'கியார்' புயலை அடுத்து 'மகா' புயல் உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு:

பட மூலாதாரம், Getty Images

அரபிக் கடலில் கியார் புயல் ஏற்பட்டுள்ள நிலையில், 'மகா' என்ற மற்றொரு புயல் ஏற்பட்டுள்ளது என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் உள்ள பயிர்கள் மற்றும் உப்பளங்களை வெகுவாக பாதிக்கக்கூடும் என நம்பப்படும் இந்த 'மகா' புயல், திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் உள்ள கடலோர பகுதிகளில் கனமழையை இந்த புயல் ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

பப்பாளி, வாழை மரங்கள் அதிக எண்ணிக்கையில் சேதமாகவும் என எதிர்பார்ப்பதாகவும், தொலைத்தொடர்பு இணைப்புகளில் பிரச்சனைகளை இந்த புயல் உருவாக்கும் என கணித்துள்ளது.

குடிசை வீடுகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்படலாம் என்றும், வீட்டின் மேற்க்கூரைகள் சேதமடையும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணிநேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரம் கனமழை பெய்யும் என்றும், அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுபெறும் வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறித்தும், குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் விவரித்தார்.

பட மூலாதாரம், BALAJI JAGADESH

''அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் , அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத்தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் குமரிக் கடல் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்,'' என்று தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சுமார் 80 இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்துள்ளது என்று கூறிய பாலச்சந்திரன், தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 சென்டிமீட்டர் மழைபதிவாகியுள்ளது என்றார்.

''தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரம் பரவலாக மழைபெய்யும் என்றும், புயலாக வலுப்பெறக்கூடிய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு இதுவரை 20 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. 17 சென்டிமீட்டர் மழை பொழிவு என்பது இயல்பான மழை அளவு. அடுத்த 24 மணிநேரம் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமாரி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை அமைந்துள்ள தேனி,கோவை, திண்டுக்கல் மற்றும் நீலகிரி பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :