ஷி ஜின்பிங் - மோதி சந்திப்பு: தமிழ்நாடு - ஃபூஜியன் மாகாணம் இடையே 'சகோதர மாநில' உறவு ஏற்படுத்த முடிவு

இந்தியா சீனா உறவில் விரிசலும், நட்பும் : விரிவான தகவல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டுக்கும் சீனாவின் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையில் சகோதர மாநில உறவு ஒன்றை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், ஷி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கும் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையிலான உறவு குறித்து ஆராய ஒரு கல்வி நிறுவனம் அமைக்கப்படும். ஏற்கனவே இந்தியாவின் அஜந்தா - சீனாவின் துன்ஹுவாங் இடையே இது போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவும் விரிவான தொடர்புகளை கணக்கில் கொண்டு கடல்சார் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய பொருளாதார கூட்டுறவு

இந்த பிராந்தியத்தில் வெளிப்படையான, உள்ளடக்கிய, வளமான, நிலையான சூழல் நிலவுவது இந்த பிராந்தியத்தின் வளமைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் முக்கியம் என்ற கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர். இரு தரப்புக்கும் பயனளிக்கும் விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுறவு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவும் வணிக உறவுகள், மக்களுக்கு இடையிலான உறவுகள், குறிப்பாக கடல் சார்ந்த தொடர்புகள் குறித்த பார்வைகளை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர்.

இந்தியாவிலும் சீனாவிலும் 70 நிகழ்வுகள்

மோதி, ஜின்பிங் சந்திப்பு முடிந்த நிலையில் மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே பேசினார்.

இந்திய சீன ராஜீய உறவின் 70-வது ஆண்டினைக் குறிக்கும் வகையில் 2020ல் இந்தியாவிலும் சீனாவிலும் 70 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் அப்போது தெரிவித்தார்.

இவற்றில் 35 நிகழ்ச்சிகள் சீனாவிலும், மீதி 35 நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் குறைந்தது வாரம் ஒரு நிகழ்வு இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ நடைபெறும் என்றும் அவர் கூறினார். ஆனால், அது கலாசார நிகழ்வா அல்லது வேறு விதமான நிகழ்வா என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மாமல்லபுரம் கடற்கரை கோயில்.

காஷ்மீர் குறித்து இரு தலைவர்களின் சந்திப்பில் பேசப்பட்டதா என்று கேட்டபோது அந்த விவகாரம் குறித்து பேசப்படவே இல்லை என்று விஜய் கோகலே தெரிவித்தார்.

பாகிஸ்தான் - சீனா இடையில் நெருக்கமான உறவு இருப்பது பற்றி கேட்டபோது, அந்த ஒரு விஷயம் இந்தியா - சீனா இடையிலான உறவினை தீர்மானிக்காது என்றும் கோகலே தெரிவித்தார்.

மாமல்லபுரத்தை யார் தேர்வு செய்தது?

நரேந்திர மோதி - ஷி ஜின் பிங் இடையிலான சந்திப்புக்கான இடமாக மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார் என்பது குறித்து சர்ச்சை நிலவுவதை சுட்டிக் காட்டியபோது, மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோதிதான். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று விஜய் கோகலே தெரிவித்தார். இது தொடர்பாக சர்ச்சையை கிளப்பும் செய்திகள் அனைத்தும் தவறு என்று அவர் குறிப்பிட்டார்.

வணிகப் பற்றாக்குறைக்கு தீர்வு காண என்ன திட்டம்?

இந்தியா- சீனா வணிக உறவில் நிலவும் வணிகப் பற்றாக்குறை, அதாவது சீனா செய்யும் ஏற்றுமதியின் அளவு அதிகமாகவும், இந்தியா செய்யும் ஏற்றுமதியின் அளவு குறைவாகவும் இருப்பது, பற்றி பேசப்பட்டதாகவும் விஜய் கோகலே கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பிரச்சனை பற்றி ஆராய இந்திய நிதியமைச்சர் - சீனாவின் துணைப் பிரதமர் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அந்தக் குழு இந்தப் பிரச்சனையை ஆராயும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் விஜய் கோகலே மேலும் தெரிவித்தார்.

அத்துமீறல்கள் பற்றி...

இரு தலைவர்களின் சந்திப்பில் நடந்தவை குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் மேலும் சில பொருள்கள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.

"அத்துமீறல்கள் குறித்தும், உலகத்துக்கும், பிராந்திய நலனுக்கும் உள்ள நீண்ட கால மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்தும் நட்புணர்வு மிக்க சூழலில் ஆழமான முறையில் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அந்தி அறிக்கையில் இருந்த பிற தகவல்கள்:

"தேச வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டனர்".

விதிப்படியான உலக ஒழுங்கு

இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையாக மதிப்பீடு செய்த மோதியும் ஜின்பிங்கும், சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் இருநாடுகளின் பங்கினை பிரதிபலிக்கும் வகையில், இந்தியா சீனாவின் இருதரப்பு தொடர்புகளை ஆழப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.

படத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER

சர்வதேச சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க மறுவரையறை நடப்பது குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டனர். அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற சீனாவுக்கும், இந்தியாவுக்குமான பொதுவான நோக்கத்தில், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கின்படி எல்லா நாடுகளும் தங்கள் வளர்ச்சியைத் தொடரவேண்டும் என்ற கருத்தை இரு தலைவர்களும் கொண்டிருந்தனர்.

வளர்ச்சி சவால்கள் - தீவிரவாதம்

பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உள்ளிட்ட சர்வதேச மேம்பாட்டு சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் எடுக்கும் முக்கிய முயற்சிகளை இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கோடிட்டு காட்டினார்கள்.

தீவிரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தலாக இருப்பது குறித்து மோதியும் ஷி ஜின்பிங்கும் கவலை தெரிவித்தனர். இந்தியாவும் சீனாவும் பெரிய, பன்முகத்தன்மை மிக்க நாடுகள் என்பதால், தீவிரவாத அமைப்புகளுக்கு சிலர் பயிற்சியளிப்பது, நிதி வழங்குவது, ஆதரவு அளிப்பதற்கு எதிராக சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கைகளை பாரபட்சம் பார்க்காமல் எடுப்பதை உறுதி செய்ய இரு நாடுகளும் கூட்டாகப் பாடுபடுவது முக்கியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :