"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது" - திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #iamtheChange

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பல திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் நான்காவது அத்தியாயம் இது.)

"என் பெண்மை குணங்கள் நான் ஆறாவது ஏழாவது படிக்கும்போது வெளிவந்தன. நான் அதை அப்போதே உணர்ந்துவிட்டேன். அதனை தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை அடித்தார்கள், எனக்கு முடி வெட்டினார்கள், மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன்" என்கிறார் திருநங்கை சுதா.

ஆந்திராவில் வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். தற்போது திருநங்கைகளை பார்க்கும் விதம் பரவாயில்லை, சமூகம் சற்று மாறியுள்ளது. அப்போது எல்லாம், நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாக பழைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார்.

"பெரும்பாலும் திருநங்கைகள் செய்வது, ஒன்று கை ஏந்துவது, இரண்டாவது பாலியல் தொழில்" என்று கூறும் சுதா, தன்னை போன்று யாரும் இந்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக 'தோழி' என்ற அமைப்பை திருநங்கைகளுக்காக தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

கையேந்தும் நிலை...

"நான் சிறு வயதில் எந்த கஷ்டத்தையும் பார்த்தில்லை. தினமும் பாக்கெட் மணி கிடைக்கும். வசதியாக வளர்ந்தேன். என் பெண்மையை உணரத் தொடங்கியவுடன், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் என் வீட்டில் யாருக்கும் இல்லை" என்கிறார் சுதா.

தான் பல கேலி கிண்டல்களுக்கு ஆளானதாகவும் அவர் கூறுகிறார்.

"ஆந்திராவில் நான் வளர்ந்த இடத்தில், என்னைப் போன்று யாரையும் பார்க்க முடியவில்லை. ஆனால், சென்னையில் பல திருநங்கைகளை பார்த்தேன்"

புதிதாக வரும் திருநங்கைகள், மூத்த திருநங்கைகளிடம்தான் அடைக்கலம் செல்வோம். அவர்கள் நாலைந்து நாட்கள் எங்களை பார்த்துக் கொள்வார்கள். அதன் பிறகு, அவர்கள் என்ன தொழில் செய்கிறார்களோ, அதைத் தான் நாங்களும் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று தன் பழைய நாட்களை நினைவு கூறுகிறார்.

"வீட்டை விட்டு வெளியேறி கை ஏந்தும் நிலை வந்தபோது, என்னிடம் மிஞ்சியது எனது கண்ணீரே. வாழ்க்கையில் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

"நான் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான முயற்சியும் நான் எடுத்தேன். ஆனால் வேலை கேட்க சென்றால், எங்களை வாட்ச்மேன் உள்ளே அனுமதிக்க மாட்டார். அவரே ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து எங்களை போகச் சொல்லிவிடுவார். அப்படியே நாங்கள் உள்ளே சென்று மேனேஜரை பார்த்தாலும், அங்கும் வேலை கிடைக்காது" என்கிறார் சுதா.

Image caption தோழி என்ற திருநங்கைகளுக்கான அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர்

அவரே கொஞ்சம் சம்பாதித்து, பணம் சேர்த்து, பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.

அதன்பிறகு, தான் பட்ட துன்பங்களை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் சுதாவுக்கு வந்தது. தற்போது 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளை இவர் தத்தெடுத்துள்ளார்.

திருநங்கைகளுக்குக்கான அமைப்பு

2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

"முன்னதாக சகோதரன் என்ற அமைப்பில் இருந்தோம். அந்த அமைப்பு, ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் என அனைவருக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. திருநங்கைகளான எங்களுக்கு தனியே ஏன் ஒரு அமைப்பு தொடங்கக்கூடாது என்று தோன்றியபோதுதான், தோழி அமைப்பை தொடங்க முடிவு செய்தோம்" என்கிறார்.

சுதா, கிளேடி, காவ்யா, தாயம்மா ரம்யா, ஷ்வேதா ஆகிய ஐந்து திருநங்கைகள்தான் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடக்கத்தில் எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. எங்களிடம் இருந்த காசை வைத்தே எங்கள் சமூக மக்களுக்கு சின்ன சின்ன உதவிகளை செய்து வந்தோம். 2012ல் எங்கள் அமைப்பை பதிவு செய்த பிறகு, அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் இருந்து எங்களுக்கு நிதி கிடைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 1,250 திருநங்கைகள், எங்கள் அமைப்பில் பதிவு செய்தனர் என்கிறார் சுதா.

சென்னையில் உள்ள சேத்துப்பட்டில், மாநகராட்சி இவர்களுக்கு என்று ஒரு கட்டடத்தை வழங்கியுள்ளது. அங்குதான் தோழி காப்பகம் செயல்படுகிறது.

இங்கு மூத்த திருநங்கைகள், இளம் மற்றும் நடுத்தர வயது திருநங்கைகள் தங்கியிருக்கிறார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஆள் ஒருவரும் இருக்கிறார்.

வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்த சில திருநங்கைகளும் இங்கு இருக்கிறார்கள். இங்கிருக்கும் ஒரு திருநங்கை லயோலா கல்லூரியில் ஃப்ரெஞ்ச் படிக்கிறார். ஒருவர் சென்னை மெட்ரோ ரயிலில் வேலைக்கு செல்கிறார். சிலர் உணவகங்களில் வேலை செய்கிறார்கள். உடல் நலம் சரியில்லாத சில திருநங்கைகளும் இங்கு இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது தோழி அமைப்பு.

அது மட்டுமல்லாது, இவர்களிடம் உதவி என்று வரும் அனைத்து திருநங்கைகளுக்கும் உதவி செய்கிறது இந்த அமைப்பு. அவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஏற்பாடு செய்து தருவது, வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு உதவுவது இப்படிப்பட்ட பணிகள் செய்யப்படுகிறது.

பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்

தனது பிள்ளைகள் திருநங்கைகளாக இருந்தால், அதனை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சுதா.

"உங்கள் பிள்ளை பெண்மையை உணர்ந்தால், அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். அவர்களை புரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், அவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும். நீங்களே பார்த்துக் கொண்டு, அவர்களை படிக்க வைத்தால், அவர்கள் வாழ்வு முன்னேறும்" என்று கூறுகிறார்.

"தொடர்ந்து மாற்றத்துக்காக போராடுவேன். ஒரு நாள் இந்த சமூகம் மாறும். உங்களில் ஒருவராக எங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்கிறார் சுதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்