சுஜித் மரணம்: பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் என்ன பிரச்சனை?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
சுஜித் மரணம்

தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தண்ணீர் இல்லாமல், பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மாநிலத்தில் எத்தனை உள்ளன என்பதும் யாருக்கும் தெரியாது.

திருச்சியைச் சேர்ந்த சிறுவன் சுஜித் தன் வீட்டருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விவாதங்கள் எழுந்திருக்கின்றன. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாதது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன. உண்மையில் இது யார் பொறுப்பு?

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுபோன்ற கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளுக்குள் விழுந்துள்ளனர். இவர்களில் இரண்டு மூன்று பேரைத் தவிர, பிறர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டனர். குறிப்பாக 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் மூன்று குழந்தைகள் அடுத்தடுத்த தினங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்தனர்.

இதையடுத்து, ஆழ்துளை கிணறுகள் தொடர்பான விதிகளை வகுக்கும்படி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் வேலூர் மாவட்டத்தில் குழந்தை ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. இதையடுத்து, அந்த மாதம் 30ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு இதற்கென விதிகளை வகுத்து உத்தரவிட்டது.

படக்குறிப்பு,

கோப்புப்படம்

Tamilnadu Municipalities (Regulation of Sinking of Wells and Safety Measures) Rules, 2015 எனப் பெயரிடப்பட்ட இந்த விதிமுறைகள், ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியைப் பெறவேண்டுமென கூறின.

ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்ட விரும்புபவர்கள் இதற்கென கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, அனுமதியைப் பெற்ற பின்பே தோண்ட வேண்டும்; தோண்டும்போது அதில் ஈடுபட்டிருப்பவர்கள் சரியான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும்; ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியின் இடைவேளையின்போது, தோண்டப்பட்ட பகுதியை பாதுகாப்பாக மூடிவைத்திருக்க வேண்டும்; கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை தரைமட்டம் வரை, களிமண், மணல், கற்கள் உள்ளிட்ட சரியான பொருட்களை வைத்து மூடிவிட வேண்டும்; அதேபோல, ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், கிணற்றைத் தோண்டும் பணியைத் துவங்கும் முன்பாக, கிணற்றின் உரிமையாளர் உள்ளாட்சி அமைப்பிடம் உரிமம் பெற்றிருக்கிறாரா என்பதை ஆராய வேண்டும் என பல விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

கிட்டத்தட்ட நான்காண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இந்த விதிமுறைகள் எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை.

"இந்த விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒருவர் இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது? ஆழ்துளைக் கிணறு மூடப்படாவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என யாருக்கும் தெரியாது" என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தனவேல்.

இதேபோல, நெடுஞ்சாலை ஓரங்களில் அமைந்துள்ள மிகப் பெரிய விவசாயக் கிணறுகளில் பல விபத்துகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்தன. திண்டுக்கல், வேலூர் ஆகிய இடங்களில் மிகப் பெரிய விபத்துகள் நிகழ்ந்து, பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து. அம்மாதிரி கிணறுகளை சுற்றி, சுற்றுச்சுவர் கட்டவேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், இன்னும் பெரும்பாலான சாலையோர விவசாயக் கிணறுகள் சுற்றுச்சுவர் இன்றியே இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் தனவேல்.

படக்குறிப்பு,

கோப்புப்படம்

"இம்மாதிரியான விதிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்றி பெரிதாக ஏதும் நடக்காது. தவிர, முதலில் அரசால் தோண்டப்பட்டு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடலாம். பிறகு அதைப் பார்த்து தனியார் செய்ய வலியுறுத்தலாம்" என்கிறார் அவர்.

ஒவ்வோர் இடமாகப் போய் ஒரு வட்டாட்சியர் ஆழ்துளைக் கிணறுகளைப் பார்வையிடுவது, அவை கைவிடப்பட்டிருந்தால் மூடுவது ஆகியவை தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்கிறார் அவர். "ஒரு வட்டாட்சியர், ஒரு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றைக் கண்டறிந்தால் அதனை அவர் எப்படிச் செலவுசெய்து மூட முடியும்? அதுபற்றி விதிகளில் ஏதும் சொல்லப்படவில்லை"

மக்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது அல்லது மழைநீர் சேகரிக்கும் கிணறுகளாக மாற்றுவதைச் செய்ய வேண்டும் என்கிறார் தனவேல்.

தவிர, தற்போது தமிழ்நாட்டில் இதுபோல கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை எத்தனையென யாருக்கும் தெரியாது. எந்தெந்த இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன என்பது குறித்த தகவல்களும் கிடையாது.

"லட்சக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. இது தொடர்பான பட்டியல் உள்ளாட்சி அமைப்புகளிடமோ, அரசிடமோ கிடையாது. முதலில் இவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும்" என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தின் முன்னாள் பேராசிரியர் ஜனகராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :