எஸ்.ஏ.பாப்டே - இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர்தான்

எஸ்.ஏ.பாப்டே

பட மூலாதாரம், Getty Images

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் சரத் அரவிந்த் பாப்டேவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

யார் இந்த பாப்டே?

நாக்பூரில் பிறந்த பாப்டே, நவம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். இதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பாப்டேவின் பெயரை பரிந்துரைத்தார். பாப்டே 18 மாதங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர், தாம் ஓய்வு பெறும் ஒரு மாதத்திற்கு முன்பு அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கம். அதையே நீதிபதி ரஞ்சன் கோகாய் பின்பற்றியுள்ளார்.

ஆனால், பரிந்துரை ஆவணத்தின் நகலை, பாப்டேவிடம் அளிப்பதற்கு முன்பாகவே, மற்ற நீதிபதிகளுக்கு இனிப்புகளை வழங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். அந்த பரிந்துரை கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க பாப்டே பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சவால்கள் என்ன?

நீதித்துறையில் சில சீர்திருத்தங்களை நிச்சயம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் பாப்டேவிற்கு, அவர் பதவி வகிக்க உள்ள 18 மாதங்களில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்துவது என்பது சவாலாகவே இருக்கும்.

நிலுவையில் உள்ள வழக்குகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது ஒரு பெரிய சவாலாகும். இந்திய நீதிமன்றங்களில் 3.53 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 58,669 வழக்குள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 40,409 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் 5,535 நீதிபதிகள் குறைவாக இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு ஆண்டும் பதியப்படும் வழக்குகள் அதிகரித்து வருவதால், நிலுவையில் உள்ள வழக்குகளும், அதிமாகின்றன. இது பாப்டேவிற்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருக்கும்.

விசாரணை கைதிகளாக மட்டும் நான்கு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது மற்றொரு முக்கிய விஷயம். பல வழக்குகள் பாதி விசாரணையில் இருக்கின்றன. பலராலும் ஜாமின் பெற முடியாத நிலை.

2040ஆம் ஆண்டில், இந்திய நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை 15 கோடியாக அதிகரிக்கும் என்றும், இவற்றை விசாரிக்க 75,000 நீதிமன்றங்கள் தேவைப்படும் என்றும் தேசிய நீதிமன்ற நிர்வாக அமைப்பு கணித்துள்ளது.

உலகமயமாக்கத்தால், வணிக ரீதியான வழுக்குகளும் ஒரு பக்கம் அதிகரிக்கும். மனுதாரர்களுக்கு நீதி கிடைக்கப்பெறுவதில் கவனம் செலுத்தப் போவதாக கூறியிருக்கும் நீதிபதி பாப்டேவிற்கு இவையெல்லாம் பெரும் சவாலாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கு இடையே உள்ள உறவும் சிறப்பாக இல்லை. நாடாளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றம் அதிகம் தலையிடுவதாக பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனாவ், அரசாங்கம் நிலைகுலைந்து போகும் பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டுதான் ஆக வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

நீதிபதிகள் நியமன விவகாரங்களில் கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்ற விஷயத்திலும் சர்ச்சை ஏற்பட்டது.

எப்ரல் 24, 1956ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்த நீதிபதி பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு, சட்டம் படித்து முடித்தார். முதலில் பாம்பே நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர் 1998ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார்.

29 மார்ச், 2000 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் பாப்டே. அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

பாப்டேவின் குடும்பத்தில் பல வழக்கறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவரது தாத்தாவும் ஒரு வழக்கறிஞர்தான். பாப்டேவின் தந்தையான, அர்விந்த் பாப்டே, 1980 மற்றும் 1985ல் மகாராஷ்டிராவின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தார்.

ஆதார் வழக்கு, என்ஆர்சி அசாம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பாப்டே பங்கு வகித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :