இன்ஃபோசிஸ் நிறுவனம்: 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு - நடப்பது என்ன?

இன்ஃபோசிஸ் நிறுவனம்: 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு - நடப்பது என்ன? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு"

படத்தின் காப்புரிமை Getty Images

காக்னிஸண்டைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

"ஒரே சமயத்தில் அதிகளவில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட போவதில்லை. அதிக உற்பத்தி கொண்ட நிறுவனமென்பதால், சில சமயங்களில் உற்பத்தி திறன் குறைவது இயல்பானது. இதனை பணி நீக்கத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது," என விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி: "அயோத்தி தீர்ப்பு - போலீஸார் விடுப்பெடுக்க தடை"

படத்தின் காப்புரிமை Getty Images

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து போலீசார் விடுமுறை எடுக்க தடை விதித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

தினசரி நடைபெற்ற வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த வாரம் ஓய்வு பெறுவதால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தீர்ப்பு வெளியாகிறபோது, நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசுக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு விடுமுறை ரத்துசெய்யப்படுவதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், சி.பி.சி.ஐ.டி, ரெயில்வே உள்பட போலீஸ்துறைகளை சேர்ந்த டி.ஜி.பி.க் கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், அனைத்து மண்டல ஐ.ஜி.க் கள், டி.ஐ.ஜி.க்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர்கள் வரை யாருக்கும் வருகிற 10-ந்தேதி முதல் விடுமுறை வழங்கப்படகூடாது. மறு உத்தரவு வரும் வரையில் இதனை கடை பிடிக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பணியை மேம்படுத்திடும் வகையில் சிறப்பு படையினர் முகாம் அலுவலகங்களில் எப்போதும் தயார் நிலையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் இருப்பது போன்று அனைத்து போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "நாடு முழுவதும் 190 இடங்களில் சிபிஐ சோதனை"

ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வங்கி மோசடி தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நாடு முழுவதும் 190 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள், "பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமா்ஸ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, தேனா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவற்றில் ரூ.7,200 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

குறிப்பாக ,பொதுத் துறை வங்கிகளில் மட்டும் மோசடி தொடா்பாக 42 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடா்பாக 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 190 இடங்களில் சோதனை நடைபெற்றன. முறைகேடுகள் சம்பந்தமான ஆவணங்களை திரட்டுவதற்காக சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றனா். நடப்பாண்டில் அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்திய மிகப் பெரிய சோதனைகளில் இதுவும் ஒன்றாகும்.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் எஸ்இஎல் தயாரிப்பு நிறுவனம் ரூ.113.55 கோடி; எஸ்பிஐ-இல் அட்வான்ஸ் சா்பாக்டன்ட்ஸ் ரூ.118.49 கோடி; தேனா வங்கியில் (தற்போது பேங்க் ஆஃப் பரோடா) எஸ்கே நிட் ரூ.42.16 கோடி; கனரா வங்கியில் கிருஷ்ணா நிட்வோ் டெக் ரூ.27 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

வங்கி மோசடி தொடா்பாக, நிறுவன இயக்குநா்கள், பங்குதாரா்கள் மீது ஏற்கெனவே தனித்தனியாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தில்லி, குருகிராம், சண்டீகா், லூதியானா, டேராடூன், நொய்டா, பாராமதி, மும்பை, தாணே, சில்வாஸா, கல்யாண், அமிருதசரஸ், ஃபரீதாபாத், பெங்களூரு, திருப்பூா், சென்னை, மதுரை, கொல்லம், கொச்சி, பாவ்நகா், சூரத், ஆமதாபாத், கான்பூா், காஜியாபாத், போபால், வாராணசி, படிண்டா, குருதாஸ்பூா், கொல்கத்தா, பாட்னா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தனா்.

இந்து தமிழ்: "டெல்லியில் குடும்பத்துடன் போலீஸார் போராட்டம்"

படத்தின் காப்புரிமை Getty Images

போலீஸாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான போலீஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங் களை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி வழக்கறிஞர்கள் நீதிமன்ற போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த பர பரப்பு அடங்கும் முன் நேற்று முன் தினம் டெல்லியில் சாகேட் நீதிமன்ற வளாகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த போலீஸ்காரர் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கினர்.

இந்நிலையில், போலீஸாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கோரி டெல்லியில் போலீஸ் தலைமையகம் முன் நேற்று ஆயிரக்கணக்கான போலீஸார் சீருடையுடன் கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். இதனால், அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸாரிடையே பேசிய டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், ''இது போலீஸாருக்கு சோதனையான காலம். கட்டுப்பாடு மிக்க படையாக நாம் செயல்பட வேண்டும். சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அரசும் மக்களும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். போலீஸார் பணிக்குத் திரும்ப வேண்டும்'' என்றார். நாட்டில் இதுவரை போலீஸார் போராட்டம் நடத்தாத நிலையில், இந்தப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனிக்கிழமையன்று போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனிக் கிழமை நடந்த மோதல் பற்றியும் அதற்கான சூழல் பற்றியும் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா பல்வேறு பார் கவுன்சில்களுக்கும் நேற்று எழுதிய கடிதத்தில், ''நீதிமன்ற புறக் கணிப்பை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். ரவுடித்தனத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்கள் பற்றிய விவரங் களை நாளைக்குள் இந்திய பார் கவுன்சில் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சாகேட் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ்காரர் தாக்கப்பட்டது தொடர்பாகவும் மேலும் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கியது தொடர்பாகவும் சாகேட் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கறிஞர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்த போலீஸாருக்கு தலா ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் சதீஷ் கோல்ச்சா அறிவித்தார். மேலும், போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். உயர் போலீஸ் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று 11 மணி நேரப் போராட்டத்தை போலீஸார் கைவிட்டனர்.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த மோதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வழக்கறிஞர் களைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், நிலைமைகளைச் சீராக்கும் முயற்சியில் மத்திய உள் துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. வழக்கறிஞர்களைக் கைது செய்யத் தடை விதித்த உத்தரவு குறித்து உயர் நீதிமன்றத்திடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

இதனிடையே, துணைநிலை ஆளுநர் அனில் பைஜலை டெல்லி போலீஸ் புலனாய்வு பிரிவு சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் சந்தித்து நிலைமைகளை விளக்கினார். போலீஸாரும் வழக்கறிஞர்களும் இணக்க மாக செயல்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமில்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஆளுநர் அனில் பைஜல் வலியுறுத்தியிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :