பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகளுக்கு குரல் கொடுக்கும் பெண் #iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் பத்தாவது அத்தியாயம் இது.)

ஒரு குழந்தை சமூகத்தில் பிறந்து வளரும்போது, பல சவால்களை எதிர்கொள்கிறது. சமீப காலமாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகம் பேசப்படுகிறது.

ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பை யாரால் உறுதி செய்ய முடியும்? நாம் என்ன செய்தால் சமூகத்திலுள்ள குழந்தைகள் பாதுகாப்பான ஒரு சூழலில் வளர்வார்கள் போன்ற கேள்விகளுக்கு பதிலாக பணியாற்றி வருகிறார் கன்யா பாபு.

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் சூழலில், பாதிகப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோருக்கும், காவ்லதுறை - நீதித்துறைக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார் கன்யா. அந்த குடும்பத்திற்கான உளவியல் பிரச்சனைகளை சமாளிக்கும் வழி மற்றும் சட்டரீதியாக வழக்கை எப்படி முன்னெடுத்துசெல்ல வேண்டும், ஆகியவற்றில் அவர் உறுதுணையாக நிற்கிறார்.

சிறுவயதில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்தான், இந்த துறையில் தன்னை ஈடுபட வைத்தது என்கிறார் அவர். "என் சிறு வயதில், எனக்கு ஒரு சம்பவம் நடந்தபோது, பெற்றோரிடம் கூறமுடியவில்லை. அவர்களிடம் இதுகுறித்து பேச எனக்கு நிறைய காலம் எடுத்தது. அது ஏன் என்று யோசித்தபோதுதான், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இருக்கும் பெரிய இடைவெளி புரிந்தது. அந்த இடைவெளியை பெற்றோர்தான் குழந்தைகளிடம் பேசி குறைக்க வேண்டும். அதுவே நாளை அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், துணிச்சலுடன் வந்து பெற்றோரிடம் கூற வைக்கும்," என்கிறார்.

சமூகத்தின் தாக்கம்:

"ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைக்கு, இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் நடந்துவிட்டால், சமூகம் செய்யும் முதல் விஷயம், அந்த குடும்பத்தை புறக்கணிப்பது. இது என்னமாதிரியான ஒரு கொடுமை! அந்த குடும்பத்தினரிடம், `நீங்கள் குழந்தையை ஒழுங்காக பார்த்துக்கொள்ளவில்லை` என்று பலர் கூறுகிறார்கள். அது எப்படி சரியாகும். இவ்வளவு வேதனை அளிக்கும் சூழலில், அந்த குடும்பத்திற்கு ஆதரவாகத்தானே இந்த சமூகம் இருக்க வேண்டும்?" என்று தனது கேள்வியை முன்வைக்கிறார் கன்யா பாபு.

ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால், அவர்களை குறை கூறுவதை விடுத்து, சுற்றி இருப்பவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே, இத்தகைய செயல்கள் குறித்து எதிர்த்துக்கேட்கும் துணிச்சல், அந்த பெற்றோருக்கு வரும் என்கிறார் அவர்.

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

பெற்றோரின் இன்றைய நிலை:

பாதிக்கப்பட்ட பல பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்து, இத்தகைய வழக்குகளை கையில் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிடுகின்றனர் என்கிறார் கன்யா. "நாங்கள் அவர்களிடம் முதல்முறை பேசும்போது, கை எடுத்து கும்பிட்டு `வழக்கு போட வேண்டாம், என் குழந்தையின் எதிர்காலம் போய்விடும்` என்று கூறிய பெற்றோர்களையெல்லாம் பார்த்துவிட்டோம். அவர்களை ஒப்புக்கொண்டு, துணிச்சலாக வழக்கை எதிர்கொள்ள வைப்பதே எங்களுக்கு இருக்கும் அன்றாட சிக்கல்," என்கிறார்.

கலந்தாய்வு முறை:

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உளவியல் ரீதியிலான கலந்தாய்வு மட்டுமின்றி, பெற்றோருக்கும் அவற்றை அளிப்பது அவசியம் என வலியுறுத்தும் கன்யா, கலந்தாய்விற்கு பிறகு, துணிச்சலாக வழக்கை எதிர்கொண்ட பல தாய்மார்களை பார்த்ததாக பெருமிதம் கொள்கிறார். அவர்களுகளுக்கு கலந்தாய்வு நடத்தி, தேற்றும் வரையில், வாழ்க்கை ஏதோ இருள் சூழ்ந்தது போன்று சில பெற்றோர்கள் உணர்ந்தும் உண்டு என்கிறார் அவர்.

மாற்றம் நம்மிடமிருந்து தொடங்குகிறது:

"சென்னையில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாணவர், தான் சென்ற சாலையில் இருந்த கடைக்காரர் ஒரு குழந்தையிடம் தகாத முறையில் நடப்பத்தைப்பார்த்து தட்டிக் கேட்டார். அவரை காவல்நிலையத்திலும் ஒப்படைத்தார். அன்றைய நாள், அந்த மாணவன் ஹீரோ ஆகிட்டான். காரணம், அவன் சமூகத்திற்காக குரல் எழுப்பி ஒரு குழந்தையை காப்பாத்திட்டான். இதைத்தான் இந்த சமூகத்தில் நான் எதிர்பார்க்கிறேன்."

"நீங்களும், நானும் சேர்ந்ததுதான் சமூகம், மக்கள் தங்களின் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள விரும்புவதுபோல, பக்கத்துவீட்டு குழந்தைக்கு ஏதும் தீங்கு ஏற்படுகிறது என்ற உணர்வு வந்தால், பெரியவர்கள் என்ற முறையில் முன்னின்று தட்டிக்கேட்க வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வளையத்தை பெரியதாக்கும்," என்றார் கன்யா பாபு.

தனியாக ஆரம்பித்த கன்யாவின் பயணத்தில் அவரின் நண்பர்கள், தன்னார்வலர்கள் என்று பல வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், மாணவ மாணவியரும் உள்ளனர். இதில் பலர், இலவசமாக குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாள்வதாக பெருமிதத்துடன் கூறுகிறார் கன்யா பாபு.

"நாம் கேள்வி எழுப்பாத வரையில், இந்த பிரச்சனை நிற்காது," என்பதை உரக்கச்சொல்லும் கன்யா, தான் கேள்வி கேட்டதுபோல அனைவரும் கேட்கவேண்டும் என்பதையும், குழந்தைகளுக்கான குரலாக சமூகத்திலும் உள்ள அனைவரும் எப்படி மாற முடியும் என்பதை எடுத்துரைக்கும் மாற்றத்திற்கான குரலாக இருக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :