காஷ்மீரில் தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களா?

காஷ்மீர் பெண்கள் படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் புல்வாமா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த தொழிலாளி ஒருவரும், பஞ்சாபில் இருந்து வந்திருந்த ஆப்பிள் வியாபாரி ஒருவரும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் ஆப்பிள் வியாபாரியுடன் வந்திருந்த நபர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த அவர்கள் சரன்ஜீத் சிங், சஞ்சய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமைக்குப் பிறகு நடந்த மூன்றாவது சம்பவம் இது. அன்றைய தினம் தெற்கு காஷ்மீரில் ஷிர்மால் கிராமத்தில், வெளிமாநில ஓட்டுநர் ஒருவரை, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு, அவருடைய லாரிக்கு தீ வைத்துக் கொளுத்தினர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தனது லாரியில் ஆப்பிள் ஏற்றுவதற்குச் சென்றிருந்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயர் ஷரீப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தீவிரவாதிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதி என கருதப்படும் ஒருவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த தொழிலாளி தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் அருகே பெசோலி பகுதியைச் சேர்ந்த சேத்திகுமார் சாகர் என்ற அவர் செங்கல் சூளை தொழிலாளி ஆவார்.

கக்போரா ரயில் நிலையம் அருகே நிஹாமா பகுதியில் வேறொருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றதாக காவல் துறை டைரக்டர் ஜெனரல் தில்பக் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

``கொலையாளிகளைக் கண்டுபிடிக்க பல்வேறு பகுதிகளுக்கு, பல குழுக்களை நாங்கள் அனுப்பியுள்ளோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார். இரண்டு தீவிரவாதிகள் இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சம்பவங்கள் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஸ்ரீநகரில் பரிம்போரா பகுதியில் குலாம் முகமது மிர் என்ற கடைக்காரரை, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சுட்டுக் கொன்றதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அவர் கொல்லப்பட்டதை அடுத்து அவருடைய வீட்டுக்கு பிபிசி குழு நேரில் சென்று, அவருடைய குடும்பத்தினருடன் பேசியது.

அவருடைய குடும்பத்தினரில் ஒருவர் பின்வருமாறு கூறினார்: ``இரவு சுமார் 8.30 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மூன்று பேர் அவர் மீது கைத் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அவருடைய மனைவியும் கடையில் இருந்துள்ளார். வந்தவர்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குலாம் முகமது இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.''

ஒரு மாதத்துக்கு முன்பு தெற்கு காஷ்மீரில் ட்ரால் பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், பொது மக்கள் இருவரைக் கொலை செய்தனர் என்று காவல் துறையினரும் ராணுவத்தினரும் தெரிவித்தனர்.

பெயரை வெளியிட விரும்பாத ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர், மக்களிடம் பயத்தை உருவாக்கும் முயற்சியாக இந்தக் கொலைகள் நடந்திருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். தீவிரவாதிகள் சில கொலைகளை செய்யும்போது, ஒவ்வொரு சம்பவத்துக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை என்கிறார் அவர்.

இந்தத் தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்தச் சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்கிறது.

370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.

சில வாரங்களுக்கு முன்பு தரைவழி தொலைபேசி இணைப்புகளின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. போஸ்ட்-பெய்ட் செல்போன் இணைப்புகளுக்கான சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அதே நாளில் போஸ்ட் பெய்டு இணைப்புகளுக்கான எஸ்.எம்.எஸ். சேவை நிறுத்தப்பட்டது.

370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கியதுடன், லடாக் என்ற தனியான யூனியன் பிரதேசத்தையும் இந்திய அரசு உருவாக்கியது.

இது துரதிருஷ்டவசமானது, துன்பம் தரக் கூடியது, காஷ்மீர் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்று காஷ்மீர் இமேஜஸ் என்ற தினசரி பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான பஷீர் மன்ஸர் கூறினார்.

``இதுபோன்ற சம்பவங்கள் அல்லது கொலைகள் எப்போது நடைபெற்றாலும், அச்சம் ஏற்படுவது இயல்பானது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அதே சமயத்தில், காஷ்மீர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் தோட்டக்கலைத் துறையில், சோப்போர் முதல் ஷோபியான் வரை கடந்த ஒரு மாத காலத்தில் நடந்துள்ள தாக்குதல்கள் - தனது லாரியில் பழங்களை ஏற்றிக் கொண்டிருந்த ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு - தோட்டக்கலைத் துறைக்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை என்றே நான் கருதுகிறேன்''என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

``காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்தே வாழ்கின்றனர். பழங்கள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது அறுவடைக் காலம். இந்தப் பருவத்தில் ஆப்பிள் பழங்களைப் பறித்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவார்கள். மக்களிடம் இதுபோன்ற அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டால், அவர்களால் தங்கள் ஆப்பிள்களை விற்க முடியாது. அது காஷ்மீரின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும். கொல்லப்பட்டது யாராக இருந்தாலும் - காஷ்மீரியோ அல்லது காஷ்மீரி அல்லாதவராக இருந்தாலும் - ஒட்டுமொத்த சூழ்நிலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்று அவர் மேலும் கூறினார்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று ஷோபியன் துணை ஆணையாளர் (டி.சி.) முகமது யாசின் சவுத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

யாருடைய தூண்டுதலின் பேரில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று தெரியவில்லை என்று பழம் வணிகத்துடன் தொடர்புள்ளவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை என அவர்கள் குறிப்பிட்டனர்.

``ஷோபியனில் ஓட்டுநரை யார் கொலை செய்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை ... இந்தச் சம்பவங்கள் பற்றி எங்களுக்கு சரியான தகவல்கள் எதுவும் தெரியாது. இதை யார் செய்தாலும், தவறானது'' என்று காஷ்மீர் பழங்கள் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பஷீர் அகமது பஷீர் பிபிசியிடம் கூறினார்.

மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளனவா என்று கேட்டபோது, ``அப்படிதான் இருக்கும். ஆனால் இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது என்பதை மீண்டும் சொல்கிறேன். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தும் என்பது இயல்பானது. இந்தத் தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை EUROPEAN PHOTOPRESS AGENCY

2019 செப்டம்பர் 6 ஆம் தேதி, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், சோப்போரில் அர்ஷித் உசேன் என்பவருடைய வீட்டில் நுழைந்து அவர் மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுமி உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது பிபிசியிடம் பேசி அர்ஷித் மற்றும் அவருடைய உறவினர்கள், துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் தங்களிடம் வந்து, கடைகளை ஏன் திறந்தீர்கள் என்று கேட்டதாகத் தெரிவித்தனர்.

``இரவு 8 மணி அளவில் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் சோப்போரில் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். பழ மண்டியில் உங்கள் கடையை ஏன் திறந்து வைத்தீர்கள் என்று என் உறவினரிடம் அவர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு சோப்போரில் எங்கள் பழ மண்டி சில நாட்கள் மூடப்பட்டிருந்தது. பிறகு அதைத் திறந்து வழக்கமான வணிகத்தை ஆரம்பித்தோம். பின்னர் மேலும் சில நாட்களுக்கு மண்டி மூடப்பட்டிருந்தது. மீண்டும் மண்டியை திறந்தோம். இனிமேல் அச்சம் எதுவும் இல்லை, வியாபாரத்தை தொடங்கலாம் என்று தலைவர் கூறினார். காலை நேரத்தில் நாங்கள் மண்டியை திறந்து வைத்தோம்'' என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் தீவிரவாதிகளா என்று கேட்டதற்கு, ``அது இருட்டாக இருந்தது. அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் தீவிரவாதிகளா என்று சொல்ல முடியவில்லை'' என்று பதில் அளித்தார்.

துப்பாக்கியால் சுட்டபோது, மண்டியை ஏன் திறந்தீர்கள் என்று துப்பாக்கி ஏந்திய இருவரும் கேட்டனர் என்று அர்ஷித்தின் மற்றொரு உறவினர் முகமது அஷ்ரப் பிபிசியிடம் தெரிவித்தார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், பாதுகாப்புப் படையினர் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஹரூண் ரெஷி கூறினார்.

படத்தின் காப்புரிமை EUROPEAN PHOTOPRESS AGENCY

``ஜம்மு காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவை இந்திய அரசு ரத்து செய்தபோது, சுமார் ஒரு லட்சம் கூடுதல் படையினர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர் என்பது முதலாவது விஷயம். தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், நிலைமையை எளிதில் கையாள முடியும் என்ற எண்ணத்தை மக்களிடம் இதன் மூலம் அரசு ஏற்படுத்தியது. ஆனால் காஷ்மீரில் சில பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை, இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன... காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் பொது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டனர் என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. இந்தக் கொலைகள், மக்களை அச்சுறுத்துவதற்கான தாக்குதல்களாக உள்ளன. இந்தக் கொலைகள் அல்லது சம்பவங்களால் அச்சம் இன்னும் நீடிக்கிறது'' என்று அவர் கூறினார்.

``இதுபோன்ற செய்திகள் காஷ்மீருக்கு வெளியில் செல்லும்போது, காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு காஷ்மீரில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் ஏற்படும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆப்பிள் வளர்ப்போருக்கும், காஷ்மீரில் உள்ள வணிகர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று புதன்கிழமை இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநகரை முகாமிடமாகக் கொண்டுள்ள படைப் பிரிவின் கமாண்டிங் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான், ஆப்பிள் உற்பத்தியாளர் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது ராணுவத்தின் பொறுப்பு என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்கு வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பல்வேறு செய்திகளும், காவல் துறையினரின் அதிகாரப்பூர்வமான சமூக ஊடகப் பதிவுகளும் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதல் சம்பவத்தில் உள்ளூர் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து தீவிரவாதிகள் நிலைகுலைந்து போயுள்ளனர் என்றும், அதனால் காஷ்மீரில் எந்த வன்முறையும் நடக்கவில்லை என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்டாப் தாக்குர் தொடர்ந்து கூறி வருகிறார்.

``370வது சட்டப்பிரிவு எனும் சுவர் சரிந்தபிறகு, காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என்று பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் கடந்த 70 நாட்களில் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் நிலைகுலைந்து போனதே இதற்குக் காரணம். காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படப் போகிறது என்பதை தீவிரவாதிகள் அறிந்துள்ளனர்'' என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

``இப்போது தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்கிறார்கள். காஷ்மீரில் அச்சத்தை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். மக்கள் தாங்களாக முன்வந்து இப்போது கடைகளைத் திறக்கின்றனர். காஷ்மீர் மக்கள் நன்கு உபசரிக்கக் கூடியவர்கள். வெளியில் இருந்து வந்தவர்களை நன்கு உபசரிக்கின்றனர். இப்போது காஷ்மீர் மக்களின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சி செய்கின்றனர். அப்பாவி மக்களைக் கொல்வதன் மூலம் தங்கள் விரக்தியை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்'' என்று அவர் குறிப்பிட்டார்.

``சுற்றுலாப் பயணிகளுக்கான தடையை அரசு விலக்கிக் கொண்டதை அடுத்து, இங்கே ஸ்ரீநகருக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிவிட்டதை நீங்கள் காணலாம். ஆனால் காஷ்மீரைச் சேராதவர்களைக் கொலை செய்வதன் மூலம், காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு காஷ்மீரில் பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்கள்'' என்றும் அவர் கூறினார்.

தேசிய மாநாட்டுக் கட்சியும் (என்.சி.) இந்தத் தாக்குதல்கள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

``எந்தச் சமூகத்திலும் பயங்கரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் எப்போதும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வந்திருக்கிறோம், இனியும் போராடுவோம். நாங்கள் அமைதியை விரும்பும் மக்கள். ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதைக் காண நாங்கள் விரும்புகிறோம். எந்த வகையான வன்முறையையும் நாங்கள் எதிர்க்கிறோம். எந்தத் தீவிரவாதச் செயலையும் நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தற்காலிகத் தலைவருமான டிராவிந்தர் ரானா பிபிசியிடம் கூறினார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்