சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்

சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).

பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.

இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.

மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.

இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்தனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Daily Thanthi

இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.

ஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.

அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.

ஆனால் அதுவும் குழந்தை இருந்த இடத்தின் அருகே அதிகாலை 4 மணிக்கு சென்றது. அதற்கு கீழ் மீண்டும் அந்த கருவியை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். அதே நேரம் அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த கருவியின் விட்டத்தை குறுகலாக்கி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்க மீட்பு குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.

இதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவினர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்று மீட்பு பணி இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது. குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினர் வந்தனர். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒவ்வொரு குழுவினரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். இந்த குழுவினர் நவீன கருவிகளை கொண்டு வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மத்திய மண்டல துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தென்மண்டல துணை இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

இந்து தமிழ்: "பாஜக-ஜேஜேபி கூட்டணி அரசு இன்று பதவியேற்பு"

பட மூலாதாரம், இந்து தமிழ்

ஹரியாணாவில் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. இரண்டாவது முறையாக மனோகர் லால் கட்டார் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்கிறார்.

ஹரியாணாவில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியிடப் பட்டன. ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸுக்கு 31 இடங்கள் கிடைத்தன. முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜன நாயக ஜனதா கட்சி 10 தொகுதி களில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய லோக் தளம், ஹரியாணா லோகித் கட்சிக்கு தலா ஒரு தொகுதி கிடைத்தது. ஏழு தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளே, 7 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை, சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்தனர்.

இதனிடையே, 10 எம்எல்ஏக் களைக் கொண்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாஜக அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அவர் அறிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதா லாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, துஷ்யந்த் சவுதாலா சந்தித்துப் பேசினார். இதன்பின் இருவரும் நிருபர்களுக்குக் கூட்டாகப் பேட்டியளித்தனர்.

அமைச்சர் அமித்ஷா நிருபர்களிடம் கூறும்போது, "ஹரி யாணா மக்களின் தீர்ப்பை ஏற்று பாஜக-ஜேஜேபி கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளும் இணைந்து ஹரியாணாவில் ஆட்சி அமைக்கும். பாஜக மூத்த தலைவர் முதல்வராகவும் ஜேஜேபி மூத்த தலைவர் துணை முதல்வராகவும் பதவியேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக 40, ஜேஜேபி 10, சுயேச்சைகள் 7 என பாஜக கூட்டணியின் பலம் 57 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். இதில் பாஜக சட்டப் பேரவைத் தலைவராக மனோகர் லால் கட்டார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு அவர், ஆளுநர் சத்யதேவ் நரேனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். இதன்படி 2-வது முறையாக ஹரியாணா முதல் வராக மனோகர் லால் கட்டார் இன்று பதவியேற்கிறார். ஜன நாயக ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்கிறார்.

ஆளுநரை சந்தித்த பிறகு மனோகர் லால் கட்டார் நிருபர்களிடம் கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு பாஜக-ஜேஜேபி கூட்டணி அரசின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நான் முதல்வராகவும் துஷ் யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்கிறோம். சில அமைச்சர்களும் பதவியேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ளார். மகனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவருக்கு 14 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சண்டிகரில் இன்று நடை பெறும் புதிய அரசின் பதவியேற்பு விழா வில் அவர் பங்கேற்கிறார்.

ஹரியாணா லோகித் கட்சியின் தலைவரும் சிர்சா தொகுதி எம்எல்ஏவுமான கோபால் கண்டா பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார். ஆனால் அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது ஆதரவை ஏற்கக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறும் போது, "பாஜக பொது வாழ்வில் நேர்மையையும் தூய்மையையும் விரும்பும் கட்சி. கோபால் கண்டா வின் ஆதரவை பாஜக ஏற்க வில்லை" என்று தெரிவித்தார்.

'கண்டிப்பாக 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் ' - பாஜகவிடம் முரண்டுபிடிக்கும் சிவசேனா - டைம்ஸ் ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், ANI

அண்மையில் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளிலும் வென்ற நிலையில், அங்கு பாஜக -சிவசேனா கூட்டணி ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு, பாஜக, சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் வகையில், எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தங்களின் கோரிக்கை என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்ததாக செய்திகள் தெரிவித்தன.

ஆனால், சிவசேனாவின் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை எனவும், 105 இடங்களை வென்று அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் தங்களிடமே 5 ஆண்டுகளும் முதல்வர் பதவி இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் பட்சத்தில் தாங்கள் மாற்றுவழிகளை நோக்கி சிந்திக்க நேரிடும் என சிவசேனா ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக 105 இடங்களை வென்றது.

இது 2014ல் வென்றதைவிட பாஜகவின் வெற்றி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளுக்கு மேல் குறைந்துள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிகளில் வென்றுள்ளது.

தினமணி: "தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய பாதுகாப்புப் படை காவலர்"

பட மூலாதாரம், Dinamani

கோவை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழ இருந்த பயணியைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலரை சேலம் கோட்ட மேலாளா் சுப்பாராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ஏராளமானோர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதனால் கோவை, வட கோவை, போத்தனூா் ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாலை முதல் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 56712)பாலக்காட்டிலிருந்து கோவை ரயில் நிலையத்தின் 3ஆவது நடைமேடைக்குச் சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு வந்தது. பின் 8.20 மணிக்கு ரயில் மீண்டும் புறப்பட்டபோது வேகமாக ஓடிச்சென்ற பயணி ஒருவா் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, படிக்கட்டில் கால் தவறி பின்புறமாக விழ இருந்தார்.

அந்த சமயத்தில், அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் பி.வி.ஜெயன் ஓடிச்சென்று அந்தப் பயணியை விழாமல் தாங்கிப் பிடித்து ரயில் பெட்டிக்குள் தள்ளினார். இதனால், நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொள்ளாமல் அந்தப் பயணி பாதுகாப்பாகப் பெட்டிக்குள் சென்று விழுந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த பயணிகள் பலரும், காவலர் பி.வி.ஜெயனை பாராட்டினர். நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி கட்செவி அஞ்சல், முகநூல்களில் பரவியதால் மக்கள் பலரும் காவலர் பி.வி.ஜெயனை பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தகவலறிந்த சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், காவலர் பி.வி.ஜெயனை பாராட்டினார். கோவை ரயில் நிலைய இயக்குநர் சதீஷ் சரவணன், காவலர் பி.வி.ஜெயனுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கிச் சிறப்பித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : "மழைக்கு வாய்ப்பு"

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 5 செ.மீ. மழையும், தேவாலாவில் 4 செ.மீ. மழையும், பள்ளிப்பட்டு, தாம்பரம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தென் தமிழக மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தெற்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சிக்கியிருக்கும் நடுக்காட்டுப்பட்டியில் கன மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :