சுஜித்தின் தற்போதைய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள் #BBCGroundReport

தாயும், சேயும்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அங்குள்ள கள நிலவரத்தை 10 முக்கிய தகவல்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

1. சிறுவன் சுஜித் சுமார் 80 லிருந்து 90 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கீழே சென்றுவிடாமல் இருக்க சிறுவனின் கைகள் பிடித்து (ஏர் லாக்) வைக்கப்பட்டிருக்கின்றன.

2. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து சுமார் 3 மீட்டர் தூரத்தில் ரிக் இயந்திரங்கள் கொண்டு ஒரு புதிய துளை போடப்படுகிறது. அந்த குழி ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் விட்டம் உடையதாகதோண்டப்படுகிறது.

3. முதலில் குழித் தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்துவிட்டதால், நேற்று இரவு இரண்டாவது 'ரிக்' இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.

4. ரிக் இயந்திரம் பழுதானதற்கு ஒரு முக்கிய காரணம் புதிதாக தோண்டப்படும் இடத்தில் இருக்கும் பாறைகள். 10 அடி ஆழத்திலேயே பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தின் பற்கள் சேதம் அடைந்துள்ளன.

5. புதிதாக தோண்டப்படும் ஆழ்துளை கிணறு சுமார் 100 அடிக்கு தோண்ட பேரிடர் மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

6. நூறு மீட்டர் தோண்டியவுடன் பக்கவாட்டில் சிறுவன் சுஜித் விழுந்த குழியை நோக்கி டிரில் செய்யப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

7. புதிதாக தோண்டப்படும் குழியில் 2 தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று சிறுவன் அகப்பட்டிருக்கும் குழிக்கு செல்வதற்கான டிரில்லிங் வேலையை செய்ய உள்ளனர்.

8. இந்த மீட்புப்பணியில் சுமார் 70 பேர் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

9. சுஜித் மீட்கப்பட்டவுடன் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு தயார் நிலையில் மருத்துவ குழு இருக்கிறது.

10. சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :