சுஜித் மரணம்: 'மீட்புப்பணியாளர்களை விமர்சிப்பது தவறு' - வருவாய் ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன்

சுஜித் வில்சன்
படக்குறிப்பு,

சுஜித் வில்சன்

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித்தை மீட்கும்போது பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினார்கள் என்றும், துர்நாற்றம் வீசியதால் குழந்தை இறந்துவிட்டது என்பது உறுதிசெய்யப்பட்டது என தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுஜித் இறப்பு குறித்து பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித்தை மீட்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும், எல்லா துறையினரும் இணைந்து பணியாற்றினர் என்றும் குறிப்பிட்டார்.

திருச்சியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுஜித் வில்சன் தன் வீட்டருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 மணி நேரம் கழித்து சடலமாக மீட்கப்பட்டான்.

படக்குறிப்பு,

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

அக்டோபர் 25ம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை, நான்கு நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டதால் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாகதுறை ஆணையர் குழந்தையை மீட்பதில் பல துறையினரும் அக்கறையுடன் வேலைசெய்ததாக கூறியுள்ளார்.

சுஜித் மீட்கப்பட்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன என்றும் சமூக வலைத்தளங்களில் பலவிதமான வதந்திகள் பரவுவதாகவும் கூறிய ராதாகிருஷ்ணன், ''மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அத்தகைய அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம். போர்வெல்லில் விழுந்தது என்பது விபத்துதான், பேரிடர் அல்ல, சுஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது. மீட்புப் பணிகள் பற்றி வெளியான வதந்திகளை நம்பக்கூடாது. ஒவ்வொரு நொடியும் மீட்பு பணிகளை முழு முயற்சியுடன் மேற்கொண்டவர்களை விமர்சிக்கக்கூடாது,'' என்றார்.

மேலும் கும்பகோணம் தீ விபத்திற்குப் பிறகு இறந்த உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் உடல்கூறு செய்யும்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என அனைத்தும் பின்பற்றப்பட்டன என்றார் அவர்.

''சுஜித்தின் பெற்றோர் தெரிவித்ததுபோல இதுபோன்ற இறப்புகளை தவிர்ப்பது மட்டுமே தற்போது நாம் செய்யவேண்டிய முக்கியமான காரியம். குழந்தைகளை பாதுகாக்க அனைத்து தரப்பு முயற்சிகளும் தேவை. எல்லா மாவட்டங்களிலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதில் அக்கறையுடன் செயல்படவேண்டும் என்பதே தற்போதைய தேவை,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :