காஷ்மீரில் சுற்றுலா செல்ல உகந்த சூழல் திரும்பிவிட்டதா? - பிபிசி கள ஆய்வு

  • மஜித் ஜஹான்ஹிர்
  • குல்மார்க், பிபிசி இந்தி சேவைக்காக
tourists returning to Kashmir

பட மூலாதாரம், Getty Images

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள குல்மார்கில் உள்ள ஓய்வு விடுதிகளில் அரிதாகவே சுற்றுலாப் பயணிகள் வந்து அதன் அழகை ரசிக்கின்றனர்.

வரக்கூடிய நாட்களில் சுற்றுலாத் துறை மீண்டும் சூடுபிடிக்கும் என அங்கு சுற்றுலா தொழிலை சார்ந்துள்ளவர்கள் நம்புகின்றனர். குல்மார்க் செல்லும் சாலைகள் கூட்ட நெரிசல் இன்றியே காணப்படுகின்றது.

குல்மார்கில் உள்ள ஓய்வு விடுதியில் உள்ளவர்களை பிபிசி சந்தித்தபோது அங்கு கூட்டம் குறைவாக இருப்பது குறித்து மகிழ்ச்சியாகவே அவர்கள் உணர்ந்தனர்.

அதே சமயம் அவர்கள் கேட்ட பல கெட்ட செய்திகள் உண்மையில்லை என்றும் தெரியவந்தது என்கின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த கொய்னி கோஷ் கடந்த வியாழனன்று தனது பெற்றோருடன் குல்மார்க் வந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன் கோஷ் குடும்பத்தின் காஷ்மீருக்கு வர வேண்டும் என்ற கனவு, தற்போது நனவாகியுள்ளது. அவர்கள் காஷ்மீர் குறித்து பல கெட்ட செய்திகளை கேட்டதாகவும், ஆனால் இங்கு வந்து பார்த்ததும் அது பொய் என்று தெரிந்ததாகவும் கூறுகிறார்கள்.

"மக்கள் இங்கு சுடப்பட்டனர் என்றும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் சூழல் இங்கு மாறாக உள்ளது. காஷ்மீர் மக்கள் எங்களை நேசிக்கின்றனர். அவர்கள் உதவிகரமாக உள்ளனர். நாங்கள் பஹல்கமில் உள்ளோம். இங்குள்ள உள்ளூர் மக்களின் வரவேற்பும் கனிவும் வியக்கத்தக்கதாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு ஒவ்வொரு தருணமும் வழிகாட்டுகின்றனர். பஹல்கமின் உள்ளூர் மக்கள், இரண்டரை வருடம் கழித்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீங்கள்தான் என்று தெரிவித்தனர். அவர்கள் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தனர். நாங்கள் பஹல்கமிற்குதான் முதலில் சென்றோம். அங்கு எங்களை தவிர வேறு யாரும் இல்லை."

பட மூலாதாரம், Getty Images

"இங்கு வந்ததிலிருந்து இணைய வசதி இல்லை; எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் இல்லை. ஆனால் இணையம் இல்லாமல் சில நாட்கள் வாழ்வது நல்லதுதான்."

கொல்கத்தாவிலிருந்து வந்த மற்றொரு சுற்றுலாப் பயணி சாரவ் கோஷ், குல்மார்கில் குதிரை சவாரி ஏற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

"காஷ்மீருக்கு வருவதற்கு முன், காஷ்மீர் மக்கள் எங்களின் எதிரிகள் என்று நினைத்தோம். ஆனால் இங்கு நிலைமை வேறாக இருந்தது. எங்களுக்கு காஷ்மீர் குறித்து எதிர்மறையான பல எண்ணங்கள் இருந்தன. ஆனால் காஷ்மீரில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதர சகோதரிகள் போல வாழ்கின்றனர். காஷ்மீர் மக்கள் அற்புதமான மனிதர்கள். இங்குள்ள மனிதர்களின் இயல்பை பார்த்து எங்களுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டு விட்டது," என்கிறார் சாரவ்.

ஆனால் அலைபேசி மற்றும் இணைய வசதி இல்லாததால் சில பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது என்கிறார் அவர். "இங்கு போஸ்ட் பெய்ட் அலைபேசி சேவைகள்தான் வேலை செய்கின்றன. எனவே தொலைதூரத்தில் உள்ள எங்கள் உறவினர்களிடம் எங்களால் பேச முடியவில்லை. கடந்த சில தினங்களில் நாங்கள் பல படங்களை எடுத்தோம் ஆனால் எங்கள் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அவற்றை அனுப்ப முடியவில்லை. கொல்கத்தாவில் உள்ள எங்கள் உறவினர் ஒருவர் காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டார். ஆனால் எங்களால் அனுப்ப முடியவில்லை," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு பிரச்சனை காஷ்மீரில் உள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன என்கிறார். சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுபாடுகளை தளர்க்கப்போவதாக அக்டோபர் 10ஆம் தேதி அரசு அறிவித்தது. சட்டப்பிரிவு 370வை ரத்து செய்வதற்கு முன் இங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்தீரிகர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற அரசுக் கேட்டுக் கொண்டது.

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு முன் அரசு அங்கு ஆயிரக்கணக்கான படையினரை குவித்தது அங்குள்ள பொதுமக்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது.

ஆகஸ்டு 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப்பிரிவு 370 இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டதால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் தொடங்கியது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு யூனியம் பிரதேச அந்தஸ்தும், லடாகிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்த்ததும் வழங்கப்பட்டது

அந்த சமயத்திலிருந்து, காஷ்மீரில், தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம், ஊரடங்கு உத்தரவுகள், பல கட்டுபாடுகள், மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் , மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடல் ஆகியவை நிகழ்கின்றன. இணைய வசதி மற்றும் பிரீபெய்ட் மொபைல் சேவையும் முடக்கப்பட்டுள்ளன.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், அங்கு சுற்றுலாத் துறை பலத்த அடி வாங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீர் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறை 15- 20 சதவீதம் வரை பங்களிக்கிறது. காஷ்மீர் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை 10,000 கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

அதன் தலைவர் ஷேக் ஆஷிக், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளை கணக்கிடுவது எளிதான காரியம் இல்லை என்று பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

அப்துல் மஜீத், உள்ளூரில் குதிரை சவாரி ஏற்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருபவர். அவர் கடந்த ஆறு நாட்களுக்கு முன் தனது வியாபாரத்தை மீண்டும் தொடங்கினார். ஆனால் போதுமான சுற்றுலாப் பயணிகள் அவருக்கு கிடைக்கவில்லை மற்றும் அவரின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு நாளும் நாங்கள், நூறிலிருந்து ஐம்பது ரூபாய் வரை சம்பாதிப்போம். இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. குல்மார்க்கில் வெகு சில சுற்றுலாப் பயணிகளையே காண முடிகிறது. சராசரியாக ஒவ்வொரு நாளும், குல்மார்கில் 20 - 50 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எங்களுக்கு கிடைக்கும் சிறிய தொகையை கொண்டு குடும்பம் நடத்துவது முடியாத காரியமாக உள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன் நாங்கள் ஒரு நாளைக்கு 700-1000 ரூபாய் வரைக்கூட சம்பாதிப்போம். சமீபத்தில் அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த கட்டுபாட்டை தளர்த்தபின் நாங்கள் எங்கள் தொழிலை மீண்டும் தொடங்கினோம்," என்கிறார் மஜீத்.

மற்றொரு சுற்றுலாப் பயணியான சோனா, நான்கு மாதங்களுக்கு முன் தனது பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார். அவர் மனதில் பெரும் அச்சம் இருந்தது மேலும் காஷ்மீர் மக்கள் மீது அவருக்கு கோபம் இருந்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு தான் இங்கு வரும்போது இங்கு நிலைமை வேறாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

"இன்றைய காஷ்மீர் முற்றிலும் மாறாக உள்ளது. அந்த சமயத்தில் எங்களால் எங்கும் செல்ல முடிந்தது. நாங்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தபோது எங்கு வேண்டுமானாலும் சென்றோம். காஷ்மீர் மக்கள் மிகுந்த பயத்துடனும், கோபத்துடனும் காணப்படுகின்றனர். அவர்களின் கோபத்தை எங்களால் உணர முடிகிறது. நாங்களும் பயத்துடன்தான் இருக்கிறோம். ஆனால் உள்ளூர் மக்கள் எங்களை நன்றாக பார்த்து கொள்கின்றனர்," என்கிறார் அவர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் சதார், ஆறு மாதங்களுக்கு முன் திட்டமிட்ட தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால் அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த சில கட்டுபாடுகளை தளர்த்தியவுடன் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். சதார் மற்றும் அவரின் மனைவிக்கு மதிய உணவு கிடைப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

"தற்போதுவரை இங்கு அனைத்தும் சரியாகதான் உள்ளது. ஒரே ஒரு பிரச்சனை அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளதால் எங்களுக்கு மதிய உணவு கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள், எனவே கடைகள் மூடப்பட்டுள்ளது எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது" என்கிறார் அவர்.

குல்மார்கில் உள்ள வெல்கம் என்ற விடுதிக்கு ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் எந்த விருந்தினரும் வரவில்லை. அந்த விடுதியின் மேலாளர் ஷானவாஸ், "ஆகஸ்டு 5ஆம் தேதிக்கு பிறகு நாங்கள் எந்த சுற்றுலாப் பயணியையும் பார்க்கவில்லை. இன்று சில சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சீக்கிரம் நிறைய பேர் வருவார்கள் என்று நினைக்கிறேன். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்தால் அதை நம்பி வாழ்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுபாடுகள் நீக்கப்பட்டாலும் பெரிதாக யாரும் வரவில்லை." என்கிறார்.

மும்பையில் இருந்து வந்துள்ள ஆஷ்ரதா, தான் வந்ததிலிருந்து சாலைகளில் ராணுவத்தை மட்டுமே காண்பதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார். இங்கு இயல்புநிலை திரும்பவில்லை என்பதால் எனது நண்பர்கள் யாரும் வரவேண்டாம் என்றுதான் நான் கூறுவேன் என்கிறார் அவர்.

குல்மார்கில் படகு சவாரிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கொண்டலா என்று சொல்லப்படும் படகு சவாரிக்கு வெகு சில ஆட்களே வருகின்றனர். குல்மார்க் கொண்டலாவின் நிர்வாக இயக்குநர், "இதை நாங்கள் திறந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் மெல்ல மெல்ல வருகை தருகின்றனர். காலம் செல்ல செல்ல சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணுகிறேன். ஆனால் அதே சமயம் இங்கு தீபாவளி சமயம்தான் சீசன் சமயம்." என்கிறார்.

சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாட்டை தளர்த்தியபின் சுற்றுலாத்துறை மறுசீரமைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்தது.

சுற்றுலாப் பயணிகளை கவர அவர்களின் துறை பல திட்டங்களை தொடங்கும் என்று காஷ்மீர் சுற்றுலாவின் இயக்குநர் நிசார் அகமது வானி பிபிசியிடம் தெரிவித்தார்.

"காஷ்மீரில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதால், அரசாங்கம் நல்ல எண்ணத்துடன் இந்த கட்டுபாட்டை விதித்தது. தற்போது இங்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதால் கட்டுபாட்டை தளர்த்த அரசு முடிவு செய்தது. அதிக சுற்றுலாப் பயணிகளை கவர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பல மாவட்டங்களில் முன்பு போல பல சாலை நிகழ்ச்சிகளை செய்யவுள்ளோம்." என்கிறார் அவர்.

மேலும், "இந்த சாலை நிகழ்ச்சிகளை நாங்கள் வெளிநாடுகளில் செய்யவும் முடிவு செய்துள்ளோம். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு வழிகளில் நாங்கள் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விமான நிலையத்திலும் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். காஷ்மீரில் நிலைமை இன்னும் சரியாகவில்லை. ஆனால் காலம் போகப் போக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து நாங்கள் பணிபுரிந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்போம்," என்றார்.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :