விக்கிரவாண்டி, நாங்குநேரி: 2 எதிர்க்கட்சி தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Twitter

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட முறையே திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தினர்.

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலையில் துவங்கி நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதி

பட மூலாதாரம், Twitter

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்களில் 1,88,692 பேர் வாக்களித்தனர்.

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 60.29 சதவீத வாக்குகளாகும். இவருக்கு அடுத்த இடத்தில் வந்த திமுக வேட்பாளர் புகழேந்தி, 68,828 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இது பதிவான மொத்த வாக்குகளில் 36.48 சதவீதம். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 44,924.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கே. கந்தசாமி 2,913 வாக்குகளைப் பெற்றுள்ளார். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற பிரிவுக்கு 1,558 பேர் வாக்களித்துள்ளனர்.

விக்கிரவாண்டித் தொகுதியைப் பொறுத்தவரை 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட ஒரு தொகுதி. இந்தத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.ராமமூர்த்தி வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த கே. ராதாமணி வெற்றிபெற்றார்.

அந்தத் தேர்தலில் அவர் 63,757 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் 56,845 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.

தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 41,428 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சி.பி.எம். 9,981 வாக்குகளையும் பா.ஜ.க. 1,291 வாக்குகளையும் பெற்றன.

இந்நிலையில், தொகுதி எம்.எல்.ஏ.வான கே. ராதாமணி இறந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

நாங்குநேரியிலும் அதிமுக வெற்றி

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இது இந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் இது 55.88 சதவீதம் ஆகும்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோகரன் 61,932 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றார். அவர் நாங்குநேரியில் பதிவான 36.29 சதவீத வாக்குகளை பெற்றார். இரண்டு பேருக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் 33,445.

3,494 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன் பெற்றார்.

நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதையடுத்து இங்கு இடைத்தேர்தல் நடந்தது.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மிகக் குறைவான பெரும்பான்மையிலேயே ஆட்சி நடத்திவந்தாலும் இந்த இரு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக சட்டமன்றத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்ற நிலையிலேயே இந்த தேர்தல்கள் நடந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :