ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: அம்மா ஏன் இன்னும் வரல என்பதே குழந்தையின் கவலையாக இருக்கும்'

child borewell

பட மூலாதாரம், pixelfusion3d / getty images

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

இரவு முழுவதும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இப்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவால் குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்றது கவலையடைய வைக்கும் செய்தியாக உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், இதற்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இப்போதைய முயற்சியும் வெற்றியில் முடிந்து சிறுவன் சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையின் மனநிலை எப்படியிரும், மீட்கப்பட்டபின் அக்குழந்தை அனுபவித்த விபத்துக்கு பிந்தைய அதிர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவரும், CHES அமைப்பின் நிறுவனருமான பி. மனோராமா பிபிசி தமிழின் மரிய மைக்கேல் உடன் பேசினார்.

அவர் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

காப்பாற்ற அம்மா, அப்பா வரமாட்டார்களா - பயமும், ஏக்கமும்

திடீரென இவ்வாறு ஒரு குழந்தை ஓர் ஆழ்துளை கிணற்றில் விழும்போது, எங்கே போய் சேரும், என்ன நடந்தது, யார் செய்த தவறு, என்ன நடக்கும், என்று எதுவும் அதற்கு புரியாது என்கிறார் மனோரமா.

ஆழ்துறை கிணறு என்கிறபோது, உள்ளே போகப்போக அதிக இருட்டாக இருக்கும். இந்த வயதில் இருக்கிற குழந்தைகளுக்கு இருட்டை கண்டால் பயமிருக்கும். நம்மை காப்பாற்றி விடுவார்களா, தான் கத்துவது வெளியே இருப்பவர்களுக்கு கேட்கிறதா என்ற ஏக்கம் இருக்கும்.

சின்ன குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் ஏதாவது கேட்டால் அதற்கு ஒரு பதில் கொடுக்க வேண்டுமென நாங்கள் (மருத்துவர்கள்) சொல்வோம். இல்லாவிட்டால் அந்த குழந்தையின் மனம் அதிக ஏமாற்றமடையும்.

பட மூலாதாரம், Getty Images

எனவே, இவ்வாறு அகப்பட்டிருக்கும் குழந்தை கூச்சலிட்டு கூப்பிட்டும், யாரும் பதில் கொடுக்கவில்லை, அருகில் வரவில்லை என்றால் பயம் அதிகமாகிவிடும்.

நம்மை யாராவது காப்பாற்ற வருவார்களா, வரமாட்டார்களா என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது.

ஏழு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு தனக்கு மரணம் நிகழும் என்பது போன்றெல்லாம் சிந்திக்க தெரியாது என்பதால், இந்த குழந்தை மரணம் பற்றி சிந்திக்காது.

இருட்டு, அப்பா மற்றும் அம்மா இல்லை என்பதால் இனம் புரியாத பயம்தான் குழந்தையில் மனதில் தலைதூக்கியிருக்கும் என்று விவரித்தார் மருத்துவர் மனோரமா.

"இன்னும் அம்மா ஏன் வரல, அப்பா ஏன் வர"

இரண்டரை வயது குழந்தையின் மனதில் "இன்னும் அம்மா ஏன் வரல, அப்பா ஏன் வரல," என்பது மட்டும்தான் இருக்கும்.

படக்குறிப்பு,

கோப்புப்படம்

"ஏதோ பண்ணுறாங்க. பேசுறதெல்லாம் கேட்குது. ஆனால், ஏதோ முயற்சி பண்ணுறாங்க, நாம சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் போய் சேரல," எனபதெல்லாம் குழந்தைக்கு தோணலாம் என்கிறார் அவர்.

ஆனால், "இவ்வளவு நேரம் ஆயிருச்சி. இதுக்கப்புறம் தோத்துருவாங்களா," என்று எண்ண இன்னும் கொஞ்சம் மனப்பக்குவம் வேண்டும்.

எனவே, முயற்சிகள் தோல்வி அடைகின்றன என்பதை உணர ஆரம்பிக்கும் பயம் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் மனோரமா.

கருவிகள் அம்மா, அப்பா சொல்லி வருகிறதா? வேற்றுகிரகத்தில் இருந்து வருதா?

மேலே இந்த குழந்தையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின்போது, வண்டி சத்தம், சத்தம் கேட்குமா என்று கேட்போது, சுற்றி என்ன நடக்கிறது என்றே குழந்தைக்கு தெரியாது என்கிறார் மனோரமா.

உள்ளே வருகிற கருவிகள் நம்ம அப்பா, அம்மா சொல்லி உள்ள வருகின்றனவா, அல்லது வேற்றுகிரகத்தில் இருந்து வருதா, அல்லது வேறுயாராவது ஏதாவது செய்கிறார்களோ என்கிற கலக்கமும், பயமும் இந்த குழந்தைக்கு மிகவும் அதிகமாகும். இதனால், நம்பிக்கையைவிட அச்சம்தான் அதிகமாகும் என்கிறார் மருத்துவர் மனோரமா.

மீட்கப்பட்ட பின் தாயை பிரியாமல்...

இந்த குழந்தை மீட்கப்பட்ட பின்னர், அதற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று மனோரமா தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பின்னர், பல நாட்கள் அம்மாவை விட்டு இந்த குழந்தை பிரியவே பிரியாது. இருட்டை கண்டு பயம் ஏற்படும் என்பதால், இரவில் விளக்கை அணைத்துவிட்டால் அச்சப்பட தொடங்கிவிடும்.

புதிதாக யாராவது வந்தாலோ அல்லது ஏதோ ஒன்று வந்தால்கூட பயம் ஏற்படும்.

மனநல ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல்

இதற்கு எல்லாம் தொடர் மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) கொடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் வேறு ஏதாவது குழந்தை விழுந்து விட்டதாக படிக்கும்போது கூட, இந்த குழந்தைக்கு இந்த எண்ணங்கள் திரும்ப வருவதற்கு வாயப்புண்டு.

இந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் கவுன்சிலிங் எந்த அளவுக்கு செயல்திறன் மிக்கதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

பட மூலாதாரம், BassittART / getty images

குறிப்பாக, அம்மா வந்துருவாங்க என்கிற உறுதியைதான் வழங்க முடியும். அம்மாவிடம் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் அந்த குழந்தைக்கு தீர்வு.

இந்த குழந்தையின் நிலையில், கவுன்சிலிங் அல்லது ஆற்றுப்படுத்துதல் என்பதெல்லாம் அம்மா இருக்கணும், அம்மாவ பார்கணும், அம்மாகிட்ட போய் சேரணும் என்பது மட்டுமே.

உட்கார வைத்து பேசி, உன்னைப் பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று சொன்னாலும் அந்த குழந்தைக்கு புரிய போவதில்லை.

விவரம் தெரியவரும்போது, கஷ்டப்பட்டாலும் உன்னை காப்பாற்றி விடுவோம் என்று என்ற நம்பிக்கையை குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஆபத்து மிக்க அல்லது விபத்து நடக்க வாய்ப்புள்ள இடங்களுக்கு தனியாக செல்வது, அங்கெ தனியாக விளையாடுவது போன்றவற்றை குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இது மாதிரியானவற்றில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்பதை எல்லாம் புரியும்படி எடுத்து சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் மனோரமா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :