அபிஜீத் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ- நோபல் பரிசு பெற்றவர்கள் பயணத்தை தொடங்கிய ராஜஸ்தான் கிராம பள்ளிகள்- #GroundReport

  • பிரதீப் குமார்
  • பிபிசி, உதய்பூரில் இருந்து
நோபல் பரிசு பெற்ற அபிஜித்

பட மூலாதாரம், Getty Images

1996ஆம் ஆண்டின் குளிர்காலத்தின் தொடக்கம். உதய்பூரைச் சேர்ந்த அஜய் மேத்தா என்ற சமூக சேவகர் தனது தம்பி உதய் மேத்தாவை சந்திக்க அமெரிக்கா சென்றார். எம்.ஐ.டியில் பேராசிரியராக இருந்த உதய் மேத்தா தனது மூத்த சகோதரரை, நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். உதய் மேத்தாவின் நண்பர் ஒருவர் ஏழைகளிடையே ஒரு சிறப்பு சமூக ஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறினார், இதனால் அவர்களது வாழ்க்கை மேம்படும் என்று அவர் கூறினார். அஜய் மேத்தா, அவரது நோக்கத்தையும், வார்த்தைகளையும் புரிந்துகொண்டு, உதய்பூருக்கு வருமாறு அழைத்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தனது சக ஊழியருடன் உதய்பூருக்கு வந்தார். அந்த பேராசிரியர் அபிஜீத் பானர்ஜி. அவருடன் உதய்பூருக்கு வந்தவர் மைக்கேல் கிராமர்.

வியப்படைய வேண்டாம். 2019ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அபிஜீத் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிராமர் ஆகியோர் 1996இல் உதய்பூரில் தங்களது பணியைத் தொடங்கினார்கள். உதய்பூரில் அவர்கள் மேற்கொண்ட சோதனை ஆர்.சி.டி (Randomised Controll Trial) என்று அழைக்கப்படுகிறது.

அந்த சமயத்தில் உதய்பூரின் கிராமப்புறங்களில் பணிபுரியும் சேவா மந்திர் என்ற அமைப்பின் சர்வேயராக அஜய் மேத்தா இருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், "அவர் எங்கள் பள்ளியில் தன் தனது முதல் பரிசோதனையைச் செய்தார். அந்த நேரத்தில், அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில், சேவா மந்திர் பள்ளி கல்வியை கொடுக்கும். அந்த பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் இருந்த நிலையை மாற்றி தலா இரண்டு ஆசிரியர்களாக உயர்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்."

முதல் பரிசோதனை என்ன?

இந்த வேலையைப் பற்றி சேவா மந்திரில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த மைக்கேல் கிராமர், இந்த அமைப்பில், நாங்கள் ஆராய்ச்சி செய்கிறோம், எல்லா பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் இதை செயல்படுத்த வேண்டாம் என்று கூறினார்.

சேவா மந்திருடன் தொடர்புடைய ரத்தன் பலிவால், "இந்த திட்டத்திற்காக எங்கள் 47 மையங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். இதில், பாதி மையங்களில் இரண்டு ஆசிரியர்களையும், எஞ்சியவற்றில் மையங்களில் ஓர் ஆசிரியரையும் நியமிக்கலாம் என்று தெரிவித்தார் அபிஜீத்" என்கிறார்.

அபிஜீத் பானர்ஜி மற்றும் மைக்கேல் கிராமர் ஆகியோர் எம்.ஐ.டியின் ஜமீல்-அப்துல் லத்தீஃப் ஜமீல் பாவர்டி ஆக்ஷன் லேப் (J-PAL) கீழ் சேவா மந்திருடன் இணைந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதன்பிறகு அவர் அளித்த அறிக்கை பொதுவாக நிலவும் நம்பிக்கைக்கு முற்றிலும் முரணானதாக இருந்தது. பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் இருப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று அவர் கூறினார்.

மாறாக, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை அதிகரிப்பது குறித்து பேசினார்.

"உண்மையில் இரண்டு ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிலைமை சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அபிஜீத் பானர்ஜி மற்றும் மைக்கேல் கிராமர் எங்கள் சிந்தனையை மாற்றினார்கள்" என்கிறார் அஜய் மேத்தா.

அபிஜீத் பானர்ஜி அடுத்த பல ஆண்டுகள் இந்த மையத்துடன் இணைந்து, தனது பரிசோதனையைத் தொடர்ந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் சேவா மந்திர் பள்ளிகள் நடத்தப்படுகிறது.

ஆரம்ப நிலையில் கல்வியைக் கொடுக்கும் இந்த மையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளூர் சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்கள் கிராம அளவில் அமைக்கப்பட்ட குழுவின் மேற்பார்வையின் கீழ் பணியாற்ற வேண்டும்.

படக்குறிப்பு,

அபிஜீத் பானர்ஜியை உதய்பூருக்கு வர அழைப்பு விடுத்தார் அஜய் மேத்தா

பொதுவாக இதுபோன்ற மையங்கள் அரசு கட்டடங்களில் நடத்தப்படுகின்றன, உதய்பூரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள பீல் பில்வாராவில் இதுபோன்ற ஒரு சேவா மையம் உள்ளது, அங்கு மையத்தை இயக்கும் பொறுப்பு உள்ளூர் பெண்ணிடம் இருக்கிறது. உள்ளூர் பேச்சுவழக்கில் குழந்தைகளுக்கு கற்பித்தல்தான் அவரது பொறுப்பு.

அவர் தனது செயல்பாடு குறித்த தகவல்களை கேமரா மூலம் சேவா மந்திரின் தலைமையகத்திற்கு படம் எடுத்து அனுப்புகிறார் என்பதுதான் இதன் சிறப்பம்சம். இதனால் பள்ளி நடக்கிறதா இல்லையா, எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

கேமரா மூலம் படங்களை எடுக்கும் இந்த நுட்பத்தை 2003 இல் அபிஜீத் பானர்ஜி-எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிராமர் ஆகிய மூவரும் வழங்கினர். இந்த எளிய தீர்வின் மூலம், தொலைதூரத்திலிருந்து கூட கண்காணிக்க முடிந்தது, இந்த சோதனை மிகவும் வெற்றிகரமாக இருந்தது, பின்னர் இது பல இடங்களுக்கு பரவலாக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது ஆசிரியர்கள் இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கொடுத்தது. இந்த சோதனையின்போது, அபிஜீத் பானர்ஜி சலுகைகளை வழங்கும் முறையை பின்பற்றினார். 20 நாட்களுக்கு மேல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதல் பணம் கொடுக்கத் தொடங்கினார். இது ஆசிரியர்களின் வருகையை அதிகமாக்கியது.

அபிஜீத் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ - மைக்கேல் கிராமர், இந்த மூவரின் பார்வையில், சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பின்தங்கிய மக்களை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கு ஊக்கத்தொகை அல்லது பணத்தை செலவிட அரசாங்கம் தயங்கக்கூடாது என்பதும் அடங்கும். அவர் 12 ஆண்டுகளில் பல பரிசோதனைகள் செய்தார்.

12 ஆண்டுகளில் பல பரிசோதனைகள்

அதே பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ், எஸ்தர் டஃப்லோவும் 1997ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவிற்கு வந்தார். அப்போது அபிஜீத் பானர்ஜியின் கீழ் அவர் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உதய்பூரின் சூழல் டஃபலோவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

படக்குறிப்பு,

அபிஜீத் பானர்ஜி உதய்பூரில் பணிபுரிந்தபோது, சேவா மந்திரின் தலைவராக இருந்தார் நீலிமா கெய்தான்

உதய்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜாப்லா என்ற பழங்குடிப் பகுதியில் பணிபுரியும் ஹிம்மத் லால் காமேட்டி கூறுகிறார், "இங்குள்ள மக்களிடையே வேலை செய்வதற்கு டஃப்லோவுக்கு மிகவும் பிடிக்கும். பிரதான சாலையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும். பல முறை அவருடன் எங்களுடன் வருவார். என் திருமணத்திற்கு அவரும் வந்திருந்தார், நீண்ட நேரம் இருந்தார்."

சேவா மந்திர் மற்றும் அபிஜீத் பானர்ஜியின் குழுவினருக்கும் பரஸ்பரம் நன்றாக ஒத்துப்போனது. இதன் பின்னர், சேவா மந்திர் அபிஜீத் பானர்ஜியை அப்பகுதியின் சுகாதார பிரச்சனைகள் குறித்து ஒரு பெரிய பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

"அபிஜீத் பானர்ஜியின் சிறப்பம்சம் என்னவென்றால், அவர் எப்போதும் உண்மைகள் மற்றும் புள்ளி விவரங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்," என்கிறார் அஜய் மேத்தா.

எனவே, சுகாதார சேவைகளுக்கான தேவையைப் புரிந்து கொள்ள, அபிஜீத் பானர்ஜி 2003இல் இந்த பகுதியில் ஒரு நீண்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த நேரத்தில் சேவா மந்திரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் நீலிமா கெய்தான். "அபிஜீத் சுகாதார வசதி தொடர்பாக பணியாற்றத் தொடங்கியபோது, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களின் சுகாதார வசதிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்," என்று அவர் கூறுகிறார்.

இதில், சேவா மந்திருடன், உதய்பூரில் கல்வி விஷயங்களில் பணிபுரியும் வித்யா பவன் என்ற அமைப்பும் அதில் இணைந்தது. ஒன்றரை ஆண்டு ஆய்வுக்குப் பிறகு, முடிவுகள் வெளிவந்தபோது யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை, இதில் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் முழுமையாக கிடைக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால், 2.66 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே நோய்த்தடுப்பு வசதிகள் முழுமையாக கிடைப்பதாக தனது தரவுகளின் அடிப்படையில் அபிஜீத் பானர்ஜி தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை குறித்து பேசும் நீலிமா கெய்தான், "நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது அபிஜீத் மற்றும் டஃப்லாவுக்கு மிகவும் கவலையை கொடுத்தது. நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். எங்களுடைய நோக்கமும் அதுவாகவே இருந்தது."

பட மூலாதாரம், Getty Images

அந்த நேரத்தில் சேவா மந்திரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த நீலிமா கெய்தான், இரண்டு ஆண்டுகளாக நீடித்த ஆராய்ச்சி பற்றி பேசுகிறார். "நாங்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 120 கிராமங்களில் பரிசோதனைகளை செய்யத் தொடங்கினோம். 60 கிராமங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன, 60 கிராமங்களில் பணிகளைத் தொடங்கினோம். அந்த 60இல் 30இல், நாங்கள் விநியோகத்தை மேம்படுத்தினோம், அங்கு நாங்கள் பருப்பு வகைகளை வழங்கத் தொடங்கினோம். கட்டுப்பாடாக இருந்த கிராமங்களின் நிலைமையில் 6 சதவீத வளர்ச்சி அதிகரித்தது. விநியோகத்தை அதிகரித்து, நோய் தடுப்பு முகாம்களின் எண்ணிக்கையையும் அதிகரித்ததால், நோய்த்தடுப்பு விகிதம் 18 சதவீதத்தை எட்டியது. மொபைல் கிளினிக் மற்றும் தடுப்பூசி மூலம் ஊக்கம் கொடுத்தில், நோய்தடுப்பு விகிதம் 39 சதவீதமாக எட்டியது.

2019இல் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்ட போது, இந்த சோதனையில் அடைந்த வெற்றியை நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

பருப்பு தொடர்பான எண்ணம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து, நீலிமா கைதானின் பதில் என்ன தெரியுமா? "நிலைமை எவ்வாறு மேம்பட்டது என்பது குறித்து பல கருத்துகள் இருந்தன. அனைவரும் பல்வேறு கோணங்களை முன்வைத்தனர். ஓரிரு நாட்களில் நிறைய யோசனைகள் வெளிவந்தன. அந்த நேரத்தில் பிரியங்கா சிங் எங்களுடன் பணியாற்றினர். ஒரு கிலோ பாசிப் பருப்பை ஏன் கொடுக்கக்கூடாது என்ற யோசனையை அவர் முன்வைத்தார்.

பருப்புக்கு என்ன தொடர்பு?

இந்த யோசனையை அபிஜீத் பானர்ஜி விரும்பினார், அந்த நாட்களில், ஒரு கிலோ பாசிப் பருப்பின் விலை 40 ரூபாய். ஆனால் ஒரு கிலோ பாசிப் பருப்பு நிலைமையை மாற்றிவிட்டதா என்பது ஆச்சர்யம் ஏற்படுத்தும் கேள்வி. இது குறித்து கேட்டபோது, நீலிமா கெய்தான் கூறுகிறார், "புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஐந்து தடுப்பூசிகள் தேவை, குழந்தையின் தாய் இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கிறார். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒரு கிலோ பருப்பு வகைகளை நாங்கள் கொடுத்தோம்."

அபிஜீத் பானர்ஜி பணியாற்றிய பகுதிகளில், உதய்பூர் நகரத்திலிருந்து 45-50 கி.மீ தொலைவில் இருக்கிறது ஜாப்லா. பிரதான சாலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஜாப்லாவில் உள்ள ஒரு உள்ளூர் பெண் தங்களுக்கு பருப்பு வகைகள் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters

இப்போது இந்த பகுதியில் சாலை வசதி இருந்தலும், தொலைதூர பகுதிகளில் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த கிராமங்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், பல மைல் தூரம் நடந்து தான் செல்லவேண்டும். இன்றும் கூட, அங்கு சாதாரண மக்களின் வாழ்க்கை மிகவும் கடினம் என்று அறியப்படுகிறது. . ஒவ்வொரு சொட்டு நீருக்கும் இப்பகுதி மக்கள் போராட வேண்டியிருக்கிறது.

இருப்பினும், சேவா மந்திர் 2003-04 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனது திட்டத்தை 2018 இல் நிறுத்திவிட்டது. இதற்கான காரணத்தை கூறுகிறார் சேவா மந்திரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ரெளனக் ஷா. "இந்த திட்டம் ஒரு பெரிய வெற்றி என்பதை நிரூபித்தது. ஆனால் காலப்போக்கில் எங்கள் திட்டங்களை மாற்ற வேண்டும், அப்போதுதான், புதிய சிக்கல்களைச் சரிசெய்ய முடியும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசு திட்டம் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைகிறது, அதற்கு பதிலாக நாங்கள் பல்வேறு வகையான வேலைகளைச் செய்கிறோம்."

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த இந்த திட்டத்தில், 20 ஆயிரம் குழந்தைகளுக்கு முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டு, அகால மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாக சேவா மந்திர் கூறுகிறார். ஆனால் இந்த ஆராய்ச்சியின் ஆய்வும் நுட்பமும் மாநில நிர்வாகத்துடன் முறையாகப் பகிரப்பட்டிருந்தால், ஒருவேளை அது ராஜஸ்தான் முழுவதிலும் அல்லது முழு நாட்டிலும் கூட ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

சாலி பில்வாராவில், வயதான ஒரு மருத்துவச்சி பேசும்போது, தங்கள் பகுதியில் குழந்தை இருமல் காரணமாக அதிக அளவில் இறந்துவிடுவதாகக் கூறினார், மக்கள் தடுப்பூசி போடுவதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் பருப்பு வகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமானது என்கிறார்.

இருப்பினும், மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும், இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்த வருவார்கள் என்ற விஷயத்தை அபிஜீத் பானர்ஜி முயற்சி செய்தார் என்று சேவா மந்திருடன் தொடர்புடைய பலர் கூறுகின்ற்னர். அதில் ஒருவரான அஞ்செலா ஜோஷி கூறுகையில், "பொது மக்களின் கட்டாயத்தை அவர் புரிந்து கொண்டார், ஒரு பெண் ஒரு நாளைக்கு தடுப்பூசி போடச் சென்றால், அன்று அவர் வேலைக்கு செல்ல முடியாது. எனவே அவர்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று அவர் எப்போதும் தனது கூட்டங்களில் வலியுறுத்தினார்" என்கிறார்.

பட மூலாதாரம், HIMMAT LAL GAMETI / BBC

சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிராமர் ஆகியோர் 2008ஆம் ஆண்டு வரை உதய்பூரின் கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில் தங்கள் ஆர்.சி.டி முறை மூலம் தொடர்ந்து சோதனை செய்தனர். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை அல்லது ஆரம்ப சுகாதார மையங்களில் ஏ.என்.எம் (உதவி செவிலியர்) இல்லாதது குறித்த சரியான தகவல்கள் அபிஜீத் பானர்ஜியின் ஆராய்ச்சி ஆய்வுகள் மூலம் மட்டுமே தெரியவந்ததாக ரத்தன் பலிவால் கூறுகிறார்.

அபிஜீத் பானர்ஜியின் இந்த ஆராய்ச்சி ஆய்வுகள் சேவா மந்திர் உதய்பூர் மாவட்ட சுகாதாரத் துறையுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு இவ்வளவு அதிகமாக விவாதிக்கப்படும், அபிஜீத் பானர்ஜியின் முயற்சிகள் மிகவும் முன்பே விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருந்திருந்தல், உதய்பூருக்கு அப்பால் நாட்டின் பிற பகுதிகளும் நன்மை அடைந்திருக்கலாம்.

ராஜஸ்தானிலும் நிலைமை மிகவும் சிறப்பாக மாறிவிட்டதா? உறுதியாக அதைச் சொல்ல முடியாது. ஏனெனில் மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, 80 சதவீத குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைத்துள்ளது, ஆனால் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 55 சதவீதம் மட்டுமே.

இருப்பினும், உதய்பூருடன் அபிஜீத் பானர்ஜியின் தொடர்பு நீடித்தது. அபிஜீத் பானர்ஜி தனது 'ஏழை பொருளாதாரம்' புத்தகத்தை இந்தியாவில் வெளியிடவிருந்தபோது, அதை 2011 ஜூலை 16ஆம் தேதியன்று உதய்பூரிலேயே வெளியிட்டார் என்று அஜய் மேத்தா கூறுகிறார். உதய்பூர் தொடர்பான அனைத்து சோதனைகள் குறித்தும் தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார் அபிஜீத்.

"அபிஜீத் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃப்லோ ஆகியோர் புள்ளிவிவரங்களை நம்பும் பொருளாதார வல்லுநர்கள் மட்டுமல்ல. சாதாரண மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற பணிபுரிய விரும்புபவர்கள்" என்கிறார் நீலிமா.

இப்போது அபிஜீத் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிராமர் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது பற்றி சேவா மந்திருடன் இணைந்திருப்பவர்களுக்கு பெருமை என்பதோடு, அதற்கு சேவா மந்திர் பங்கு பற்றியும் பெருமிதம் கொள்கிறார்கள். எதிர்வரும் நாட்களில், அபிஜீத் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிராமர் ஆகியோருக்கு மரியாதை செய்யவும் சேவா மந்திர் திட்டமிட்டுள்ளது.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :