நாங்குநேரி, விக்கிரவாண்டி: தமிழக இடைத்தேர்தல் களம் யாருக்கு சாதகம்? - விரிவான தகவல்கள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி: தமிழக இடைத்தேர்தல் களம் யாருக்கு சாதகம்? - விரிவான தகவல்கள் படத்தின் காப்புரிமை fACEBOOK

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் நடக்கும் இடைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென ஆளும் அ.தி.மு.கவும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளன. இடைத் தேர்தல் நிலவரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலும் அக்டோபர் 21ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.

விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த கே. ராதாமணி மரணமடைந்ததால் அந்தத் தொகுதி காலியாக இருக்கிறது. நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனால், அந்தத் தொகுதியும் காலியானது.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மிகக் குறைவான பெரும்பான்மையிலேயே ஆட்சி நடத்திவந்தாலும் இந்த இரு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக சட்டமன்றத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. இருந்தபோதும் இந்த இரு தொகுதிகளும் வெற்றிபெறுவதை ஆளும்கட்சியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் மிக முக்கியமானதாகக் கருதுகின்றன.

உள்ளாட்சித் தேர்தல்

வெகு விரைவில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதோடு, வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுமென அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கருதுகின்றன.

இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளுமே 2016ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளால் கைப்பற்றப்பட்ட தொகுதிகள். இருந்தபோதும், தற்போது கூட்டணிக் கணக்குகள் மாறியிருப்பதால் ஆளும்கட்சி மிகுந்த நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை அணுகுகிறது.

விக்கிரவாண்டித் தொகுதியைப் பொறுத்தவரை 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட ஒரு தொகுதி. இந்தத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிபிஎம்மின் ராமமூர்த்தி வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த கே. ராதாமணி வெற்றிபெற்றார்.

படத்தின் காப்புரிமை Facebook

தற்போது ஆளும் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச் செல்வனும் தி.மு.க. சார்பில் நா. புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருக்கிறது.

விக்கிரவாண்டித் தொகுதியைப் பொறுத்தவரை சுமார் 2,23,000 வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே. ராதாமணி 63,757 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் 56,845 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.

இந்தத் தொகுதியில் 2016ஆம் ஆண்டில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. கணிசமான வாக்குகளைப் பெற்றது. அக்கட்சி 41,428 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சி.பி.எம். 9981 வாக்குகளையும் பா.ஜ.க. 1291 வாக்குகளையும் பெற்றன.

இந்தத் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். அதனால் கடந்த முறை மூன்றாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சி தங்கள் பக்கம் இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது அ.தி.மு.க. பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளைக் கவனித்துவருகிறார்கள். குறிப்பாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் எப்படியாவது இந்தத் தொகுதியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார்.

ஏற்கனவே வெற்றிபெற்ற தொகுதி என்பதாலும் அ.தி.மு.க. மீது உள்ள அதிருப்தி தங்களுக்கு உதவும் என்ற கணக்கிலும் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்கள் தி.மு.கவினர். இந்தத் தொகுதியில் வன்னியர்கள் தவிர, தாழ்த்தப்பட்டவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டித் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் கூடுதல் வாக்குகளைப் பெற்றார்.

மேலும், தி.மு.க. 2021ல் ஆட்சிக்கு வந்தால், வன்னியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடி, உயர்நீத்தவர்களுக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த தலைவராக இருந்த ஏ. கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது தி.மு.க. இதனால், மீண்டும் தொகுதி தங்கள் வசம் வரும் எனக் கருதுகிறது தி.மு.க.

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. விவசாயம் மட்டுமே பிரதானமான தொழில். பேருந்து வசதி, குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படையான பிரச்சனைகளே இந்தத் தொகுதியில் வசிப்பவர்களின் பிரதானமான கோரிக்கைகளாக இருக்கின்றன.

பணப் புழக்கம்

ஆனால், தேர்தலையொட்டி இந்தத் தொகுதிக்குள் பணப் புழக்கம் வெகு தாராளமாக இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறி, தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது வெள்ளிக்கிழமையன்று வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் 6 முறை வெற்றிபெற்ற தொகுதி. அ.தி.மு.க. ஐந்து முறையும் தி.மு.க இரண்டு தடவைகளும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளன. காங்கிரசைச் சேர்ந்த எச். வசந்தகுமார் இந்தத் தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார்.

சுமார் 2,50,000 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட எச். வசந்தகுமார் 74,932 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.கவைச் சேர்ந்த விஜயகுமார் 57,617 வாக்குகளைப் பெற்றார். தே.மு.தி.க. 9446 வாக்குகளையும் பா.ஜ.க. 6609 வாக்குகளையும் பெற்றன.

இந்த முறை, அ.தி.மு.க. சார்பில் என். நாராயணனும் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் களத்தில் நிற்கின்றன. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை விவசாயம் முக்கியமான தொழில். குறிப்பாக வாழை பயிரிடுவது இங்கு அதிகம். மாநிலத்தின் மிகப் பெரிய வாழைச் சந்தைகளில் ஒன்று இங்குதான் இருக்கிறது. ஆகவே, வாழையைப் பாதுகாத்துவைக்க, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு ஒன்று வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.

மேலும், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்பதும் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை. 2001ல் அடிக்கல் நாட்டப்பட்ட நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், அடிக்கல் நாட்டப்பட்டதோடு பெரிய முன்னேற்றமின்றி நிற்கிறது.

இருந்தபோதும், சட்டமன்ற உறுப்பினராக எச். வசந்தகுமார் இந்தப் பகுதியில் செய்திருக்கும் பணிகள் காங்கிரசிற்கு சாதகமாக இருக்குமென நம்பப்படுகிறது. குறிப்பாக, சாலைகள் அமைத்திருப்பது, குடிநீர் பிரச்சனையை பல இடங்களில் தீர்த்திருப்பது, ஆரம்பச் சுகாதார நிலையங்களை அமைத்திருப்பது போன்றவை குறிப்பாகப் பேசப்படுகின்றன. மேலும் இந்தத் தொகுதியில் விவசாயம் மற்றும் நீர்நிலைகளுக்கான பணிகளுக்கென தனது சொந்தச் செலவில் ஒரு புல்டோசர் எந்திரத்தை வாங்கிக் கொடுத்து, அதற்கான அன்றாடச் செலவுகளை தானே ஏற்றுக்கொண்டிருந்தார். இதெல்லாம் காங்கிரசிற்குச் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நம்பி வெற்றிபெறச் செய்த மக்களைப் பாதியில் விட்டுச் சென்றிருப்பது சிறிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.கவினர் இந்தத் தொகுதியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டுமெனத் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்கள். இந்தத் தொகுதியிலும் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

கமல், சீமான், தினகரன்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகியவை இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த இரு தொகுதிகளும் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. விக்கிரவாண்டித் தொகுதியில் கு. கந்தசாமியும் நாங்குநேரி தொகுதியில் சா. ராஜநாராயணனும் நாம் தமிழர் கட்சி சார்பாக இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். இக்கட்சி கடந்த முறை நாங்குநேரி தொகுதியில் 1.35 சதவீத வாக்குகளையும் விக்கிரவாண்டித் தொகுதியில் 0.33 சதவீத வாக்குகளையுமே பெற்றது.

இருந்தபோதும் இந்த இரு தொகுதிகளிலும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் சீமான். ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை இந்தத் தேர்தலில் பெற்றாலே அது அவருக்கான முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படும்.

இந்த இரு தொகுதிகளிலும் வரும் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்