தெலங்கானா பெண் வட்டாட்சியர் தீ வைத்து கொலை: பின்னணி என்ன?

பெண் தாசில்தார் விஜயா ரெட்டி படத்தின் காப்புரிமை UNkNOWN
Image caption பெண் தாசில்தார் விஜயா ரெட்டி

தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே ஒரு விவசாயி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் விஜயா ரெட்டி என்ற அந்த பெண் வட்டாட்சியர் உயிரிழந்தார். அவருடன் காயமடைந்த அவரது ஓட்டுநரும் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

என்ன நடந்தது?

வட்டாட்சியர் விஜயா ரெட்டி, நிலம் தொடர்பான தகராறில் அவருடைய அலுவலகத்தில், ஆண் ஒருவரால் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஹைதராபாத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அப்துல்லாபுர் மெட் பகுதியில் அவருடைய அலுவலக அறையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர் பெயர் கே. சுரேஷ் என கண்டறியப்பட்டுள்ளது.

விஜயா ரெட்டி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை முடித்துவிட்டு, பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்தார் என்று, அப்போது பணியில் இருந்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

திங்கள்கிழமை மக்கள் குறை கேட்பு நாளாகக் கடைபிடிக்கப் படுகிறது. மக்கள் தங்கள் குறைகளை அதிகாரியிடம் தெரிவிக்கும் கூட்டமாக அது இருக்கிறது.

அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வருவாய்த் துறை வட்டாட்சியர் அறைக்கு சுரேஷ் சென்று சிறிது நேரம் பேசியிருக்கிறார். சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து தீ ஜுவாலைகள் வெளியே வருவது தெரிந்தது.

சுரேஷ் உள்ளே இருந்து ஓடி வந்தார். சுரேஷ் உடலில் தீ இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். விஜயா ரெட்டியை தீ சூழ்ந்து கொண்டு எரிந்ததில் அவர் அறை வாயிலில் தரையில் விழுந்தார்.

உதவி கேட்டு விஜயா அலறியதை அப்போது அங்கிருந்தவர்கள் செல்போன்களில் எடுத்த வீடியோக்கள் காட்டுகின்றன.

விஜயா ரெட்டி மீது எதையாவது போட்டு தீயை அணைக்கலாம் என்பதற்காக, ஏதாவது கிடைக்குமா என்று அலுவலர்கள் தேடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த அலுவலர்களும், பொது மக்களும் குரல் கொடுத்தனர்

``மேடம் எங்கே? என்ன நடந்தது? அது நமது மேடமா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தனர். பெண் அதிகாரியைத் தேடி குரல் எழுப்பியவர்கள், எரிந்து கொண்டிருப்பது அந்த அதிகாரிதான் என சிறிது நேரத்தில் உணர்ந்தனர். அலுவலர்கள் அதிர்ச்சியில் அழுதனர்.

அப்போது ஒரு போர்வையை எடுத்து விஜயா ரெட்டி மீது வீசி தீயை அணைத்தனர். முகம் கருகிவிட்ட நிலையில் மூச்சுவிட முடியாமல், அவர் அலறிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் தீக்காயங்களுக்குப் பலியாகிவிட்டார்.

என்ன நடந்தது என்று அங்கிருந்தவர்களுக்கு இன்னும் புரியவில்லை. விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்றபோது, சந்திரய்யா (அட்டெண்டர்), குருநாதம் (ஓட்டுநர்) ஆகிய இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அறையின் கதவை மூடி தாழிட்டுவிட்டு விஜயா ரெட்டி மீது சுரேஷ் பெட்ரோல் ஊற்றினார் என்று, அதிகாரியின் உதவிக்குச் சென்ற குருநாதம் தெரிவித்தார்.

``உள்ளே இருந்து அலறல் சப்தம் வந்ததைக் கேட்டதும், நானும் அட்டெண்டரும் உள்ளே சென்றோம். அதற்குள் மேடம் அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.

Image caption ஓட்டுநர் குருநாதம்

அந்த ஆளை வெளியே இழுத்துவிட நாங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தோம். அந்த தள்ளுமுள்ளுவில் 'மேடம்' தரையில் விழுந்துவிட்டார். எங்கள் மீதும் பெட்ரோல் விழுந்தது. அதை நாங்கள் உணர்வதற்குள் தீ பிடித்துக் கொண்டது'' என்று நகரில் உள்ள மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த (பிறகு இறந்துவிட்ட) குருநாதம் கூறினார்.

சுரேஷ் குறைந்தபட்சம் 60 சதவீத தீக்காயங்களுடன் சாலையில் நடந்து போனதை சிலர் பார்த்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சுரேஷை பார்த்து பிடித்துக் கொண்டனர். சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ரச்சகொண்டா டிவிஷன் காவல் துறை ஆணையாளர் மகேஷ் பகவத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். ``அரசு அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை. இதைச் செய்தவர் காவல் துறையின் காவலில் இருக்கிறார். தனி நபராக அவர் இதைச் செய்தாரா அல்லது அவருக்கு உதவியாக வேறு யாரும் இருந்தார்களா என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்த கொலையாக இது உள்ளது. நிலத்தகராறு தொடர்பாக இந்தக் கொலை நடந்துள்ளது. கூடிய விரைவில் விசாரணையை நாங்கள் முடிப்போம்'' என்று அவர் கூறினார்.

விஜயா ரெட்டி யார்?

படத்தின் காப்புரிமை UGC

ஆசிரியை பணியில் இருந்த விஜயா ரெட்டி 2009ல் அரசு வருவாய்த் துறை அதிகாரியாக வேலையில் சேர்ந்தார். அப்துல்லாபுர் மெட் பகுதியில் பணிக்கு வருவதற்கு முன்னதாக சங்காரெட்டி, மல்காஜ்கிரி கோட்டங்களில் இவர் பணியாற்றியுள்ளார். இந்தப் பதவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இருந்து வந்தார்.

நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அவர், ஆசிரியர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். விஜயாவின் கணவர் சுபாஷ் ரெட்டி நகரில் கல்லூரி ஒன்றில் தாவரவியல் ஆசிரியராக இருக்கிறார். அவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அருகில் உள்ள கோட்டங்களில் பணியாற்றும் அவருடைய சக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விஜயா கடும் உழைப்பாளி என்று அவர்கள் கூறினர். முன்பு பணியாற்றிய இடத்தில் விஜயாவுடன் சேர்ந்து தாம் பணியாற்றியதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு முன்னாள் சக ஊழியர் தெரிவித்தார். ``அவர் மிகவும் நல்லவர். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காதவர். மிகவும் அன்புடன் நடந்து கொள்ளக் கூடியவர்'' என்று அந்தப் பெண் ஊழியர் தெரிவித்தார்.

சுரேஷ் யார்?

அவர் ரங்கா ரெட்டி மாவட்டம் கௌரெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்து, அந்தக் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுரேஷ் குடும்பத்தினரிடம் விசாரிக்க காவல் துறையினர் அங்கு சென்றதால், திங்கள்கிழமை மாலை நேரம் அந்தக் கிராமத்தின் மையப் பகுதி பரபரப்பாக இருந்தது. வீட்டுக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் சுரேஷின் தந்தை கிருஷ்ணா பேசினார்.

``என் மகனின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக அவன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான். நாங்களும், வேறு 30 குடும்பத்தினரும் சுமார் 110 ஏக்கர் நிலம் வைத்திருந்தோம். அந்த நிலம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. ஆனால் அந்த வழக்கை நானும், எனது சகோதரனும் தான் பார்த்து வருகிறோம். வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அவன் ஏன் சென்றான் என எங்களுக்குத் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

Image caption சுரேஷ்

இருந்தபோதிலும், கிராமத்தினரின் கருத்து இரண்டு வகையாகவும் உள்ளது. இந்தக் கொடூர செயலுக்காக சுரேஷை உடனடியாகத் தண்டிக்க வேண்டும் என்று கிராமவாசி ஒருவர் கூறினார்.

``சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. யார் அவன்? தன்னுடைய மனைவி, பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்கத் தெரியாத சுயநலவாதி அவன். ஒரு பெண்ணுக்கு எதிராக கொடூரமான செயலை அவன் செய்திருக்கிறான். அவனை ஒருபோதும் மன்னிக்கவே கூடாது'' என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் கூறினார்.

பிபிசி தெலுங்கு பிரிவு செய்தியாளரிடம் பேசிய கிராம அலுவலர் மல்லேஷ், நிலத்துக்கான பட்டா புத்தகத்தைப் பெறுவதற்கு சில ஆண்டுகளாகவே அந்தக் குடும்பத்தினர் போராடி வருவது தமக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.

``அவர்களுடைய பொறுப்பில் ஒரு நிலம் இருந்துள்ளது எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்களுக்குச் சாதகமாக உத்தரவுகள் வரவில்லை. அநேகமாக இதனால் அவர் விரக்தி அடைந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும், நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது'' என்று அவர் கூறினார்.

இருந்தபோதிலும், நில விவகாரத்தை தீர்த்து வைப்பதற்கு பெண் அதிகாரிக்கு சுரேஷின் குடும்பத்தார் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத புகார்கள் கூறப்படுகின்றன. நில விவகாரம் பற்றி விவரம் அறிந்த ஊர்ப் பெரியவர்கள் சிலரும் அதை உறுதி செய்தனர். ஆனால் அந்த விஷயம் பற்றி, மேற்கொண்டு எதுவும் பேச அவர்கள் மறுத்துவிட்டனர். ``இப்போது நாங்கள் பேசினால், இறந்துவிட்ட ஒருவரைப் பற்றி தேவையில்லாமல் குற்றம்சாட்டுவதாக எல்லோரும் கூறுவார்கள். அதனால் பேசாமல் இருப்பது தான் எங்களுக்கு நல்லது'' என்று அவர்களில் ஒருவர் இந்தச் செய்தியாளரிடம் கூறினார்.

Image caption சுரேஷின் வீடு

இப்போது என்ன நடக்கும்?

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயா ரெட்டியின் இறுதிச் சடங்குகள் ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தன.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தெலங்கானா வருவாய் அலுவலர்கள் சங்கம் மூன்று நாட்களுக்கு பணி புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பிபிசி தெலுங்கு பிரிவுக்குப் பேட்டி அளித்த சங்கத்தின் தலைவர் ரவீந்தர் ரெட்டி வாங்கா, ``அரசு அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. மாஜிஸ்ட்ரேட்டாக உள்ள ஒருவர், தேவை ஏற்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உள்ள ஓர் அதிகாரி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இருந்தாலும், வருவாய் அதிகாரிகள் குறி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 15 சம்பவங்களில் வருவாய் அதிகாரிகள் மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

Image caption வட்டாட்சியர் அலுவலகம்

வருவாய் அதிகாரிகள் குறிவைக்கப்படுகின்றனரா?

சம்பவ இடத்தில் திரண்ட வருவாய் அலுவலர்கள் பிபிசி தெலுங்கு பிரிவிடம், பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசினர். அதிகாரிகளின் செயல்பாடு பற்றி தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் திரும்பத் திரும்ப எதிர்மறையான கருத்துகளைப் பேசி வருவதால், பொது மக்களிடமும் எதிர்மறை சிந்தனையே இருக்கிறது என்று அவர்கள் கூறினர்.

``ஊழலில் திளைத்திருக்கும் வருவாய்த் துறையை சுத்தம் செய்வதை தனிப்பட்ட பணியாக எடுத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஊழல் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொது மக்கள் மத்தியில் உரையாற்றும்போது, அது எங்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி விடுகிறது.

கடுமையாக உழைக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள். பொறுப்பில் உள்ளவர்களின், முன் யோசனையற்ற இதுபோன்ற பேச்சுகளால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது'' என்று மண்டல வருவாய் அதிகாரி ஒருவர் கூறினார்.

வருவாய் அலுவலர் சங்கத் தலைவர் ரவீந்தர் ரெட்டி இதை ஒப்புக்கொள்கிறார். ``முதல்வர் மட்டுமல்ல. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் இதே போன்ற கருத்துகளைக் கூறி வருகின்றனர். அவை சமூக வலைத் தளங்களிலும் பரவி வருகின்றன'' என்று அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்று கேட்டதற்கு, 2017ல் சந்திரசேகர ராவ் அரசு, நிலப் பதிவேடுகளில் குறைபாடுகளை சரி செய்து, திருத்தும் பணியை அறிவித்ததில் இருந்து பிரச்சினை ஆரம்பமானது என்று ரவீந்தர் ரெட்டி கூறினார்.

``நிலப் பதிவேடுகள் வேலையை முடிக்க நாங்கள் இரவு, பகலாக உழைத்தோம். முதல்வர் எங்களுக்கு நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் நாங்கள் பணிகளை முடித்தோம். சர்ச்சைகளுக்கு உள்ளான நிலங்கள் - பி - பிரிவில் சேர்க்கப்பட்டன. குடும்பங்களுக்குள் சர்ச்சை உள்ளவை, அரசுடன் சர்ச்சையில் உள்ளவை, எல்லைப் பிரச்சினை போன்றவை இந்தப் பிரிவில் வரும். இதிலும்கூட இதுவரை 95 சதவீத பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துவிட்டோம். ஆனால் சில வழக்குகள், சில ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்த சர்ச்சைகளையும் தீர்க்க நாங்கள், ஓய்வின்றி முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறோம். பணி நெருக்கடி தாங்காமல் ஒரு அதிகாரி தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.''

நிஜாமாபாத்தில் கிராமப்புற மண்டல வருவாய் அதிகாரி ஒருவர் அக்டோபர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

``ஊழல்வாதிகள் என்று எங்களுக்கு முத்திரை குத்தப்பட்டதும், எல்லோருமே ஊழல் செய்பவர்கள் என்பது போல மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், போதிய அலுவலர்கள் இல்லாமல் நாங்கள் பணியாற்றுகிறோம் என்பது தான் உண்மை.'' உடனடியாக குறைந்தது 2,000 வருவாய் அலுவலர்கள் தேவை என்றும், கிராம அளவில் குறைந்தது 4,000 அலுவலர்கள் தேவை என்றும் அவர் சொல்கிறார்.

வருவாய்த் துறை நிர்வாகம் முதல்வரின் பொறுப்பில் உள்ளது. காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பேசியதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், திங்கள்கிழமை இரவு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்