`வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது`

சந்தை படத்தின் காப்புரிமை Getty Images

உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், 2019ஆம் ஆண்டு தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவிதமாக குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீடுகள் மற்றும் தனி நபர்கள் நுகர்வு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியை 2020ஆம் ஆண்டு 6.3 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் உயர்த்தும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் குறைந்துள்ளது.

வங்கதேசத்தை பொருத்த வரை இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும். அதற்கடுத்து 7.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வலுவான பேரினப் பொருளாதார கட்டமைப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான பொது முதலீடுகளால் பொருளாதாரத்தில் 7 சதவீத அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு பரந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.0ஆக குறைந்துள்ளது.

அதன்பின் 2020/21 நிதியாண்டில் மெல்ல மெல்ல முன்னெற்றம் அடைந்து 6.9ஆக உயரும் அதன்பின் 7.2ஆக வளர்ச்சியடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மற்றும் அடுத்த நிதியாண்டில், நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் பொது மக்கள் அதிகளவில் செலவழிப்பது போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானை பொறுத்த வரை இந்த நிதியாண்டில் வளர்ச்சி 2.4ஆக குறைந்து மேலும் மோசமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள திட்டத்தால் 2021 மற்றும் 2022ஆண்டிற்கான நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டில் 2.7 சதவிதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் ஏற்பட்ட பாதுகாப்பு சவால்கள் மற்றும் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை ஆகியவை மாறி வருவதாலும், மூதலீடுகளை மற்றும் ஏற்றுமதிகளை மீட்டெடுப்பது ஆகிய காரணங்களால் பொருளாதார வளர்ச்சி சற்று மீளும் என்றும், 2020ஆம் ஆண்டில் 3.3 சதவீதமும், 2012ஆம் ஆண்டில் 3.7 சதவீதமும் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 3 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி 3.5 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oil Politics: இந்தியாவில் Saudi Aramco பெரு முதலீடு செய்வதன் பின்னணி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்