நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானி மரணம்

எஸ்.ஏ.ஆர்.கிலானி

பட மூலாதாரம், Getty Images

2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி மாரடைப்பால் காலமானார்.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2016ம் ஆண்டு அஃப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக கிலானி மீது தேச விரோத வழக்கு தொடரப்பட்டது.

டெல்லியில் வசித்துவந்த கிலானிக்கு இன்று வியாழக்கிழமை மாலை நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவரது மகள் நுஸ்ரத் காஷ்மீர் பிபிசி செய்தியாளர் ரியாஸ் மஸ்ரூரிடம் உறுதி செய்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :