிப்பாக விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் வெகுவாகக் கவர்ந்ததாக ஷி ஜின்பிங் கூறியதாக வெளியுறவுத் துறைச் செயலர் கூறினார்.

மாமல்லபுரத்தில் ஷி ஜின்பிங்கை அர்ச்சுனன் தபசு அருகில் வரவேற்ற இந்தியப் பிரதமர், அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் குறித்து விளக்கமளித்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

நீண்ட காலமாகவே தமிழ்நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவுகள் குறித்தும் தமிழகத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற போதி தர்மர் குறித்தும் மோதி குறிப்பிட்டுப் பேசினார்.

உலகப் பாரம்பரியச் சின்னமாக அறியப்படும் மாமல்லபுரத்தின் முக்கியத்துவம் குறித்தும் மோதி ஷி ஜின்பிங்கிடம் விளக்கினார். 13ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட கடற்கரைக் கோவில்கள் எப்படி தற்போதும் வழிபாடு நடத்தப்படும் கோவில்களாக இருக்கின்றன என்பதை மோதி ஷி ஜின்பிங்கிற்கு விளக்கினார்.

கடற்கரைக் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் நடந்த கலாச்சார நிகழ்வுகள் சீன அதிபரை வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சி முடிவடைந்ததும் அந்தக் கலைஞர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இரவு விருந்து நடைபெற்றது. இதில் சீன அதிபரும் இந்தியப் பிரதமரும் தனித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 150 நிமிடங்கள் நீடித்தது.

படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்புமே தங்கள் அரசு முக்கியத்துவம் கொடுக்கும் விவகாரங்கள் குறித்துப் பேசினர். குறிப்பாக வர்த்தக விவகாரங்கள், முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியின் அளவையும் மதிப்பையும் அதிகரிப்பது குறித்துப் பேசப்பட்டது.

பயங்கரவாதம், தீவிரவாதத்திற்கான ஆதரவு அதிகரிப்பது போன்ற இரு தரப்பு கவலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் வழியனுப்பிவைக்கச் சீன அதிபர் மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்குச் சாலை வழியே புறப்பட்டுச் சென்றார்.

சனிக்கிழமையன்று காலையில் மீண்டும் இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இதற்குப் பிறகு, இருதரப்பு அதிகாரிகள் பங்குபெறும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருக்கின்றன.

2014ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோதியும், ஷி ஜின்பிங்கும் இதுவரை 17 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

மோதி - ஷி ஜின்பிங் இன்றைய சந்திப்பு குறித்து விரிவாக படிக்க, காணொளியில் காண:

''நான் ஏன் தமிழ் கற்றேன்"? - சீனப் பெண் நிறைமதியுடன் பிரத்யேக நேர்காணல்

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :