காஷ்மீருக்கு ஆப்பிள் ஏற்றவந்த இரண்டு லாரி டிரைவர்கள் சுட்டுக் கொலை

ஆப்பிள்

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்துக்கு ஆப்பிள் ஏற்றிச் செல்வதற்காக வந்திருந்த இரண்டு லாரி டிரைவர்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு டிரைவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

கடந்த இரு வாரங்களில் லாரி டிரைவர்கள் மீது இது போன்று தாக்குதல் நடப்பது இது மூன்றாவது முறை.

ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இருந்து வந்த மூன்று லாரிகள் ஷோபியான் மாவட்டத்தின் சித்ரா என்ற கிராமத்தில் வியாழக்கிழமை மாலை ஆப்பிள் ஏற்றிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர் என்கிறார் ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் ரியாஸ் மஸ்ரூர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இலியாஸ் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை.

பஞ்சாபை சேர்ந்த ஜீவன் சிங் என்ற மற்றொரு டிரைவர் இந்த தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமை நீக்கப்பட்ட பிறகு, வணிக நடவடிக்கைகளுக்கு தீவிரவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

ஆப்பிள் வியாபாரிகளையும் தீவிரவாதிகள் தாக்கினர். ஆனால், ஆப்பிள் சாகுபடியும் வணிகமும், காஷ்மீரின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :