அரசியல் ஆதாயத்திற்காக #gobackmodi ட்ரெண்ட் செய்வதை ஏற்க முடியாது: ஜிகே வாசன்

ஜி.கே.வாசன் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜி.கே.வாசன்

ஒவ்வொரு முறை இந்திய பிரதமர் மோதி தமிழகம் வரும்போதும் ட்விட்டரில் #gobackmodi ட்ரெண்ட் ஆவது போல சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போதும் நடைபெற்றது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் இதனை ட்ரெண்ட் செய்வதை ஏற்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக சென்னை வந்திருந்த இந்திய பிரதமர் மோதியை வரவேற்க தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வந்திருந்த நேரத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசனும் வரவேற்போர் மத்தியில் இருந்தார். ஜிகே வாசனிடம் கை குலுக்கிய மோதி, கடந்த முறை நீங்கள் வீட்டிற்கு வருவதாக சொன்னீர்கள், வரவில்லையே, கட்டாயம் வரவேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, மேடையில் சந்தித்தபோது, மோதியின் அழைப்புக்கு நன்றி கூறி, வருவதாக சொல்லியிருந்ததாகவும், அதனை மோதி நினைவுகூர்ந்து கேட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வாசன் தெரிவித்தார்.

மோதியுடன் உள்ள நட்புறவு குறித்து கேட்டபோது, ''பிரதமர் மோதி பல கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேசி வருபவர். என்னிடம் மறக்காமல் டெல்லிக்கு வரவேண்டும் என பேசியது நெகிழ்ச்சி. பிரச்சாரத்தின்போது பேசிய விவரங்களை நினைவில் வைத்திருக்கிறார் என்பது சிறந்த பண்பு. இதற்கு முன்னர் பொது மேடைகளில் சந்தித்திருக்கிறோம். அவர் டெல்லி திரும்பிய பின்னர், அவரை சந்திக்க செல்வேன்,'' என்றார் ஜிகே வாசன்.

படத்தின் காப்புரிமை GK VASAN / FACEBOOK

மோதியுடனான சந்திப்பு தமாகவிற்கு பலத்தை கூட்டுமா என கேட்டபோது, ''தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்தான் எங்கள் களம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பது எங்கள் இலக்கு. அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தலைவர் ஒருவரை நினைவுகூர்ந்து மோதி பேசியதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. இது ஒரு 'ஜென்டில்மேன் கெஸ்சர்' ,'' என்றார் வாசன்.

மேலும் மோதி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ட்விட்டரில் அவருக்கு எதிராக ட்ரெண்ட் ஆவது குறித்து கேட்டபோது, ''ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்க ஜனநாயகத்தில் இடம் உண்டு. ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக, தங்களது நோக்கத்திற்காக ட்ரெண்ட் செய்வது தவறு. மோதி மட்டுமல்ல எந்த அரசியல்தலைவரையும் திரும்பிபோ என ட்ரெண்ட் செய்வது தேவையற்றது. இதனால் எந்த லாபமும் இல்லை. மோதியின் வருகையின்போது அவருக்கு எதிராக ட்ரெண்ட் செய்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது,'' என்றார் வாசன்.

சீனா அதிபருடன் இந்திய பிரதமர் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது என்று கூறியஅவர், ''வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்பு நம் தமிழகத்தில் ஏற்படுத்தபட்டது என்பது நமக்கு பெருமை தரும் விஷயம். பல்லவர் காலத்தில் இருந்து சீனாவுக்கும், தமிழகத்திற்கும் வர்த்தக தொடர்பு இருந்தது. தற்போது இரண்டு நாட்டு தலைவர்களும் இங்கு வந்தது நம் மாநிலத்திற்கு, நம் தமிழ் மக்களுக்கு பெருமை,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்