அயோத்தி: ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதங்கள்

ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா? படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்த 30 நாட்களில், ஒரு முக்கிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என்று கருதப்படும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுக்களின் விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதுவே இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது பெரிய வழக்காகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேசவானந்தா பாரதி வழக்கு 68 நாட்கள் நடைபெற்றது. ஆதார் கார்டு தொடர்பான வழக்கு மூன்றாவது நீளமான வழக்காகும். அது 38 நாட்கள் நடைபெற்றது.

யார் யார் இந்த அரசியல் சாசன அமர்வில் இருக்கிறார்கள்? இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர்தான் விசாரித்தனர்.

இந்த ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவால் இதனை முடித்து வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று செப்டம்பர் 30, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கைதான் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

இந்த மூன்று தரப்பினரும் என்னென்ன வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தனர் என்பதை பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிர்மோஹி அக்காரா தரப்பு உச்சநீதிமன்றத்தில் என்ன கூறியது?

ராமர் கோயில் இருந்த இடத்தில்தான், 1528ஆம் ஆண்டு பாபரின் படைத்தலைவர் மிர் பகி பாபர் மசூதியை கட்டினார். பாபர் மசூதிக்கு கீழ் கோயில் இருந்ததாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது என்று நிர்மோஹி அக்காரா தரப்பு கூறியது.

இவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஜெயின், உள் முற்றத்தில் உள்ள மாடம் போன்ற அமைப்பு நிர்மோஹி அக்காராவுக்கு சொந்தமானது என்று கூறினார்.

சீதா ரசோய்(சீதாவின் சமையலறை), பந்தர் கிரிஹ் உள்ளிட்ட உள்முற்றத்தைதான் நிர்மோஹி அக்காரா உரிமை கொண்டாடுவதாக ஜெயின் தெரிவித்தார். ஜனம் அஸ்தன் என்று சொல்லப்படும் இடம் நிர்மோஹி அக்காராவிடம்தான் இருந்தது. 1932ஆம் ஆண்டில் இருந்து கோயில் நுழைவாயிலை தாண்டி முஸ்லிம்கள் யாரும் அனுமதிக்கப்பட்டதில்லை. இந்துக்கள் மட்டுமே அங்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்று 1934ஆம் ஆண்டிலேயே வழக்கு தொடர்ந்தோம், ஆனால் சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு உரிமை கோரி சன்னி வக்பு வாரியம் 1961ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்தது என்றார் ஜெயின்.

படத்தின் காப்புரிமை Getty Images

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்துக்கள் அந்த இடத்தில் சிலைகளை நிறுவியதாக கூறுவது பொய்யானது. குழப்பத்தை ஏற்படுத்தவே இது போன்ற கதையை முஸ்லிம்கள் உருவாக்கினார்கள் என்றும் அவர் வாதிட்டார்.

ராம் லல்லா கட்சி

ராம் லல்லா கட்சி சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் வாதாடினார். ராமர் அயோத்தியில் பிறந்ததாக வால்மிகி ராமாயணத்தில் குறைந்தது மூன்று முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு, இயேசு கிறிஸ்து பெதல்ஹெம்மில் பிறந்தாரா என்று கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம். ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறதா? என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த பராசரன், 'ஜன்மஸ்தன்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் ராமர் சரியாக பிறந்திருக்க வேண்டும் இல்லை. அதனை சுற்றியுள்ள இடத்தில் இருக்கலாம். அந்த இடம் முழுக்கவே 'ஜன்மஸ்தான்' ஆகும் என்றார்.

ராம் லல்லா சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன், டிசம்பர் 16, 1949ல் முஸ்லிம்கள் அங்கு கடைசியாக தொழுகை செய்ததாக தெரிவித்தார். டிசம்பர் 22, 1949ல் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

சிலைகள் வைக்கப்பட்டதால் முஸ்லிம்களால் அங்கு தொழுகை செய்ய முடியவில்லையா என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.

முஸ்லிம்களால் அந்த இடத்தை அதற்கு பின் அணுக முடியவில்லை என்று வைத்தியநாதன் தெரிவித்தார்.

மேலும் 1608-11ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஃபின்ச் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, அயோத்தி குறித்து குறிப்பிட்டதாக அவர் வாதிட்டார்.

"ராமர் அங்கு பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கை 15-16ஆம் நூற்றாண்டில் அங்கு இருந்தது என்பதை கூற முயற்சிக்கிறோம். இதனை உச்சநீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

கோசலை ராஜ்ஜியத்தின் தலைநகராக அயோத்தி இருந்ததாக குறிப்பிட்ட வைத்தியநாதன், அதன் அரசர் தசரதன்தான், ராமரின் தந்தை, ராமாயணத்தின் கதாநாயகன் என்று குறிப்பிட்டார். ராமர் பிறந்த இடத்தில்தான், மசூதி கட்டப்பட்டது என்று அவர் வாதிட்டார்.

முஸ்லிம்கள் தரப்பு

ராம் லல்லா மற்றும் நிர்மோஹியின் வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் கட்சிகள், இந்திய தொல்பொருள் ஆய்வின் அறிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டினர்.

1934ஆம் ஆண்டு முதல், மசூதியில் தொழுகை செய்ய முஸ்லிம்களுக்கு இந்துக்கள் அனுமதி அளிக்கவில்லை என்று முஸ்லிம் கட்சிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தவான் வாதிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுதொடர்பாக முஸ்லிம்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தவான், முஸ்லிம்கள் மசூதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதான் தொழுகை நடத்தினார்கள், மற்ற நாட்களில் அல்ல என்று குறிப்பிட்டார்.

மசூதியின் சாவி முஸ்லிம்களிடம் இருந்ததாகவும், ஆனால், மற்ற நாட்களில் அவர்கள் தொழுகை நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை என்றும் தவான் தெரிவித்தார். 1950ல் மசூதி மூடப்பட்டதாகவும், அதன்பிறகு வெள்ளிக்கிழமை தவிற மற்ற நாட்களில் முஸ்லிம்களை தொழுகை நடத்த போலீஸ் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இது பாபரால் கட்டப்பட்டது என்று முஸ்லிம்கள் தரப்பினருக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவான் தெரிவித்தார். அதற்கான சில ஆவணங்களையும் ஆதாரங்களையும் அவர் சமர்பித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :