தமிழக இடைத்தேர்தல், மாநில சட்டமன்ற முடிவுகள் உணர்த்துவது என்ன?

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், FACEBOOK

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆகியவை அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் பல செய்திகளைச் சொல்கின்றன. இது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி ஹிந்து குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். பேட்டியிலிருந்து:

கே. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், இரண்டிலுமே அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. இந்த முடிவுகள் உணர்த்துவதென்ன?

ப. என்னைப் பொறுத்தவரை நாங்குநேரிக்கு நடந்தது ஒரு தேவையில்லாத தேர்தல். காங்கிரசைப் போல ஒரு பெரிய கட்சி ஒருவரை அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க வைக்கிறது. பிறகு மூன்று வருடங்களுக்குப் பிறகு, அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் இடம் கொடுக்கிறார்கள். அதில் அவர் வெற்றிபெற்றதால் இந்த இடத்தை ராஜினாமா செய்கிறார். இதனால் தேவையற்ற இடைத்தேர்தல் அந்த மக்களின் மீது திணிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமாரை விட்டால் வேறு நபர் காங்கிரசிற்குக் கிடைக்கவில்லையா? இப்போது இந்த இடைத்தேர்தலிலும் வேட்பாளர் குறித்த பிரச்சனை இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ரூபி மனோகரன், அடிமட்டத்திலிருந்து வந்தவர் அல்ல. தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து இடத்தைப் பெற்றவர் எனச் சொல்லப்படுகிறது.

தவிர, நாங்குநேரி தேர்தல் பிரசாரம் துவங்கியதிலிருந்தே காங்கிரஸ் தரப்பில் சலசலப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில், காங்கிரஸ்தான் இந்த இடத்தில் போட்டியிட வேண்டும்; தி.மு.கவிடமிருந்து கட்டாயமாக அந்த இடத்தைப் பெற வேண்டுமென அந்தக் கூட்டத்தில் பேசுகிறார்கள். அந்த வீடியோ காட்சி வெளியில் வந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளாக நடக்கும் ஒரு கூட்டத்தில் பேசப்பட்டது, எப்படி வெளியில் வந்தது?

ஆகவே, காங்கிரஸ் இந்த இடத்தைப் பெறுவதில் தி.மு.க. மீது அழுத்ததைக் கொடுத்தது என்பது தெரிகிறது. அதிலேயே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. தவிர, அங்கிருக்கும் காங்கிரஸின் மாவட்டச் செயலாளர் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. இந்த மாவட்டச் செயலாளரும் தொகுதியில் பெரிதாக அறியப்படாத ரூபி மனோகரனும் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

விக்கிரவாண்டி தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க. வேட்பாளர், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மிக நெருக்கமானவர். அதனால், அங்கு கட்சி மட்டத்தில் பெரிய பிரச்சனை இல்லை. அங்கு இப்படி தோல்வி கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

பட மூலாதாரம், Twitter

கே. நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக எச். வசந்தகுமார் இருந்தபோது செய்த பணிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளாக மாறுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ஏன்?

ப. அது தவிர வேறு பிரச்சனைகளும் இருக்கின்றன. வேறு ஒரு நல்ல பதவி கிடைத்ததும் நம்மை விட்டுச் சென்றுவிட்டார் என்ற பிரசாரம் மிக முக்கியமானது. இந்த மாதிரி நபர்களைத் தேர்வுசெய்தால் இப்படித்தான் நடக்குமென்ற பிரசாரம் நன்றாக எடுபட்டது. தவிர, இந்தத் தேர்தல் பிரசாரத்தில்கூட மிகக் காலதாமதமாகத்தான் எச். வசந்தகுமார் உள்ளே நுழைந்தார். அதற்குப் பிறகு பிரசாரம் வேகமெடுத்தாலும்கூட, மக்கள் தாங்கள் கைவிடப்பட்டதாக உணர்ந்தார்கள்.

தவிர, ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் நமக்கு ஏதாவது நலத்திட்டங்கள் வராதா என்ற நம்பிக்கையிலும் மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்திருக்கலாம். அந்தத் தொகுதியில் 14 சதவீதம் பேர் சிறுபான்மையினர். அவர்கள் கண்டிப்பாக காங்கிரசிற்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படி இருந்தும்கூட, இவ்வளவு பெரிய வெற்றி அ.தி.மு.கவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, அ.ம.மு.க. வாக்குகள் முழுமையாக அ.தி.மு.கவுக்குக் கிடைத்திருக்கின்றன. விக்கிரவாண்டியிலும் அதுதான் நடந்திருக்கிறது.

கே. விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருப்பதுதான் இந்த வெற்றிக்குக் காரணமா?

ப. நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரைவிட அதிகமாகத்தான் வாக்குகளைப் பெற்றார்.

ஒருவேளை இந்த முறை இந்தத் தொகுதியில் வன்னியர்கள் ஒன்றாக இணைந்திருக்கலாம்.

இதுதவிர, இந்த வேட்பாளர் இந்தத் தொகுதிக்குப் பொருத்தமில்லாதவர் என்றுகூடச் சொல்லப்படுகிறது. வேறொரு பொருத்தமான வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம் என்றுகூடச் சொல்லப்படுகிறது. ஆனால், அதனால் வெற்றி கிடைத்திருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

2016ல் வெற்றிபெற்ற இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியடைந்திருக்கிறது. 2016ஐவிட கடும் போட்டி நிறைந்த தேர்தலா இது? அப்போது ஜெயலலிதா இருந்தார். இருந்தும் தி.மு.க. வெற்றிபெற்றது. அந்த சட்டமன்ற உறுப்பினர் இறந்ததால் தேர்தல் வரும்போது ஓர் அனுதாபமும் இருக்கும். இருந்தபோதும் தோல்வி கிடைத்திருக்கிறது. ஆகவே, பா.ம.க. மட்டும் இந்தத் தோல்விக்குக் காரணமல்ல.

தி.மு.க. செய்த தவறுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கே. விக்கிரவாண்டித் தொகுதியில் குறிப்படத்தக்க எண்ணிக்கையில் உள்ள வன்னிய மக்களைக் கவர, தி.மு.க. சில வாக்குறுதிகளை அளித்தது. இருந்தபோதும் வன்னியர்களின் வாக்குகள் பெரிய அளவில் தி.மு.கவிற்குக் கிடைக்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஏன்?

ப. அந்த வாக்குறுதிகள் பெரிதாக எடுபடவில்லை. இந்த வாக்குறுதிகளே பிரச்சனையானவைதான். தவிர, இந்தத் தேர்தலில் தி.மு.கவின் பிரசாரத்தில் அ.தி.மு.க அரசைக் குறைசொல்லும்போது, அதனை பா.ஜ.கவின் பொம்மை அரசு என்பதைத்தான் முன்வைத்தார்கள். அதுதான் பிரசாரத்தின் அடிப்படையாக இருந்தது. இதனால், பா.ஜ.க. மீதான கோபம் அதிகரித்திருக்கலாம். ஆனால், அ.தி.மு.க. மீதான கோபமாக அது மாறவில்லை. இதனால், தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளும் அடிப்பட்டுப் போனது.

கே. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு கட்சிக்குள் இன்னும் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், TWITTER

ப. நிச்சயமாக. எடப்பாடி அங்கு பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்டார். ஆகவே இந்த வெற்றியில் அவருக்கு முக்கியமான பங்கிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த தினத்தில் அவர் கட்சி அலுவலகத்திற்குச் செல்லும்போது, அவரை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டிருந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்கு வந்த கூட்டத்தைப் போல யாருக்கும் வந்ததில்லை.

சசிகலா வந்தபோதுகூட, ஆட்கள் அழைத்துத்தான் வரப்பட்டார்கள். ஆனால், தேர்தல் முடிவு தினத்தன்று தொண்டர்கள் தாங்களாகக் கூடினார்கள். எடப்பாடி ஒரு தலைவராக மாறிக்கொண்டிருக்கிறார் என்பதற்கு இது சான்று. தன்னுடைய தலைமையை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனை எடப்பாடி நிச்சயம் பயன்படுத்துவார்.

கே. உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் வெற்றி, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு ஒரு தன்னம்பிக்கையை அளிப்பதன் மூலம் சாதகமான சூழலை ஏற்படுத்துமா?

ப. நிச்சயமாக இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் பரவலாக நடக்கக்கூடிய ஒரு தேர்தல். அதில் எல்லாக் கட்சிகளுக்கும் வெற்றிபெறும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரப் பகிர்வு நடக்கும். பெரிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் நிதி புழங்கும். அடுத்த தேர்தல்களில் இது தி.மு.கவுக்கும் காங்கிரசிற்கும் உதவும். பெரிய உள்ளாட்சி அமைப்புகளை தி.மு.கவும் காங்கிரசும் கைப்பற்றாவிட்டால்கூட, அவர்கள் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பிடிப்பார்கள். அது அக்கட்சிகளுக்கு மிகவும் உதவும்.

கே. இந்த இடைத்தேர்தல் வெற்றியை, வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்க முடியுமா?

ப. இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. தலைமைகள் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது வெறும் இடைத்தேர்தல். அடுத்ததாக என்ன தேர்தல் நடக்குமென யாருக்கும் தெரியாது. ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அ.தி.மு.கவுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பான 11 எம்எல்ஏ வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அப்பாவு வழக்கிலும் தீர்ப்பு வரவில்லை. 11 எம்எல்ஏ வழக்கில் தீர்ப்பு வேறு மாதிரி வந்தால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கலாம். இல்லாவிட்டால் 2021தான். ஆனால், இந்த இடைத்தேர்தல் முடிவுகளை அதற்கான முன்னோட்டமாக பார்க்க முடியாது.

கே. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகள், பிரசாரங்கள் மிகவும் கவனிக்கப்பட்டன. பேசப்பட்டன. இருந்தபோதும் அக்கட்சி பெற்ற வாக்குகள் ஊக்கமளிப்பதாக இல்லை. என்ன காரணம்?

ப. என்னைப் பொறுத்தவரை, தமிழ் தேசியம் என்ற வட்டத்திற்குள் சுருங்கினால், உங்கள் ஓட்டு இவ்வளவுதான். அந்த வட்டத்திலிருந்து வெளியில் வந்தால்தான், மீதமுள்ள வாக்குகளும் கிடைக்கும். இந்தக் காரணத்தால்தான், யாருடைய கூட்டணியிலும் அவருக்கு இடமில்லாமல் போகிறது. அவர் தனித்துதான் நிற்கப்போவதாகச் சொல்லலாம். அவரை யாராவது அழைத்தார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை யாரும் அழைக்கவில்லை.

கே. தமிழ்த் தேசியம்தானே அவருடைய அடிப்படையான சித்தாந்தம்...

ப. தமிழ் தேசியம் என்பது தி.மு.கவே கையாண்ட விஷயம்தான். இந்தியா என்ற அமைப்புக்குள் நாம் நம்முடைய அடையாளத்தைக் காப்பாற்ற முடியும் என்று தெரிந்தவுடன் இதனைத் தி.மு.க மாற்றிக்கொள்கிறது. அதற்கு மாறான சூழல் வரும்போது, இந்தித் திணிப்பு போல சூழல் வரும்போது அதனை எதிர்த்து வெற்றிபெற முடிகிறது. இந்த இந்தியா என்ற அமைப்பை ஏற்காமல் வெற்றியில்லை என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.

கே. இந்தத் தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த முடிவு இடைத் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தியதா?

ப. தினகரன் இல்லாததால்தான் அவரது வாக்குகள் அ.தி.மு.கவுக்கு சென்றன என்று கருதுகிறேன். நாங்குநேரியில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள், தி.மு.கவுக்கு வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டு, அ.தி.மு.கவுக்கு வாக்களித்திருப்பதாகத்தான் இந்த வாக்கு சதவீதம் காட்டுகிறது. கமல்ஹாசனைப் பொறுத்தவரை இப்போதைக்கு எதையும் சொல்ல முடியவில்லை. கமல்ஹாசனின் ஓட்டுகள், அவர் இல்லாத நிலையில் நாம் தமிழர் கட்சிக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவருடைய வாக்குகள் எங்கே என புரியவில்லை.

கே. தேசிய அளவில் மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் படுதோல்வியடையுமென காட்டின. ஆனால், அப்படி நடக்கவில்லை. என்ன நடந்தது?

ப. இது வியப்பான தேர்தல்தான். இந்தத் தேர்தலில் மூன்று முடிவுகளை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். முதலாவதாக அல்பேஷ் தாகூரின் தோல்வி. அல்பேஷ் தாகூர் காங்கிரசை விட்டு பா.ஜ.கவில் சேர்ந்து போட்டியிட்டவர். இப்போது தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் நடந்தது. இரண்டிலும் இடதுசாரிகள் வென்றுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள ஐந்து இடங்களும் இப்போது இடதுசாரிகள் வசம் உள்ளன. இந்த மாவட்டத்தில்தான் சபரிமலை இருக்கிறது.

சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக இந்துத்துவ கட்சிகள் செய்த பிரசாரம் எடுபடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. இதனால், அங்கு காங்கிரசிற்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிகள் மிக முக்கியமானவை.

தவிர, பிஹாரில் பா.ஜ.கவின் தோல்வி மிக முக்கியமானது. ஹரியாணாவில் கிடைத்திருக்கும் முடிவுகள் வியப்பானவை. அங்கு பா.ஜ.கவுக்கு 70 இடங்கள் கிடைக்குமென்றார்கள். ஆனால், கிடைக்கவில்லை. புதிய கட்சி ஒன்று வந்திருக்கிறது. அந்தக் கட்சி பா.ஜ.கவின் பல இடங்களைப் பிடித்திருக்கிறது. அங்கு காங்கிரசின் வெற்றிக்கு என்ன விளக்கம் சொல்வதென்றே தெரியவில்லை. பலரும் காங்கிரசிற்கு பத்து - பன்னிரன்டு இடங்கள்தான் கிடைக்குமென்றார்கள். பலர் காங்கிரசை கைவிட்டு பா.ஜ.கவில் சேர்ந்தார்கள். உடல்நலம் சரியில்லாததால், சோனியா காந்தியால் பிரசாரத்திற்கு பெரிதாக செல்ல முடியவில்லை.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் காங்கிரஸ் பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில், காங்கிரசை என்சிபி தன் தோளில் சுமந்து வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. அங்கே காங்கிரசிற்குப் பல பிரச்சனைகள். சஞ்சய் நிரூபம் என்ற தலைவர் சிவசேனாவைவிட்டு காங்கிரசிற்கு வந்தார். அவரைவிட்டுவிட்டு மிலிந்த் தியோராவை அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தார்கள். அவரை முழுக்க முழுக்க புறக்கணித்துவிட்டு ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது. அப்படியிருந்தும் சரத்பவாரின் சாதுர்யமும் பிரஃபுல் படேலின் உழைப்பும் இந்த வெற்றியை தேடித் தந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னவிசின் ஆட்சியில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள். விவசாயிகள் தற்கொலை, ஆரே காடு பிரச்சனை என பல சிக்கல்கள் இருந்தன. இருந்தபோதும் அவர் வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம். அந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டிருக்கிறார்கள்.

ஆனால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் என தில்லியைச் சுற்றியுள்ள எல்லா மாநிலங்களும் எதிர்க்கட்சியின் வசம் வந்துள்ளன. ஒருவேளை ஹரியாணாவும் அந்தப் பட்டியலில் சேரலாம்.

கே. இந்தத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.கவுக்கும் காங்கிரசிற்கும் என்ன சொல்கின்றன?

ப. இதில் பா.ஜ.கவுக்கு எதுவும் சொல்வதற்கில்லை. அவர்கள் எல்லாத் தேர்தலையும் மிகுந்த முக்கியத்துவத்துடன்தான் அணுகுகிறார்கள். ஒரு தேர்தலையும் அலட்சியப்படுத்தியதில்லை. காங்கிரஸ்தான் பிரச்சனை. ராகுல்காந்தி அரசியல் வேண்டாமென முடிவெடுத்தால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட வேண்டும்.

அல்லது அரசியலில் முழு தீவிரத்துடன் செயல்பட வேண்டும். கருணாநிதி 13 வருடம் ஆட்சியில்லாமல் இருந்திருக்கிறார். கட்சியைக் காப்பாற்றியிருக்கிறார். அந்தப் பொறுமை இல்லாவிட்டால் அவர் கட்சியைவிட்டு விலக வேண்டும். இல்லாவிட்டால் கட்சி அழிவை நோக்கித்தான் செல்லும். மிக எளிதில் ஜெயிக்க வேண்டிய குஜராத், ஹரியாணா தேர்தலை விட்டுவிட்டார்கள். பெரும் மோதலைக் கொடுத்திருக்கக்கூடிய மகாராஷ்டிராவை விட்டுவிட்டார்கள். இன்னும் எத்தனை தேர்தலை காங்கிரஸ் இப்படி விடும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, ஒரு கட்சி எத்தனை தேர்தல்களில் வெல்கிறது என்பதை வைத்துத்தான் அதனை எடைபோட முடியும். அப்படிப் பார்த்தால், இந்தியாவில் பா.ஜ.க. பெரும் சாதனையை படைத்துக்கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :