காரப்பன் சில்க்ஸ் பற்றி மீண்டும் ட்வீட் செய்த ஹெச்.ராஜா

காரப்பன் சில்க்ஸ்

கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள 'காரப்பன் சில்க்ஸ்' பட்டு சேலை நிறுவனம், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிறகு பிரபலமாகி வருகிறது.

காரப்பன் சில்க்ஸின் நிறுவனரும், தேசிய கைத்தறி பயிற்சியாளருமான வி.காரப்பன், செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று கோவை பீளமேட்டில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் 'அறிவுத்தேடல்' நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவர் பேசிய கானொளி அக்டோபர் 10 ஆம் தேதி முதல் சமூக வலைத் தளங்களில் பரவத் தொடங்கியது.

அவரது பேச்சு இந்துக்களின் மனம் புண்படும் வகையில் அமைந்ததாக கூறப்பட்டதையடுத்து, தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் கானொளி வெளியிட்டார்.

இந்நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் 20 ஆம் தேதி அன்று, காரப்பன் சில்க்ஸ் கடையை இந்து உணர்வாளர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் பகிர்ந்திருந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில், இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும், இந்து கடவுள்களை இகழ்ந்து பேசியதாகவும், காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் வி.காரப்பன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

ஹெச்.ராஜா இட்ட பதிவை அடுத்து, காரப்பனுக்கு ஆதரவளிக்கும் ஏராளமானோர் சமூக வலைத் தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். அத்தோடு, சிறுமுகையில் உள்ள அவரது பட்டு சேலை கடைக்கு சென்று துணி வாங்கி புகைப்படமாக எடுத்து #WeSupportKarappan என்கிற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காரப்பன், 'தினமும் ஆயிரத்தில் நடந்துகொண்டிருந்த வியாபாரத்தை, ஹெச்.ராஜா லட்சத்திற்கு அதிகரித்துவிட்டார்' என கூறினார்.

இந்நிலையில், 'பலமடங்கு அதிகரித்துள்ள காரப்பன் சில்க்ஸின் வியாபாரத்தை கணக்கில் கொண்டுவந்துள்ளனரா என்று வருமானவரித் துறை உடனடியாக ஆய்வு செய்யவேண்டும்' என ஹெச்.ராஜா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காரப்பன் மீது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை துாண்டுதல், இழிவாக பேசுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக, இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) (பி), மற்றும் 295 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :