பாகிஸ்தான் - இந்தியா ராணுவத் தாக்குதல்: 6-10 பாகிஸ்தான் வீரர்கள் பலி - ராணுவத் தளபதி பிபின் ராவத்

கோப்புப் படம். பீரங்கி. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் 6 முதல் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தாங்தார் பிரிவைத் தாண்டி பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் செயல்பட்டுவந்ததாக சொல்லப்படும் நான்கு தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்துள்ளதாக இந்திய ராணுவத் தரப்பை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல்காரர்களை இந்தியாவை நோக்கி அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயன்ற நிலையில், இந்திய ராணுவத்தினர் மீது போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுக்கப்பட்டது என்றும், இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவத் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியது.

இந்த தாக்குதலில் 1 வீடு, 1 அரிசிக் கிடங்கு, 2 கார்கள், 2 மாட்டுக் கொட்டகை ஆகியவை சேதமடைந்தன என்றும் ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டது.

இதற்கு பதிலடியாகவே பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏ.என்.ஐ. கூறியுள்ளது.

"6-10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி"

"இந்திய ராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஆறிலிருந்து பத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது மூன்று பயங்கரவாத முகாம்கள் இந்த ராணுவத்தால் அழிக்கப்பட்டது" என ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. அவர்கள் ஊடுருவதற்கு முன்பே நாம் பதிலடி தாக்குதல் தொடுத்தோம். பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளின் மீது நாம் தக்குதல் தொடுத்ததில் அவர்கள் பலத்த சேதத்தை சந்தித்தனர்" என்று கூறி உள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப் பின், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர். இது குறித்த தகவல்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக வருகிறது என்றார்.

பாகிஸ்தான் கூறுவதென்ன?

இதனிடையே பாகிஸ்தான் ராணுவ செய்திப் பிரிவின் தலைமை இயக்குநர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தூண்டுதல் ஏதுமில்லாமலே ஜுரா, ஷாகோட், நௌசேரி செக்டார்களில் பொதுமக்களை இலக்குவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த பதிலடியில் 9 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 ராணுவ பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூண்டுதல் ஏதும் இல்லாமலே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியத் தரப்பில், தாங்தார் பகுதியில் குந்திஷாத் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான முகமது சாதிக்(55) இறந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்