வெங்காய விலை குறைவது எப்போது? மகாராஷ்டிர மழையால் வெங்காய வரத்து பாதிப்பு

வெங்காயத்தின் விலை படத்தின் காப்புரிமை Getty Images

பருவமழை காரணமாக அதிகரித்துள்ள வெங்காய விலை ஒருவாரம் கழித்து குறையும் வாய்ப்புள்ளது என சென்னையில் உள்ள வெங்காய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் இருந்து வரவேண்டிய வெங்காய லோடுகள் வருவதில் தாமதம் இருப்பதால், பெங்களூருவில் இருந்து வரும் வெங்காயத்திற்கு அதிக தேவை இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சில்லறை விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படும் என்றும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 ஆக இருக்கும் என்றும் கூறும் வியாபாரிகள் மழை குறைந்தால்தான் நாசிக்கில் இருந்து வெங்காய லோடுகள் தமிழகத்திற்கு வரும் என்று கூறுகிறார்கள்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காய விற்பனையில் ஈடுபட்டுள்ள வெங்கடேஷ் நாராயணனிடம் பேசியபோது, வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாது என்று கூறியதோடு, விற்பனையில் உள்ள சிக்கல்களையும் விளக்கினார்.

''கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விற்பனையில் சுமார் 50 மொத்த வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் சுமார் 5,000 டன் வெங்காயம் தேவைப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக 3,500 டன் வெங்காயம் மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது.''

''மகாராஷ்டிராவில் மழை குறைந்தால்தான் லோடுகளை ஏற்றுவார்கள். மழையில் ஒரு சில மணிநேரம் வெங்காயம் நனைந்தால்கூட, பெரும்பாலான வெங்காய மூட்டைகள் கெட்டுவிடும். ஈரம் படாமல் வெங்காயத்தை எடுத்துவருவது சிரமம் என்பதால், தட்டுப்பாடு நிலவுகிறது,''என்றார் வெங்கடேஷ்.

படத்தின் காப்புரிமை Getty Images

"மகாராஷ்டிராவில் இருந்து சரக்கு வண்டிகள் தமிழகம் வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும் என்பதால், பெங்களூரு வெங்காயத்தை தமிழகம் நம்பியுள்ளது. சின்ன வெங்காயம் ஆந்திராவில் இருந்து கிடைக்கிறது; அதுவும் தற்போது விலை குறைய வாய்ப்பில்லை" என்கிறார்.

''தமிழகத்தில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விளைச்சல் போதுமானதாக இல்லை. உலக அளவில் தரமான வெங்காயம் என அறியப்படும் நாசிக் வெங்காயம் கிடைக்க ஒருவாரம் ஆகும். மழை ஒரு பக்கம், தீபாவளி காரணமாக லோடு வேலைக்கு வரும் ஆட்கள் இன்னும் வந்துசேரவில்லை என்பது ஒரு பக்கம். இதுபோன்ற காரணங்களால், மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படும்,'' என்கிறார் வெங்கடேஷ்.

படத்தின் காப்புரிமை Vijay
Image caption வெங்காய விலை தொடர்பாக அமைச்சர்கள் நடத்திய ஆய்வுக் கூட்டம்.

வெங்காய விலையை கட்டுப்படுத்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் காமராஜ் மற்றும் செல்லூர் ராஜு, வெங்காயத்தை பதுக்கிவைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய விலை அதிகரிப்பது இயல்புதான் என்று கூறிய அமைச்சர்கள், ''காய்கறி சந்தைகளில் ஆய்வு நடத்தியதால், ஒரு கிலோவுக்கு ரூ.4 வரை இன்று விலை குறைந்துள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வு கடையில் வெங்காயம் ரூ.33க்கு கிடைக்கிறது. தட்டுப்பாடு நிலவாதவகையில் தொடர்ந்து விற்பனை நடைபெறும். 2010ல் வெங்காய விலை ரூ.150 வரை உயர்ந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா விலை நிதியம் அமைத்து, விலையை கட்டுப்படுத்தினார். அதே வழியை நாங்கள் தற்போது பின்பற்றுகிறோம்,'' என்று தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்