சுஜித் உயிரிழப்பு: 82 மணிநேர மீட்புப்பணி தோல்வி

சுஜித் வில்சன்

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் உயிரிழந்தார். சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சுஜித்தை உயிருடன் மீட்க 82 மணிநேரமாக நடந்த மீட்பு பணி தோல்வியில் முடிந்துள்ளது,

இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சுஜித்தின் உடல் இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அப்போது தெரிவித்தார்.

சுஜித் யார்? உள்ளே விழுந்தது எப்படி?

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களின் இரண்டு வயது மகன் சுஜித் வில்சன்.

கட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார்.

ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.

இந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது.

இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துவங்கின. குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது.

இம்மாதிரி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பிறகு கயிறு மூலம் சுருக்கைப் போல மாட்டி, குழந்தையை மேலே இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கைகள் சரியாகச் சிக்கவில்லை.

இதனிடையே மண் மேலும் சரிந்ததால், 28 அடியில் இருந்த குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றது. அப்போது குழந்தை கிட்டத்தட்ட 65 அடி முதல் 70 அடி ஆழத்தில் இருக்கலாம் என கருதப்பட்டது.

'கைகள் தெரிகின்றன'

சிறுவன் சுஜித் விழுந்த இடத்துற்கு அருகே தோண்டப்படும் பகுதியில் 98 அடி வரை குழி தோண்டி பின்பு அதை சுஜித் விழுந்த பள்ளத்தோடு இணைக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் ஞாயிறன்று கூறியிருந்தார்.

ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் சில மணிநேரத்தில் அதிநவீன ரிக் இயந்திரம் வந்துவிடும் என்றும், 27 மீட்டரில் குழந்தையின் கைகள் ஏர் லாக் மூலம் இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சுஜித்தின் நிலை குறித்து தெரிவித்த அவர், கேமரா மூலம் பார்க்கையில் குழந்தையின் கைகள் தெரிவதாகவும், உள்ளே வழங்கப்பட்டு வரும் ஆக்ஸிஜனை குழந்தை எடுத்து கொள்கிறானா என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிறுவன் சுஜித் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதனை அவர் தெரிவித்தார்.

சுஜித் குழியில் சிக்கிக் கொண்ட தகவலை ஒரு மணிநேரத்தில் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டவுடன், நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடி மீட்புப்பணி முயற்சிகள் அனைத்தும் பின்னடைவை சந்தித்து விட்டதால், நவீன கருவியை கொண்டு வந்து மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

பின்னர், திங்கள் கிழமை இரவு 7.30 நிலவரப்படி குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக தோண்டப்படும் மீட்புக் குழி 65 அடி ஆழத்தை எட்டியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :