சுஜித் தந்தை உருக்கம்: "ஆழ்துளையில் விழும் கடைசி குழந்தை என்னுடையதாக இருக்கட்டும்"

  • மு.ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக.
சுஜித் மற்றும் அவனின் தாய்

"ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறக்கும் கிடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும்," என்கிறார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கு வெட்டி வைத்திருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். பெரும் போராட்டத்திற்கு பிறகு சுஜித் இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

சுஜித்தின் உயிரை பறித்த அந்த ஆழ்துளை கிணறு சுஜித்தின் தாத்தா காலத்தில் தோண்டப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு குடும்பத்துடன் 10 வருடமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பம் தண்ணீருக்காக 600 அடிக்கு ஆழ்துளை கிணற்றை தோண்டியுள்ளது. ஆனால் அதன் பின் தண்ணீர் வராததால் அதனை மண் போட்டு மூடிவிட்டனர் தனது பெற்றோர் என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சுஜித்தின் தந்தை.

"அதன்பிறகு அனைவரும் அந்த குழி குறித்து மறந்துவிட்டனர். அது அடைக்கப்பட்டுவிட்டது என்றே அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். எனவே யாரும் அதை பெரிதாக எண்ணவில்லை" என்கிறார் சுஜித்தின் தந்தை.

சுஜித்தின் தந்தை பிரிட்டோ அரோக்கியதாஸ் மற்றும் தாய் கலா மேரிக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டு அவர்களின் மூத்த மகன் புனித் பிறந்தான்.

அதன்பிறகு 2017ஆம் ஆண்டு சுஜித் பிறந்துள்ளான்.

சுஜித்தின் அண்ணன் புனித் சுட்டியான குழந்தை. ஆனால் சுஜித் அவனைக்காட்டிலும் சுட்டி. தனது தாயிடம் மிகவும் பாசமாக இருக்கக்கூடியவன். அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பான்.

தனது முன்னோர்களை போல சுஜித்தின் தந்தை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தண்ணீர் இல்லாததால் அதனை விட்டுவிட்டு தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சுஜித் அந்த குழிக்குள் விழுந்த அன்றைய பொழுது எப்போதும் போல் இயல்பானதாகவே விடிந்துள்ளது. அவர்கள் என்றைக்கும் போல் ஒன்றாக அமர்ந்து குடும்பமாக காலை உணவு உண்டுள்ளனர்.

அவர்கள் காலை உணவருந்திக் கொண்டிருக்கும்போதே புனித்தின் பள்ளி வாகனம் வர அவனை அதில் ஏற்றி விட்டு, தனது வீட்டிலிருந்து 20 கிமீட்டர் தொலைவில் உள்ள வையம்பட்டி என்ற இடத்துக்கு தனது பணிக்கு சென்றுள்ளார் பிரிட்டோ.

வீட்டில் சுஜித் எப்போதும் போல் விளையாடிக் கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் சுஜித்தின் உறவினர்களே எனவே அவன் அந்த இடத்தில் அங்கும் இங்கும் சென்று ஓடியாடி விளையாடுவதுண்டு.

அன்று சுஜித்தின் தாய் எப்போதும் போல தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கலாமேரிக்கு அந்த குழி இருப்பது தெரியாது. அங்குதான் ஒரு காலத்தில் சுஜித்தின் தாத்தா விவசாயம் பார்த்து வந்துள்ளார்.

சுஜித்தின் தந்தை அந்த குழி தோண்டும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அன்று சுஜித் எப்போதும் போல விளையாடிக் கொண்டிருக்கும் சம்யத்தில் திடீரென அந்த குழிக்குள் விழுந்தார். அவரின் தாய் கலாமேரி கண் முன்னால் அனைத்தும் நடந்து விட்டது. மாலை 5.30-5.40 மணிக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துவிட்டது.

அதன்பிறகு அவர்கள் சுஜித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர். முடியவில்லை. சுஜித்தின் தந்தைக்கு சுமார் 6 மணியளவில் தொலைபேசியில் அழைத்தனர்.

அப்போது அவர் அங்கு வரும்போது குழந்தை 20-22 அடி ஆழத்தில் இருந்துள்ளான்.

அப்போது அந்த குழந்தை அழும் சத்தம் கேட்டதாகவும், சுஜித்திடம் அவனின் தாய் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றனர். பின் அவர்கள் போலீஸார் மற்றும் தீயனைப்பு துறைக்கு தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் குறித்து ஊர் மக்களில் சிலர் குற்றச்சாட்டுகளையும் வைக்கின்றனர். ஆனால் சுஜித்தின் தந்தை, அரசாங்கம் நல்ல முயற்சி எடுத்தது. அனைவரும் துரிதமாக செயல்பட்டனர் என்றார்.

மேலும், "இம்மாதிரியான சம்பவம் முதலும் கடைசியானதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடைசி குழந்தை என்னுடையதாகவே இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

அதே சமயம் "சமூக ஊடகங்களில் நான் அந்த குழியை தோண்டியதாகப் பேசுகின்றனர் ஆனால் அது உண்மையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :