ப்ரியா பாபு: திருநங்கைகளின் கல்விக்காக போராடும் பெண்ணின் கதை #iamthechange

  • கிருத்திகா கண்ணன்
  • பிபிசி தமிழ்
ப்ரியா பாபு: திருநங்கைகளின் கல்விக்காக போராடும் பெண்ணின் கதை

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் எட்டாவது அத்தியாயம் இது.)

"இந்தியாவில் மூன்றாம் பாலினத்தை ஏற்கும் பலரை அவர்களின் குடும்பத்தினர் விலக்கி வைக்கின்றனர். இந்த சூழலில், அப்படிப்பட்ட மாணவ மாணவியரால் தங்களின் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போகிறது. இவ்வாறு பாதியில் படிப்பை நிறுத்துவதே திருநங்கை, திருநம்பிகளின் வாழ்க்கையில் ஏற்படும் பெரும் தவறுகளுக்கு ஆரம்பப்புள்ளியாக உள்ளது" என்கிறார் ப்ரியா.

மதுரையில், திருநங்கைகள் ஆவணக் காப்பகம் என்ற ஒரு காப்பகம் மற்றும் நூலகத்தை நிர்வகித்து வருகிறார் ப்ரியா பாபு.

ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த சோதனைகளும், தடைகளும் எப்படி இந்த ஆவண காப்பகத்தை தொடங்க தன்னை ஊக்குவித்தன என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ப்ரியா பாபு.

ஆரம்ப கால சோதனைகள்

பள்ளி பருவத்தில் தன்னை பெண்ணாக உணர்ந்த ப்ரியா பாபு, அதை யாரிடம் கூறுவது என்று தெரியாமல் வருந்தியதாக கூறுகிறார்.

" எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் யாரிடம் கூறுவேன்? யார் கேட்பார்கள்? யாருமே இல்லை. நான் அம்மாவைப் பார்த்துதான் வளர்ந்தேன். அவரைபோலவே நானும், ஆடை, சிகை அலங்காரம் என செய்யத்தொடங்கினேன். என் குடும்பம் என்னை ஒதுக்கிய போது, வேறு வழியில்லாமல் நானும் மும்பை சென்றேன்" என்று நம்மிடம் பேசத்தொடங்குகிறார் ப்ரியா பாபு.

படக்குறிப்பு,

வாடாமல்லி

சில காலம் மும்பையில் வாழ்ந்த ப்ரியாவும், பிச்சை எடுத்தார். பாலியல் தொழிலிலும் தள்ளப்பட்டார். அப்போது தன்னால் ஈட்டப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்க பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

"அப்படி நான் வாங்கிய புத்தகங்களில், வாடாமல்லி என்ற புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் வரும் முக்கிய கதாப்பாத்திரம் ஒரு திருநங்கை. அந்த கதாபாத்திரம், சமூகத்தில் உள்ள பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும். இறுதியில் அந்த சமூகத்திற்கு போராடும். முடிவில் ஒரு போராளியாக மாறும். அதை படித்தபோது எனக்கு பெரிய உத்வேகம் கிடைத்தது. அந்த நிமிடத்தில்தான் எனக்கு நாமும் ஏன் ஒரு போராளி ஆகக்கூடாது? என்று தோன்றியது. அங்கிருந்துதான் நான் நிறைய படிக்கவும், எழுதவும் தொடங்கினேன்." என்று அவர் கூறுகிறார்.

அதிலிருந்து, திருநங்கைகள் குறித்த தகவல்களை சேகரிக்க தொடங்கினார் ப்ரியா. அவர் மீண்டும் தமிழகத்திற்கு வந்தபிறகும் இந்த பணிகள் தொடர்ந்தன.

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

மையத்திற்கான தேவை என்ன?

"இந்த மையம் மூலமாக நாங்கள் இரண்டு விதமான பணிகளை செய்கிறோம். முதலில், பள்ளி கல்லூரிகளில் சென்று நாங்கள் விழிப்புணர்வு அளிக்கிறோம். அங்கு ஏதேனும் ஒருவர் தங்களை வேறு பாலினத்தவராக உணர்ந்தால், அதை முன்வந்து சொல்ல ஒரு இடம் இருக்கிறது என்பதை நாங்கள் மாணவ மாணவியருக்கு விளக்குகிறோம். இதன்மூலம், சில மாணவர்கள் எங்களிடம் வந்து பேசியுள்ளார்கள். அவர்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளார்கள். அதேபோல, சிலர் அவர்களின் சகோதர சகோதரிகள் இப்படி உணர்வதாக கூறியுள்ளார்கள்."

"இப்படி ஒரு வழி அவர்களுக்கு இருந்தாலே, அவர்களுக்கு யோசிக்க இடம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் எங்களிடம் வரும்போது, எங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து படித்துப்பார்க்க சொல்கிறோம். அது அவர்களுக்கு மேலும் புரிதலை அளிக்கும்."

"மற்றொன்று, கல்லூரி மாணவ மாணவியருக்கு, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து அனைத்து தகவல்களும் கிடைக்கும் ஒரு இடமாக இது அமைய வழிவகை செய்துள்ளோம். பல ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கான ஆவணப்படங்கள், புத்தகங்கள், வரலாற்று தரவுகள் ஆகியவற்றை நாங்கள் அளிக்கிறோம். இவையும், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க உதவும்."

கல்வியே சிறந்த வழி

கல்வி வழங்குவதன் மூலம், ஒருவர் தவறான எந்த பிரச்சனையிலும் சிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அவரின் வாழ்க்கையை சரியான வழியில் நகர்த்தவும் இது உதவும் என்பதை உணர்ந்ததால், இந்த பணியில் ஈடுபடத் தொடங்கியதாக ப்ரியா கூறுகிறார்.

"மூன்றாம் பாலினமாக உணரும் பெரும்பான்மையானவர்கள் கல்வியை தொடர்வதில்லை. அந்த சூழலில், இத்தகைய ஒரு மையம், அவர்களின் உணர்வுகளை கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைக்கான வழிமுறையை அளிக்கும்."

"கல்வி இல்லாததே பல திருநங்கை/திருநம்பிகளுக்கு சிறந்த மேற்படிப்பு அல்லது வேலைக்கான வாய்ப்பை கிடைக்க விடாமல் செய்கிறது. திருநங்கை, திருநம்பிகளை பணியில் அமர்த்த தற்போது சிலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்ட சூழலில், இந்த வாய்ப்புகளைப் பெற, அவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போது, தானாக எல்லா பணிகளில் அவர்களுக்கும் இடம் கிடைக்கும், அவர்களும் இணைந்த ஒரு சமத்துவமான சமூகம் உருவாகும்." என்று கூறுகிறார் ப்ரியா பாபு.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :