'மஹா' நகர்கிறது; புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மஹா புயல் வியாழக்கிழமையன்று பிற்பகலில் தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகருமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நவம்பர் நான்காம் தேதியன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகுமெனவும் அது அறிவித்துள்ளது.

தற்போது மஹா புயல் லட்சத் தீவுகளின் மீது, அமினி தீவுகளுக்கு வடகிழக்கில் 40 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருப்பதாகவும் இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 24 நான்கு மணி நேரத்தில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்திருப்பதாகவும் 33 இடங்களில் கன மழையும் நான்கு இடங்களில் மிக கனமழையும் பெய்திருப்பதாகவும் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 14 சென்டி மீட்டர் மழையும் குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருப்பதாக பாலச்சந்திரன் கூறினார்.

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யுமென்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களிலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மீனவர்களைப் பொறுத்தவரை, மாலத்தீவுகள், கேரளக் கடற்கரைப் பகுதியில் அக்டோபர் 31ஆம் தேதியும் லட்சத் தீவுப் பகுதிகளுக்கு அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், வரும் நவம்பர் 4ஆம் தேதியன்று வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருப்பெறக்கூடும். எனவே நவம்பர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் வடக்கு அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அக்டோபர் 31ஆம் தேதியன்று அவ்வப்போது மழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் இயல்பான அளவைவிட 14 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பு அளவைவிட 6 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பிவருகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெலாந்துறை நீர்த்தேக்கம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. கடலூர் - அரியலூர் இடையில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மண்ணாலான தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஓடும் சுகநதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பாய்ந்துவருகிறது.

பட மூலாதாரம், Getty Images

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய நீர்த்தேக்கங்களுக்குப் பெருமளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது. கருப்பாநதி நீர்த்தேக்கம் தன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அந்த அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணையும் நிரம்பியுள்ளது. குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நீலகிரி மலை ரயில் மூன்று நாட்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, அங்குள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளம் பாய்ந்துவருகிறது. இதனால், 38வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

காணொளிக் குறிப்பு,

நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்? : ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :