கருணாநிதியை நினைவுபடுத்திய சரத் பவார்: மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய கட்சிகள் சாதித்ததும், சறுக்கியதும்

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
''கொட்டும் மழையில் பிரசாரம் செய்த சரத் பவார் கருணாநிதியை நினைவுபடுத்தினார்''

பட மூலாதாரம், BBC/GETTY IMAGES

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணித்த நிலையில், கடந்த முறை 122 தொகுதிகளை வென்ற பாஜக தற்போது 105 தொகுதிகள் மட்டுமே வென்றுள்ளது.

இதனால் 2014ல் வென்றதைவிட பாஜகவின் வெற்றி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளுக்கு மேல் குறைந்துள்ளது,

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிளில் வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் வென்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வென்றுள்ளது.

பட மூலாதாரம், TWITTER/@PAWARSPEAKS

படக்குறிப்பு,

சரத் பவார்

இந்த தேர்தல் முடிவுகளில் மிகவும் எதிர்பாராத விஷயமாக அமைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பங்களிப்புதான். தேர்தல் காலகட்டத்தில் பல முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகிய போதும், அக்கட்சி பெற்ற வெற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் பத்திரிகையாளரும்,, 'தி கஸின்ஸ் தாக்ரே' புத்தகத்தின் ஆசிரியருமான தவல் குல்கர்னி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''மகாராஷ்டிர மாநில மக்கள் மத்தியில் இருந்த ஆட்சிக்கு எதிரான மனப்பான்மையை எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை'' என்று கூறினார்.

''நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மாநிலத்தில் கட்சியை தலைமையேற்று நடத்த தலைவர்கள் இல்லாமல் தடுமாறுகிறது. மேலும், தேர்தல் பிரசார காலகட்டத்தில் ராகுல் காந்தி பேங்காக்கில் இருந்தது அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியது'' என்று தவல் குல்கர்னி குறிப்பிட்டார்.

''மிக குறைந்த பிரச்சார கூட்டங்களில் மட்டுமே பங்கேற்ற ராகுல் காந்தி உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பெரிதாக பேசவில்லை''

''அதேவேளையில், மகாராஷ்டிராவின் வரலாற்றில் நகர்ப்புற பகுதியை சேர்ந்த முதல் முதல்வரான தேவேந்திர பட்னவிஸ், படித்த மேல்தட்டு மக்களுக்கு நெருக்கமானவராக தோன்றுகிறார். ஆனால் அவரின் கட்சி, கடந்த சில ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள விவசாயம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தேவேந்திர பட்னவிஸ்

''நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 'மோதி' என்ற மந்திரமும், பாகிஸ்தான் - போர் போன்றவை பாஜகவுக்கு பெரிதும் கைகொடுத்தது. அதனால் பாஜக கூட்டணியால் மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 42 தொகுதிகளை வெல்ல முடிந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தல் நிலவரம் முற்றிலும் வேறு'' என்று தவல் குல்கர்னி மேலும் கூறினார்.

''சரத் பவார் வயதான காலத்திலும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடினார். கொட்டும் மழையில் பிரசாரம் செய்தார். இதுவே தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிதும் புத்துணர்வு ஊட்டியது. ஆனால், காங்கிரஸ் கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நேரமிது'' என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளில் முக்கிய கட்சிகளின் பங்களிப்பு குறித்து பிபிசி மராத்தி பிரிவின் ஆசிரியரான ஆஷிஷ் தீக்ஷித் என்னிடம் கூறுகையில், ''மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மிகவும் வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான்'' என்றார்.

''எளிதாக வென்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் பாஜக இருந்ததும், சில முன்னணி தலைவர்கள் சிறப்பாக பங்காற்றாததும் சில இடங்களில் அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்று ஆஷிஷ் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராகுல் காந்தி (கோப்புப்படம்)

''மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது ராகுல் காந்தி பேங்காக்கில் இருந்தார். அது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மிக சில பிரச்சார கூட்டங்களிலேயே அவர் கலந்து கொண்டார்'' என்று ஆஷிஷ் தீக்ஷித் தெரிவித்தார்.

'மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் அவர் விரைவில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என்று சொல்லி கொண்டு இருந்தனர். அவர்களுக்கே தங்கள் கட்சி தலைவரின் திட்டம் குறித்து தெளிவாக தெரியவில்லை'' என்றார்.

''2016 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, உடல்நலிவுற்று 90 வயதை தாண்டிய நிலையிலும் திமுக தலைவர் கருணாநிதி எப்படி போராடினாரோ, கடும் பிரசாரத்தில் ஈடுபட்டாரோ அதுபோல் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் கொட்டும் மழையில் சரத் பவாரின் பிரசாரம் அமைந்தது'' என்று தெரிவித்தார்.

''உடல் நலமில்லாமல், தள்ளாத வயதில் கட்சிக்காக கடைசி நிமிடம் வரை போராடிய சரத் பவார், போராட்ட குணத்தில் கருணாநிதியை நினைவுபடுத்தினார்''

இறுதி காலகட்டத்திலும், தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபட்ட கருணாநிதி போலவே தற்போது சரத் பவார் போராடுகிறார் என்றார்.

பட மூலாதாரம், Getty Images

'பாஜக மீண்டும் வென்றாலும், அக்கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில் சில முடிவுகள் உள்ளன. சிவசேனா கட்சிக்கு பெரிய பாதகமும் இல்லை, சாதகமும் இல்லை, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இது ஏறுமுகம்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி தன்னை மாநில அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :