தேர்தல் முடிவுகள்: பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த 'டிக் டாக்' பிரபலம் சோனாலி

tik tok

பட மூலாதாரம், Sonali Phogat facebook page

படக்குறிப்பு,

சோனாலி போகத்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இவற்றுடன் வேறு மாநிலங்களில் உள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

தேர்தல் முடிவுகளில் சில சுவாரசியமான தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

1. ஹரியாணாவில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கப்போவது காங்கிரசா பாரதிய ஜனதாவா என்று முடிவு செய்யும் நிலையில் 13 இடங்களில் முன்னணியில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரன். இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப் பேரன். குடும்பச் சண்டையால் 2018ல்தான் புதிய கட்சியைத் தொடங்கினார்.

2. டிக் டாக்கில் காணொளிகளை வெளியிட்டு பிரபலமாக இருந்த சோனாலி போகத் ஹரியாணாவின் ஆதம்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். தமக்கு திறமை அடிப்படையிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், டிக் டாக்கில் பிரபலமானதால் அல்ல என்றும் பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், YogeshwarOfficial

படக்குறிப்பு,

யோகேஷ்வர் தத்

3. பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஹரியாணாவின் பரோடா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீரரும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான யோகேஷ்வர் தத் தோல்வியடைந்துள்ளார்.

4. ஆமிர் கான் நடித்து பெரும் வெற்றிபெற்ற 'டங்கல்' படம் எடுக்க தூண்டுதலாக இருந்தவர்கள் பபிதா போகத் மற்றும் கீதா போகாத சகோதரிகள். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பபிதா தாத்ரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.

பட மூலாதாரம், Babita Phogat facebook page

படக்குறிப்பு,

பபிதா போகத்

5. குஜராத் மாநிலத்தில், ரதன்பூர் மற்றும் பயாத் தொகுதிகளின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்பேஷ் தாக்கூர் மற்றும் தவில்சிங் சாலா ஆகியோர் பாஜகவுக்கு அணி மாறி அதே தொகுதிகளில் போட்டியிட்டனர். ஆனால், இந்த முறை வெற்றி கிடைக்கவில்லை.

6 . அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஆல் இந்தியா மஜிலிசே இதிகாதுல் முஸ்லிமீன் கட்சி பிகாரில் கிசான்கஞ் தொகுதியில் வென்றுள்ளது. கடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் இரு இடங்களை வென்று பலரின் புருவங்களை உயர வைத்த இந்தக் கட்சி இப்போது, பிகாரில் வென்று கவனத்தை ஈர்த்துள்ளது.

7. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அரசியலை மையப்படுத்தியுள்ள கேரள மாநிலத்தில் உள்ள மஞ்சேஸ்வர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அடுத்து பாஜக இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள இந்த தொகுதியில் மங்களூரு பகுதியின் இந்துத்துவ அரசியலின் தாக்கம் அதிகம். 2016 சட்டமன்றத் தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் 89 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :