சுஜித் மரணம்: உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா?: சென்னை உயர்நீதி மன்றம்

சுஜித்
படக்குறிப்பு,

சுஜித்

உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஆழ்துளைக் கிணறு தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

திருச்சி மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு ஒன்றில் 2 வயதுச் சிறுவன் சுஜித் விழுந்து, உயிரிழந்தான். அவனை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் அவர்களை மீட்க 6 விதமான தொழில் நுட்பங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சில மணி நேரங்களிலேயே குழந்தைகளை உயிருடன் மீட்டுவிடலாம் எனவும் சுஜித்தை மீட்கும் விவகாரத்தில் இந்தத் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தவில்லையெனவும் கூறியிருந்தார்.

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2010ஆம் ஆண்டே பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டியிருந்த பொன்ராஜ், அந்த உத்தரவின்படி ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்தது என்றும் ஆனால், அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆகவே, இது தொடர்பாக தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்; கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என பொன்ராஜ் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பினர். "ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்கள் எங்காவது பராமரிக்கப்படுகின்றனவா? இதுவரை மாநிலம் முழுவதும் எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? தோண்டப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை? மாநில அரசு வகுத்த விதிமுறைகளை மீறியவர்கள் எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் தொடர்பான சட்டத்தையும் சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்தப்படுகிறது. பிறகு அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் யாரும் எந்த ஆய்வும் செய்வதில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதிலை நவம்பர் 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தவிட்டு, வழக்கை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :