காஷ்மீர் ஆளுநராகும் நரேந்திர மோதியின் முன்னாள் செயலாளர் - யார் இவர்?

நரேந்திர மோதியுடன் கிரிஷ் சந்திர முர்மு

பட மூலாதாரம், NARENDRAMODI.IN

ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறைக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின், அவை இரண்டுக்கும் புதிதாக துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிரிஷ் சந்திர முர்முவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும், ராதா கிருஷ்ணா மாத்தூரை லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் இந்திய குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

மாநில பிரிவினைக்கு பின் உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் பொறுப்பு ஏற்கவுள்ள இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31ம் தேதி முதல் அதிகாரபூர்வமாக செயல்பட தொடங்குகின்றன.

வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மலிக்கை கோவா மாநிலத்திற்கு இடம்மாற்றம் செய்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், செவினங்களுக்கான செயலாளர் கிரிஷ் சந்திர முர்முவை ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகவும், ராதா கிருஷ்ணா மாத்தூரை லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் நியமித்துள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK / SATYAPAL.MALIK

படக்குறிப்பு,

சத்யபால் மாலிக் (வலது) கோவா மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார்.

மேலும், கேராளவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளையை மிசோரம் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நியமனங்கள் இந்திய குடியரசு தலைவரால் செய்யப்பட்டாலும், உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்பதல் அளிக்க வேண்டியுள்ளது.

யார் இந்த கிரிஷ் சந்திர முர்மு?

இந்திய குடிமை பணியின் 1985ம் ஆண்டு குஜராத் பிரிவை சேர்ந்தவர்தான் கிரிஷ் சந்திர முர்மு.

பட மூலாதாரம், easy.nic.in

தற்போது இந்திய அரசின் செவினங்களுக்கான செயலாளராக பணியாற்றி வரும் 59 வயதான இவர், இந்த மாத இறுதியில்தான் ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெற்றவுடன் உடனடியாக துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு முதன்மை செயலாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் சந்திர முர்மு, அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டமும், எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

யார் இந்த ராதா கிருஷ்ண மாத்தூர்?

லடாக் யூனியன் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராதா கிருஷ்ணன் மாத்தூர், இந்திய குடிமை பணிகளின் 1977ம் ஆண்டு திரிபுரா பிரிவை சேர்ந்தவர். இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார்.

மே மாதம் 2013 முதல் 2015ம் ஆண்டு வரை மத்திய பாதுகாப்பு துறை செயலராகவும், அதற்கு முன்னர் இந்திய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

மத்திய ஜவுளி தொழில்துறை அமைச்சகத்தில் வளர்ச்சி ஆணையராகவும், அதே அமைச்சகத்தில் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்.

2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரிபுரா தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 2016ம் ஆண்டு இந்தியாவின் தகவல் தொடர்பு தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டு அந்த பதவியில் இருக்கும்போது நவம்பர் 2018ல் ஓய்வு பெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :