பட்டேல் சிலை: பழங்குடி மக்களின் நிலங்களை பறிக்க திட்டமா?

  • ஜெய் மக்வானா, ஹரிதா கண்ட்பால்
  • பிபிசி குஜராத்தி சேவை
பட்டேல் சிலை:

பட மூலாதாரம், TWITTER / BJP4INDIA

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலை நிறுவப்பட்டு அக்டோபர் 31ஆம் தேதியோடு ஒரு வருடம் முடிவடைகிறது. ஆண்டுவிழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோதி அந்த சிலை அமைந்துள்ள கெவாடியா காலணிக்கு வருகை தருகிறார்.

கெவாடியா காலணியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் மோதி பல திட்டங்களை தொடங்கவுள்ளார். சில ஊடகங்கள் கெவாடியா காலணிக்கு மோதி சிறப்பு அந்தஸ்து வழங்கும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என தெரிவிக்கின்றன.

இந்த செய்தியால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

'எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம்'

சிலைக்கு அருகில் உள்ள ஷ்ரேஸ்தா பவன் கட்டுவதற்கு தன் நிலத்தை இழந்த கெவாடியாவில் வசிக்கும் திலிப்பாய் இதுகுறித்து பிபிசியிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

"கெவாடியா காலணியை யூனியன் பிரதேசமாகவோ அல்லது அந்த பகுதிக்கு சிறப்பு அந்தஸ்தோ வேண்டாம். ஆனால் நாங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்? அரசு அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்கிறது. எங்களின் நிலங்கள் வலுக்காட்டாயமாக வாங்கப்பட்டு அங்கு கட்டுமானம் நடைபெற்று வருகிறது." என்கிறார் திலிப்பாய்.

பட மூலாதாரம், Getty Images

கெவாடியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டிற்கு வந்தால், அங்குள்ளவர்கள் நிலங்களை இழக்கலாம். என அச்சம் தெரிவிக்கிறார் திலிப்பாய். "சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிறகு அவர்கள் எந்த நிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்," என்கிறார் திலிப்பாய்.

தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாட நரேந்திர மோதி இங்கு வருவதால் இங்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பல பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்கிறார் அவர்.

திலிப்பாயின் நிலத்திற்கு பதிலாக அங்கிருந்து 40 -45 கிமீட்டர் தொலைவில் ஒரு இடம் வழங்கப்பட்டது அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

'நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்'

அங்கு பழங்குடி மக்களுக்காக பணியாற்றும் சமூக சேவகர் லகான் முசாஃபிர், அந்த பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிப்பது குறித்துதான் அங்குள்ள பழங்குடி மக்கள் பெரிதும் பேசி வருகிறார்கள் என பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.

"கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் இம்மாதிரியான ஊகங்களை கேட்டு வருகிறோம். எதுவாக இருந்தாலும், கெவாடியா காலணிக்கு சிறப்பு அந்தஸ்த்தோ அல்லது அதை யூனியன் பிரதேசமாக அறிவிப்பதையோ நாங்கள் விரும்பவில்லை," என்கிறார் அவர்.

"அரசாங்கம் எங்கள் நிலங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறதா அல்லது அதற்கான தடையை நீக்க நினைக்கிறதா?"

"எங்களின் நிலங்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. எங்களின் வாழ்வாதாரமும் பாழாகிவிட்டது. தற்போது அரசாங்கம் எங்களை இங்கிருந்து விரட்ட நினைக்கிறது. இங்குள்ள நிலங்கள் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இங்கு பல கட்டடங்கள் வரவுள்ளன. ஆனால் அதனால் உள்ளூர் பழங்குடி மக்களுக்கு என்ன பயன்?"

"அரசுக்கு உள்ள எண்ணிலடங்கா அதிகாரத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் எங்கள் நிலத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்," என்கிறார் அவர்.

தடையாக உள்ளனரா உள்ளூர் மக்கள்?

பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடும் ஆனந்த் மஸ்கான்கர், பழங்குடி மக்கள் இதுதொடர்பாக கவலையில் உள்ளதாக தெரிவிக்கிறார்.

பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய அவர், "இந்த ஊகங்களால் உள்ளூர் பழங்குடி மக்கள் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். பழங்குடி பகுதிகளில் பஞ்சாயத்து விரிவாக்க சட்டத்தின்படி (PESA) அரசு கிராம சபையிடம் முன்னதாக அனுமதி கோர வேண்டும். இந்த சட்டம் பழங்குடி மக்களுக்கு ஒரு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. அந்த பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிப்பதன் மூலம் அரசு இந்த சட்டத்திலிருந்து தப்ப முயல்கிறதா?" என கேள்வி எழுப்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images

"அரசின் இந்த முயற்சியை எதிர்க்க கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கிராம சபை கூட்டங்களும் கூட்டப்பட்டன. ஆனால் அரசாங்கம் இதை ஏன் இன்னும் கருத்தில் கொள்ளவில்லை என தெரியவில்லை?" என்கிறார் ஆனந்த் மஸ்கான்கர்.

இந்த பகுதியை ஏன் யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்? அல்லது ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்? உள்ளூர் மக்கள் அரசுக்கு தடையாக இருப்பதாலா? என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்த விஷயம் குறித்து சமூக ஆர்வலர் மேதா பட்கரிடம் பேசியது பிபிசி.

"31ஆம் தேதியன்று, எந்த 30 திட்டங்களை மோதி தொடங்கி வைக்கிறார் என அறிந்து கொள்ள நாங்களும் ஆர்வமாக உள்ளோம். அந்த சிலையை சுற்றியுள்ள கிராமப்புறங்கள் மற்றும், கெவாடியா, கொதி, நவாகம் போன்ற கிராங்களில் உள்ள வயல்களின் ஊடாக புதிய சாலைகளை அமைக்கும் பணியை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவு வழங்கியுள்ளது. எனவே இந்த கிராமங்களில் சாலைகளை அமைப்பது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது," என அவர் தெரிவித்துள்ளார்.

"பேசா (PESA) சட்டம் இங்கு பொருந்தும். எனவே கிராம சபையின் அனுமதியில்லாமல் இங்கு எதையும் செய்தால் அது சட்ட விரோதமானது. சுற்றுலா வளத்தை அதிகரிக்க இங்குள்ள 72 கிராமங்களை அழித்தால் இங்குள்ள மக்கள் அரசாங்கத்தை மன்னிக்க மாட்டார்கள். இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கவனிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

கேவாடியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா?

கெவாடியாவை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்தின் தலைமைச் செயலர் ஜே.என்.சிங் ஊடகங்களில் வெளியாகும் செய்தி ஆதரமற்றவை என தெரிவித்துள்ளார்.

"அம்மாதிரியாக எதுவும் நடைபெறாது. பதிவேட்டில் இம்மாதிரி எதுவும் இல்லை. இந்த செய்திகள் தவறானவை. அதிகாரப்பூர்வமாக இம்மாதிரியாக எதுவும் நடைபெறவில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி ஒன்றில், ஸ்டேட்யூ ஆஃப் யூனிட்டி சிலையை அங்கு நிறுவியதில் இருந்து சுற்றுலாத்துறை அங்கு அதிகரித்திருப்பதால், அதை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், தற்போதுள்ள கெவாடியா பகுதி கிராம பஞ்சாயத்திலிருந்து பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கெவாடியா காலணியின் நிர்வாக தேவைகளை கிராம பஞ்சாயத்துதால் மேற்கொள்ள முடியவில்லை. எனவே அதை எளிதாக்க அந்த பகுதியை சிறப்பு மண்டலமாக மற்றவுள்ளோம்," என ஜே.என் சிங் தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

"கெவாடியா காலணிக்கான கழிவறை வசதி, மற்றும் நீர் விநியோகத்தை கிராம பஞ்சாயத்தால் மேலும் நிர்வகிக்க முடியாது. எனவே கெவாடியா காலணியை நிர்வகிக்க தனி ஒரு நிர்வாகத்தை உருவாக சீக்கிரம் அரசு ஒரு வழியை வகுக்கும்" என நர்மதா மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் ஸ்டேட்யூ ஆஃப் யூனிட்டியின் நிர்வாக தலைவர் ஐகே.படேல் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :