காஷ்மீருக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்கள் - நோக்கம் என்ன?

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியோடு பிரதமர்

பட மூலாதாரம், PIB

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பறிக்கப்பட்ட பின் முதல்முறையாக இத்தகைய பயணத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பல இடங்களுக்கு செல்லும் இந்த ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு, களத்திலுள்ள உண்மையான நிலவரங்களை தெரிந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னால், இந்த பிரதிநிதிகள் குழு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்தது.

இந்த ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகளில் பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இவர்கள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், PIB

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலது சாரி கருத்தியல் சார்புடையவர்கள் என்று சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது,

முன்னதாக, காஷ்மீருக்கு செல்ல அமெரிக்க செனட் அவை உறுப்பினர் கிரிஸ் வான் ஹோலன் விடுத்த வேண்டுகோளை இந்தியா ஏற்றுகொள்ளவில்லை.

இந்திய தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் காஷ்மீருக்கு செல்வதை தடைசெய்திருக்கும் அரசு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை செல்ல அனுமதிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது.

“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்கு செல்வதை தடை செய்துள்ள நிலையில், ஐரோப்பாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஏற்பாடு செய்த பயணத்திற்கு வரவேற்கப்பட்டுள்ளனர்" என்று காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

திங்கள்கிழமை மாலை இந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து, காஷ்மீர் உள்பட வர்த்தகம் தொடர்பான பல்வேறுபட்ட பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடினர்.

தீவிரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் பயங்கரவாதம் உலக நாடுகள் இன்று எதிர்கொள்ளும் மிகபெரிய பிரச்சனை என்று எந்தவொரு நாட்டையும் பெயர் குறிப்பிடாமல் நரேந்திர மோதி தெரிவித்தார்.

"வேற்றுமையில் ஒற்றுமை காணும், ஜனநாயக சமூகங்களான இந்தியாவும், ஐரோப்பாவும் இன்று எதிர்கொள்ளும் மிக பெரிய சவால்கள் தீவிரவாதமும், அடிப்படைவாதமும் என்று மோதி தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும், உதவி செய்யும் அல்லது இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் நிறுவனங்கள், இத்தகைய கொள்கைகளை கொண்டுள்ளோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவற்றை பொறுத்துகொள்ள முடியாது" என்று மோதி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு காஷ்மீருக்கு பெரும் எதிர்பார்ப்போடு செல்வதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் லிபரல் கட்சியின் தலைவர் பில் நியூட்டன் டன் கருத்து தெரிவிக்கையில், "காஷ்மீர் நிலமை பற்றி மக்களிடம் இருந்து பல தகவல்கள் கேட்டறிந்துள்ளேன். களத்திற்கு சென்று உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறோம்" என்றார்.

"எல்லாரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்பும் நாங்கள் உள்ளூர் மக்கள் சிலரிடமும் பேச இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த பிரதிநிதிகளின் பயணம் ரத்து செய்யப்பட வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பயணத்தை இந்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது நமது தேசிய கொள்கைக்கு எதிராது. அறநெறிக்கு புறம்பான இந்த பயணத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்" என்று ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி இந்தப் பிரச்சனை தொடர்பாக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :