காசநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

  • செளதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி செய்தியாளர்
காசுநோய் சோதனை

பட மூலாதாரம், Getty Images

காசநோய் சிகிச்சையில் `புரட்சியை` ஏற்படுத்தும் ஒரு புதிய மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் மக்களை பலிவாங்கும் காசநோய்க்கு எதிராக ஒரு நீண்ட நாள் பாதுகாப்பை இந்த மருந்து வழங்கும் என நம்பப்படுகிறது.

அதீத தொற்று நோய் ஆன காசநோய், பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள ’பிசிஜி ஜாப்’ தடுப்பூசி அவ்வளவு வீரியமாக இல்லை. இருப்பினும், ஆரம்பகட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டாலும், தடுப்பூசி உரிமம் பெற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய நகரான ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுரையீரல் ஆரோக்கியம் குறித்த உலகளாவிய கருத்தரங்கின் போது, உலகெங்கிலும் இருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட புரதங்களால் உருவாக்கிய தடுப்பூசி குறித்து விளக்கினர்.

இந்த தடுப்பூசி ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளின் முக்கியமான கட்டத்தை கடந்துவிட்டது. தென்னாப்பிரிக்கா, கென்யா மற்றும் சாம்பியாவின் காசநோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள 3,500 க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து சோதனையும் செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஏன் இந்த தடுப்பூசி புரட்சிகரமானது’ ?

இந்த தடுப்பூசி உண்மையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என காச நோய் நிபுணர் டேவிட் லிவின்சோன் கூறினார். "இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், உண்மையில் காச நோய்க்கு காரணமான Mycobacterium tuberculosis ஆல் பாதிக்கப்பட்ட நபர்களில் இந்த மருந்து திறன்பட செயல்படுகிறது." என்று டேவிட் லிவின்சன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், THINKSTOCK

"காசநோய் நுண்ணுயிரியால் (Mycobacterium tuberculosis) பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளை காச நோய் தாக்குவதில்லை, எனவே இந்த நோய்தொற்று ஓரளவு பாதுகாப்பு அளிக்கிறது என நம்பினோம். இதன் விளைவாக, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதை ஒரு தடுப்பூசி சுட்டிக்காட்டி இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. "

இன்னும் கூடுதலான மக்கள்தொகையில் இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு, மேலும் அது உரிமம் பெறுவதற்கு முன்னர் பெரிய அளவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் தரவுகள் போலவே மீதமுள்ள சோதனைகளிலும் நல்ல தரவுகள் கிடைத்தால், நிச்சயம் காசநோய் சிகிசிச்சையில் இந்த தடுப்பூசி புரட்சியை ஏற்படுத்தும். என்றும் டேவிட் லிவின்சன் தெரிவித்தார்.

சந்தையில் இந்த தடுப்பூசி விற்கப்பட என்னும் எவ்வளவு காலம் ஆகும் ?

எல்லா சோதனைகளும் சரியாக நடைபெற்று முடிந்தால், மிகவும் தேவைப்படும் நபர்களை 2028ம் ஆண்டு இந்த தடுப்பூசி சென்றடையும் என டேவிட் லிவின்சன் மதிப்பிட்டு கூறுகிறார்.

தடுப்பூசி வேலை செய்கிறது என்பதை நிரூபிக்க , அம்மை போன்ற வைரஸ் நோய்களுக்கு தேவையான ஆய்வை விட மிகப் பெரிய ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மருந்து நிறுவனமான கிளாசோ ஸ்மித் க்லின் (ஜி.எஸ்.கே) காசநோய் தடுப்பூசிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக தடுப்பூசி முன்னேற்றங்கள் விலங்குகளில் ஆராயப்படும். குறிப்பாக எலிகள் , கினி பன்றிகளில் மனிதர்கள் அல்லாத விலங்கினத்தில் அதன் செயல்திறன் பரிசோதித்து பார்க்கப்படும்.

பட மூலாதாரம், AFP

பெரும்பாலும் விலங்கு மாதிரிகளில் நாம் ஆராய்ச்சி செய்யும்போது அவை நாம் காண விரும்பும் முன்னேற்றங்களை பிரதிபலிப்பதில்லை , காசநோய் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இதுவே சவாலாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, சுண்டெலியில், காசநோய் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாத நோயாக இருக்கிறது. நுரையீரலில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் சுமார் 10 மடங்கு குறைப்பதையே ஆராய்ச்சியாளர்கள் வெற்றி என வரையறுக்கிறார்கள். ஆனால் பத்தில் ஒரு பாக்டீரியா இருந்தாலும் ஒரு குழந்தையை காச நோய் தாக்கும்.

தற்போது காசநோய் எவ்வளவு தீவிரம் அடைந்துள்ளது?

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 2018ம் ஆண்டு பத்து மில்லியன் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் வாசி பேருக்கு காசநோயால் பாதிக்கப்பட்டது தெரிவதில்லை. அதாவது செயலாற்ற பாக்டீரியாக்களை கொண்டும், நோய்வாய்ப்படாமல், மற்றவர்களுக்கு நோயை பரப்பாமலும் உயிர்வாழ்கின்றனர். இவ்வாறு மறைமுகமாக காச நோய் நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் வாழ்நாளில் 5 முதல் 10 சதவீதம் காசநோய் முற்றிலுமாக தாக்கும் அபாயம் உள்ளது.

ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட காசநோய் மருந்துகளுக்கு எதிரான காசநோய், அதாவது காசநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளுக்கு எதிரான தன்மையைக் கொண்ட ஒரு வகை காசநோய் முக்கிய அச்சுறுத்தலாகவே உள்ளது. இதை கண்டறியவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் மிக செலவாகும்.

புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 90% ஆக குறைக்கவும், 2015 மற்றும் 2035 க்கு இடையில் காசநோய்யால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 95% ஆக குறைக்கவும் உலக சுகாதார அமைப்பு முயற்சி செய்கிறது.

பட மூலாதாரம், Reuters

காசநோயால் பாதிக்கப்பட்ட நாடுகள்..

உலகளவில் அளவில் காசநோயால் பாதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பகுதியினர் எட்டு நாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தியா (27%), சீனா (9%), இந்தோனீசியா (8%), பிலிப்பைன்ஸ் (6%), பாகிஸ்தான் (6%), நைஜிரியா (4%), வங்கதேசம்(4%), தென்னாபிரிக்கா(3%).

உலகளாவிய அளவில் காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்திய உள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மக்கள் தொகையினர் காசநோயால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்த நோயால் ஆண்டுதோறும் 400,000 இந்தியர்கள் உயிரிழகின்றனர், மேலும் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 24 பில்லியன் டாலர்கள் செலவாகிறது.

"காசநோயை இந்தியாவில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் உலகளவிலும் அந்த நோயை அகற்ற முடியாது "என்று டெல்லியில் உள்ள காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு எதிரான சர்வதேச ஒன்றியத்தின் அலுவலக இயக்குனர் ஜம்ஹோய் டான்சிங் கூறினார்.

இந்தியாவில் காசநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, ஆனால் நேர்மையாக சொல்லவேண்டுமானால் - காசநோய் இன்னும் வேகமாக குறையவில்லை, இலக்குகளை அடைய வேகமாக முன்னேற வேண்டும். சிகிச்சை மற்றும் நோய்தடுப்பு வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டும், " என்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற நுரையீரல் ஆரோக்கியம் குறித்த உலகளாவிய கருத்தரங்கில் ஜம்ஹோய் டான்சிங் தெரிவித்தார்.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :