மினி வாசுதேவன்: விலங்குகளின் வலி மொழி அறிந்த பெண்ணின் கதை #iamthechange

  • மு.ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
காணொளிக் குறிப்பு,

மினி வாசுதேவன்: ஆதரவற்ற விலங்குகளை அன்போடு பாதுகாக்கும் பெண்ணின் கதை #iamtehchange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஏழாவது அத்தியாயம் இது.)

விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும், ஆதரவில்லாமல் தெருக்களில் வசிக்கும் நாய் மற்றும் பூனைகளுக்காகவும் 'ஹ்யூமன் அனிமல் சொசைட்டி' எனும் தன்னார்வ அமைப்பினை உருவாக்கி நடத்திவருகிறார் விலங்குகள் நல ஆர்வலர் மினிவாசுதேவன்.

கோவையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழுக்குப்பாறை கிராமத்தில், நோய் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளை பாதுகாக்கும் காப்பகத்தை இவர் நடத்திவருகிறார்.

இங்கு, உடல் நலமின்றி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களுக்கும் பூனைகளுக்கும் முறையான மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அளிக்கப்படுகிறது.

விலங்குகள் மீதான வன்முறை

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த மினிவாசுதேவன், கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்து, அங்கேயே வேலை பார்த்து வந்தார். அங்கு, விலங்குகள் நல அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனுபவம் தனக்கு விலங்குகள் மீதான வன்முறை குறித்து தெளிவுபடுத்தியதாக கூறுகிறார்.

"அமெரிக்காவில் நான் பணிபுரிந்த போது விலங்குகள் மீது தொடுக்கப்படும் வன்முறை குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன். இன்றைக்கு விலங்குகள் ஓர் சந்தைப் பொருளாகவே பார்க்கப்படுகின்றன. உலக அளவில் வணிகம், பொழுதுபோக்கு, பரிசோதனை, உணவு போன்ற பல காரணங்களுக்காக விலங்குகள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகின்றன. இந்தியாவில் விலங்குகள் நலன் சார்ந்த சட்டங்கள் வலிமையற்றதாகவே உள்ளன. இதனால், விலங்குகள் மீதான வன்முறை அதிகரிப்பதோடு, அதன் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது" என தெரிவிக்கிறார் மினிவாசுதேவன்.

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

ஆதரவில்லாத தெருநாய்கள்

பெரும்பாலும் செல்லப் பிராணியாக வீட்டில் நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள், வெளிநாட்டு நாய்களைதான் வளர்க்க விரும்புவார்கள்; நாட்டு நாய்களை வளர்ப்பதை தரக்குறைவாக நம் மக்கள் கருதுகின்றனர் என்கிறார் இவர்.

"கோயம்புத்தூரில் குடிபெயர்ந்ததும் விலங்குகளுக்காக எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்போது, தெருநாய் ஒன்று தலையில் காயத்தோடு புழுக்கள் மொய்க்க அலைந்து கொண்டிருந்தது. அந்த காட்சி ஆதரவில்லாத நாய்களுக்காக ஓர் அமைப்பு துவங்கவேண்டும் என உணர்த்தியது.

தெரு நாய்களுக்கு ஆதரவாக இங்கு யாருமே இல்லை. அவை, சாலைகளில் அடிபட்டு கிடந்தாலோ, நோய்வாய்ப்பட்டாலோ பராமரிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. எனவே, விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்துவதும், அவற்றின் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்களின் பணியாக தொடர்ந்து வருகிறது" என கூறுகிறார் மினிவாசுதேவன்.

தெருநாய்களுக்கான காப்பகம்

கோவை மாநகராட்சியோடு இணைந்து நாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சைப் பணிகளையும் தனது அமைப்பின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர் இந்த அமைப்பினர்.

"கருத்தடை சிகிச்சை முடிந்தும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட ஆதரவில்லாத தெருநாய்களை பாதுகாக்கவும், அவை சுதந்திரமாக வாழவும் ஓர் இடம் வேண்டும் என முடிவு செய்து 'ஹ்யூமன் அனிமெல் சொசைட்டி' சார்பில் 2006 ஆம் ஆண்டு காப்பகத்திற்கான பணிகளை துவங்கினோம்.

இப்போது, எங்கள் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள், ஒரு குதிரை மற்றும் ஒரு பசுமாடு ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு வன்முறைகளுக்கும் விபத்துகளுக்கும் ஆளாக்கப்பட்டவை' என தெரிவிக்கிறார் மினிவாசுதேவன்.

மனிதர்களும் விலங்குகளும்

"இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் இணைந்து வாழும் சூழல்தான் மனிதர்களுக்கும் நன்மை தரும். எனவே, மனிதர்கள் விலங்குகளை துன்புறுத்தாமல், அவற்றோடு பாசமாக பழகி பாதுகாத்திட வேண்டும்" என அன்போடு புன்னகைக்கிறார் மினிவாசுதேவன்.

விலங்குகள் மீதும், இயற்கை வளங்களின் மீதும் மனிதனின் பேராசையால் நிகழும் வன்முறைகள் பெருகிவரும் இன்றைய சூழலில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மனித நேயமிக்க பாலமாக விளங்குகிறார் மினி வாசுதேவன்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :