'இந்தியா தொழில் தொடங்க உகந்த நாடு' - முதலீடுகள் ஏன் வருவதில்லை?

  • சுரஞ்சனா திவாரி
  • பிபிசி
Indian Economy

பட மூலாதாரம், SOPA Images / getty images

படக்குறிப்பு,

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையில் உள்ள பெண் தொழிலாளர். (கோப்புப்படம்)

இந்தியாவில் தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசுவதற்கு தொழில் முனைவோர் அதிகம் தயங்கியதில்லை.

அதிகாரிகளின் அலட்சியம், ஊழல், அனுமதி வழங்குவதில் தாமதம், அதிகமான வரி, நிலம் கையகப்படுத்தல், மூலதனக் கொள்முதல் சிக்கல் ஆகியவை பற்றி தொழில் அதிபர்கள் எப்போதுமே கவலை தெரிவித்து வருகிறார்கள்.

எனினும், இந்தியா தொழில் செய்ய ஏற்ற நாடாக உள்ளது என்கிறது உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று.

உலக வங்கியின் தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் சென்ற ஆண்டு 77வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்துக்கு வந்துள்ளது. 2016இல் 130வது இடத்தில் இருந்தது இந்தியா.

முன்னேற்றத்திற்கான காரணம் என்ன?

"கடந்த ஆண்டு இந்தியா நான்கு முக்கிய சீர்திருத்தங்களை செய்து, தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக நல்ல முன்னேற்றம் கண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது," என்று உலக வங்கியின் "டூயிங் பிசினஸ் 2020" எனும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தொழில் மூடும் நிலைக்கு வரும்போது வேகமாக கிடைக்கும் தீர்வுகள், கட்டுமான அனுமதி, வரி செலுத்துதல் மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் உண்டாகியுள்ள முன்னேற்றம் ஆகியவையே அந்த நான்கு முக்கிய சீர்திருத்தங்கள்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் சர்வதேச சந்தையில் இந்தியாவின் போட்டியிடும் திறனை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ள, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் 'மேக் இன் இந்தியா' திட்டம் குறித்தும் அந்த அறிக்கை பேசுகிறது.

பட மூலாதாரம், Getty Images

"இந்திய பொருளாதாரத்தின் அளவுடன் ஒப்பிடும்போது, இத்தகைய சீர்திருத்தங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை," என்று உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தொழில் முனைவோர் இவற்றை ஒப்புக்கொள்கிறார்களா?

ரிச்சா பஜாஜ் தனது ஆடைகளில் கைவினைக் கலைகள் செய்யும் தொழிலை இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் தொடங்கினார்.

"ஜி.எஸ்.டி வரிக்கு பதிவு செய்வது புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களுக்கு இப்போது கட்டாயம். அதற்கான அரசின் இணையதளம் எளிதாகவும், தெளிவாகவும் உள்ளது," என்கிறார் அவர்.

வேறு இடங்களுக்கு பயணம் செய்து தொழிலை விரிவாக்குவதும் தற்போது எளிமையாக உள்ளது என்பது அவரது கருத்து.

பயண முகமை ஒன்றை புதிதாகத் தொடங்கியுள்ள வருண் ஹூஜாவும் தொழில் செய்வதற்கான பதிவுகளை இணையம் மூலம் செய்வது தொழில் செய்யும் சூழலை முன்னேற்றியுள்ளதாக கூறுகிறார்.

டெல்லி, மும்பைக்கு வெளியே நிலைமை முன்னேறியுள்ளதா?

புல்கித் கௌசிக் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹரியாணாவில் மருந்து கடை ஒன்றைத் தொடங்கினார்.

"கட்டுமானம், மின் இணைப்பு போன்ற பெரும்பாலான விண்ணப்பங்கள் இணையம் மூலம் செய்தால் போதும் என்பதால் நான் வெவ்வேறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை; என் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பதையும் என்னால் இணையம் மூலம் தெரிந்துகொள்ள இயலும்," என்கிறார் அவர்.

தொழில் தொடங்க இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ஷசாங்க் தீட்சித்.

இன்னும் சவாலாக உள்ளது எது?

ஜி.எஸ்.டி வரி செலுத்துவதிலும், அதிகமாக செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப்பெறுவதும் இன்னும் சிக்கல் உள்ளதாக கூறுகிறார் ரிச்சா பஜாஜ். வெவ்வேறு மாநிலங்களில் நடைமுறை வெவ்வேறாக இருப்பதால் அவரது செலவுகள் அதிகரிப்பதாக கூறுகிறார் ரிச்சா.

ஜி.எஸ்.டி வரிக்கு பதிவு செய்வது சுலபமாக இருந்தாலும், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரி விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

புதிய தொழில் தொடங்கும்போது அதிகமாக செலவாகிறது; வரி விகிதம், மின் கட்டணம் போன்றவற்றில் புதிய தொழில்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்கிறார்.

பட மூலாதாரம், கு. மதன் பிரசாத்

தொழில் தொடங்கும்போது எதற்கெல்லாம் அனுமதி வேண்டும், அவற்றை எங்கெல்லாம் பெறவேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்கிறார் வருண் ஹூஜா.

அதற்கு அரசு வழிமுறைகளை உருவாக்கினால், குழப்பங்கள் தீரும் என அவர் கருதுகிறார்.

அரசின் ஏலங்களை பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அதிகம் காலம் தேவைப்படுபவையாக இருப்பதாக புல்கித் கௌசிக் கூறுகிறார்.

"நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழில்கள் தொடங்கும்போது மின் இணைப்பு, நீர் இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பெறவே போராட வேண்டியுள்ளது, " என்கிறார் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி மெகுல் துராக்கியா.

இந்திய அரசு என்ன சொல்கிறது?

உலக வங்கியின் இந்தப் பட்டியலில் 2020ஆம் ஆண்டில் முதல் 50 இடங்களுக்குள் வர விரும்புகிறது நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு. அதை இலக்கு வைத்து பல நடவடிக்கைளை எடுத்தும் வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பியூஷ் கோயல்

2024-2025ஆம் நிதியாண்டில் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் முதல் 25 இடங்களுக்குள் வரவே இந்திய அரசு விரும்புகிறது என்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரித்துள்ளார்.

இப்போது நிலவும் பொருளாதார மந்தநிலை தொழில் செய்வோரை பாதிக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பியூஷ் கோயல், இது தற்காலிகமானதுதான் என்றும் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

முதலீடுகள் ஏன் வருவதில்லை?

இந்தியா தொழில் தொடங்க உகந்த நாடாக இருக்குமானால் ஏன் முதலீடுகள் அதிகம் வருவதில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

"தொழில் நடத்த போதிய உள்கட்டமைப்பு, முறைப்படுத்தப்பட்ட வரி நடைமுறைகள், சந்தையின் நிலைத்தன்மை, சட்ட அமலாக்கம் போன்ற பல காரணிகள் ஒரு நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் செழிக்க காரணமாக உள்ளன. இப்போது செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் அமலாக்கப்பட்டுள்ள (தொழிற்துறை தொடர்பான) சட்டங்கள் நீடிக்கும் என்று இந்தியா நிரூபிக்க வேண்டும். அதன் மூலமே வெளிநாட்டு பெருநிறுவனங்கள் முடிவெடுக்க முடியும்," என்கிறார் மெகுல் துராக்கியா.

இவை அந்நிய முதலீடுகளைப் பெற மட்டுமல்ல, பொருளாதார மந்தநிலையை வெற்றிகொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் உதவும்.

தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவினால் அரசுக்கு வரி வருவாய் கிடைப்பதுடன், தனிநபர் பொருளாதார லாபங்களும் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்கள் அதிக அளவில் தொடங்கப்படுவது, வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :