ஆந்திரா தொடர் கொலைகள்: ரைஸ் புல்லிங் மோசடி, சயனைடு கொடுத்து 10 கொலை செய்த நபர்

காவல்துறையினர்

தொடர் கொலைகளை செய்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவா என்று அறியப்படும் சிம்ஹாத்ரிக்கு எதிராக ஆந்திர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

20 மாதங்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் 10 கொலைகளை சிம்ஹாத்ரி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 10 பேரில் மூன்று பேர் பெண்கள். கொல்லப்பட்டோரில் சிம்ஹாத்ரியின் உறவினர்கள், வீட்டு உரிமையாளர், நண்பர்கள் மற்றும் அவருக்கு கடன் வழங்கியோர் உள்ளனர்.

இவற்றில் 4 மரணங்கள் மட்டுமே சந்தேகத்திற்குரிய மரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனையவை இயற்கை மரணங்களாக நம்பப்பட்டவை.

பிரசாதத்தில் சைனைடு கலந்து கொடுத்து சிம்ஹாத்ரி இந்த கொலைகளை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொலை செய்ததன் மூலம் காவல்துறைக்கும், உறவினர்களுக்கும் கொலை பற்றிய எந்த தடயங்களையும் விடாமல் பார்த்துக்கொண்டதோடு, இறந்தேரின் உடைமைகள் அனைத்தையும் திருடிக் கொள்வது சிம்ஹாத்ரியின் வழக்கமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடற் பயிற்சி கல்வி ஆசிரியரான காத்தி நாகராஜூவின் சந்தேகத்திற்குரிய மரணத்தால் ஏலூரு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றால், இந்த கொலை சம்பவங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திர பிரதேசத்தின் ஏலூரு மாவட்டத்தின் வேலாங்கி கிராமத்தை சேர்ந்த சிவா என்று அறியப்படும் சிம்ஹாத்ரி, வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், எளிதாக பணம் சம்பாதிக்க இவ்வாறு கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

சந்தேகமான முறையில் உயிரிழந்த நாகராஜு, காவல்துறை குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர் ஸ்ரீநிவாச ராவின் சகோதரர். தனது சகோதரரரின் உயிரிழப்பு சந்தேகத்திற்குரியதாக தோன்றியதற்கு காரணங்களை ஸ்ரீநிவாசராவ் பிபிசியிடம் விளக்கினார்.

"2019ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி 1 லட்சத்து 90 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் போட செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு 40 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் கொண்டு சென்ற நாகராஜு வீடு திரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

"அரிசியை இழுக்கும் நாணயம்" (குடும்பத்திற்கு பெருஞ்செல்வத்தை கொண்டு வரும் என நம்பிக்கை கொண்ட நாணயம்) தன்னிடம் இருப்பதாக கூறிய சிம்ஹாத்ரி, அத்தகைய நாணயத்தை பெற்றுகொள்ள பணத்தோடு வருவதற்கு காத்தி நாகராஜுவை அழைத்துள்ளார்.

காத்தி நாகராஜு, சிம்ஹாத்ரியை சந்திக்க அங்கு சென்றபோது, கடவுளுக்கு படைத்ததாகத் தெரிவித்து, சைனைடு கலந்த பிரசாதத்தை சாப்பிட கொடுத்துள்ளார்.

"அதனை சாப்பிட்ட பின்னர், கொஞ்சம் தூரம் வண்டி ஓட்டி சென்ற எனது சகோதரர் ஏலூரு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இதயம் செயலிழந்து சாலை ஓரத்தில் விழுந்துள்ளார். அங்கு சென்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று ஸ்ரீநிவாசராவ் தெரிவித்தார்.

சிறந்த ஆரோக்கியத்தோடு விளங்கிய காத்தி நாகராஜு ஓர் உடற்பயிற்சி ஆசிரியர் ஆவார்.

வங்கிக்கு செல்ல வேண்டிய ஒருவர் தெலைதூரத்தில் விழுந்து கிடந்தது, சந்தேகத்தை தூண்டியது.

படத்தின் காப்புரிமை iStock
Image caption சித்தரிப்பு படம்

நாகராஜுவின் சடலம் நிறம் மாறியதும், அவரது வங்கி கணக்கில் பணம் போடப்படாமல் இருந்ததும், சந்தேகத்தை அதிகரித்தது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினரால் பதிவு செய்யப்பட்ட புகாரை காவல்துறை விசாரிக்க தொடங்கியது என்றார் ஸ்ரீநிவாச ராவ்.

"முதலாவது வழக்கு பதிவு செய்யப்பட்போது, புலனாய்வு சரியாக நடத்தப்பட்டிருந்தால், அதற்கு பிறகு செய்யப்பட்ட கொலைகளை தவிர்த்திருக்கலாம்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இதற்கு முன்னால் சிம்ஹாத்ரி செய்த மூன்று கொலைகள் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் சந்தேகத்திற்குரியதாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சந்தேக நபரை காவல்துறையினரால் அடையாளம் காண முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

"ஏலூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி இந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவரை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், நாங்கள் எங்கள் சகோதரரை இழந்துவிட்டோம்" என்று கூறிய ஸ்ரீநிவாசராவ் கண்ணீர் விட்டு அழுதார்.

புலனாய்வு நடைபெற்றது எப்படி?

நாகராஜுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை புலனாய்வை நடத்தியதாக, மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நவ்தீப் சிங் கிரிவால் பிபிசி தெலுங்கு பிரிவிடம் கூறினார்.

நாகராஜுவின் செல்பேசி மற்றும் சிசிடிவி காணொளியின் அடிப்படையில் காவல்துறை புலனாய்வு தொடங்கியது.

சிம்ஹாத்ரியின் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு நாகராஜு பலமுறை தொலைபேசியில் அழைத்திருப்பதையும், கடைசியாக சிம்ஹாத்ரிக்கு அழைத்திருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதனை அடிப்படையாக கொண்டு நாகராஜுவை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். அந்த விசாரணையில் கடந்த 20 மாதங்களில் 10 பேரை கொலை செய்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தான் கொலை செய்தோருக்கு பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்யும் முறையை சிம்ஹாத்ரி கையாண்டுள்ளார்.

சிம்ஹாத்ரியால் கொலை செய்யப்பட்ட பெரும்பாலோரின் குடும்பங்கள், தங்களின் உறவினர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கருதி, காவல்துறையில் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், மேலதிக கொலைகளை செய்ய சிம்ஹாத்ரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆட்களோடு தொடர்பு கொண்டு, அவர்களின் பலவீனங்களை புரிந்து கொண்டு, அவர்களை பொறியில் சிக்க வைக்கும் பழக்கத்தை சிம்ஹாத்ரி கொண்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இவர் குறிவைத்தபின் இவரது பொறியில் சிக்காமல் தப்பியோர் வெகு சிலரே என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

"அரிசியை இழுக்கும் நாணயத்தை" வழங்குவதாக கூறி ஆட்களை சிம்ஹாத்ரி தன்வசப்படுத்தியுள்ளார். இந்த நாணயத்தை வாங்குவதற்கு பணம் கொண்டு வர சொல்லி, அவர்களை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அவ்வாறு யாரும் இல்லாத இடத்திற்கு செல்வோருக்கு சயனைடு கலந்த பிரசாத்த்தை வழங்கிய சிம்ஹாத்ரி, அவர்களை கொன்று விட்டு, பணத்தையும், தங்க ஆபரணங்களையும் திருடிவிடுவார் என்கிறார்கள் காவல்துறையினர்.

சிம்ஹாத்ரி யார்?

ஏலூருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்த சிம்ஹாத்ரி, "அரிசியை இழுக்கும் நாணயம்" (குடும்பத்திற்கு பெருங்செல்வத்தை கொண்டு வரும் அதிருஷ்ட நாணயம்) மற்றும்" வழிபாடு மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவது" போன்ற ஏமாற்று வித்தைகளால் சிலரை கவர்ந்துள்ளார்.

அவரிடம் சிக்கிய ஆட்களின் பலவீனத்தை பயன்படுத்தி பணத்தை பறித்த அவர், "அரிசியை இழுக்கும் நாணயம்" மற்றும் "வழிபாடு மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவது" போன்ற ஏமாற்று உத்திகளை அவர்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இதற்காக சில சடங்குகளை நடத்த வேண்டும் என்று அந்த ஆட்களை நம்ப வைத்து, சைனைடு கலந்த பிரசாதத்தை அவர்களுக்கு வழங்குவார். இந்த பிரசாதத்தை சாப்பிட்டு அவர்கள் இறந்து போயுள்ளனர்.

தவணை முறையில் அந்த மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்த சிம்ஹாத்ரி, வழிபாடு நடத்துவதற்கு அதிக பணம் கொண்டு வர சொல்வார்.

இறந்தோரின் பணத்தையும், தங்க ஆபரணங்களையும் திருடிவிட்டு, அந்த இடத்தை விட்டு அமைதியாக சிம்ஹாத்ரி சென்றுவிடுவார்.

இவ்வாறு திருடிய பணத்தால், ஏலூருவில் சிம்ஹாத்ரி ஒரு வீடு கட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்கள் யார்?

2018ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் நூஜிவீடுவை சேர்ந்த வல்லபனேனி உமா மகேஸ்வர ராவ் கொல்லப்பட்ட முதல் நபராவார்.

"அரிசியை இழுக்கும் நாணயம்" வழங்குவதாக கூறி இவரை வயல்வெளிக்கு அழைத்து சென்ற சிம்ஹாத்ரி, சயனைடு கலந்த பிரசாதத்தை கொடுத்து கொலை செய்துள்ளார். "அரிசியை இழுக்கும் நாணயம்" வாங்குவதற்கு பணம் கொண்டு வர ஏற்கெனவே சொல்லியுள்ளார்.

பின்னர், அவரிடம் இருந்து 4 லட்ச ரூபாயையும், ஒரு வெள்ளி மோதிரத்தையும் சிம்ஹாத்ரி திருடியுள்ளார். உமா மகேஸ்வர ராவ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அனைவரும் நம்பியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

2018ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி கிருஷ்ணா மாவட்டத்தின் மாரிபன்டம் கிரமத்தை சேர்ந்த புலுப்பு தவிதய்யாவை ஏமாற்றி எட்டு லட்சம் ரூபாயை சிம்ஹாத்ரி திருடியுள்ளார். அவரை கொன்றுவிட்டு அவரது உடைமைகளையும் திருடியுள்ளார்.

அடுத்த 20 நாட்களுக்குள் இதே உத்தியை பயன்படுத்தி விஜயவாடாவை சேர்ந்த காண்டிகோட்ட வெங்கடா பாஸ்கர் ராவை சிம்ஹாத்ரி கொன்றுள்ளார். பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ஒரு லட்சத்து எழுபதாயிரத்தை சிம்ஹாத்ரி திருடியுள்ளார்.

இந்த மூன்று கொலைகளும் இயற்கையான இறப்புகள் என்று நம்பப்பட்டதால், வழக்குகள் ஏதுவும் பதியப்படவில்லை.

ஆனால், கிருஷ்ணா மாவட்டத்தின் மஸ்டாபாத்தை சேர்ந்த கடியம் பாலா வெங்கடேஸ்வர ராவ், சிம்ஹாத்ரி கடன் வாங்கியிருந்த இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை திருப்பித்தர கேட்டபோது, அவருக்கு சைனைடு கொடுத்து கொன்றுள்ளார். இந்த இறப்பு சந்தேகத்திற்குரியதாக காவல்துறையில் பதிவானது.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாவது கொலை நிகழ்ந்தது.

ஏலூரு மாவட்டத்தின் வாங்காயகுடாமிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக பணியாற்றிய சோடவரபு சூரியநாராயணா, பணத்தை இரட்டிப்பாக்கும் சிம்ஹாத்ரியின் ஏமாற்று வலையில் விழுந்து ஐந்து லட்சத்தை கொடுத்துள்ளார்.

அவரும் பிறரை போலவை சிம்ஹாத்ரியால் கொல்லப்பட்டுள்ளார். இதுவும் சந்தேக மரணமாக காவல்துறையில் பதிவாகியுள்ளது.

ஏப்ரல் 28ம் தேதி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புருஷோத்தபட்டணம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணானந்தை ஆயுர்வேத மருந்துகளை வழங்குவதாக சொல்லி கொன்றுள்ளார். இந்த மரணம் வழக்காக பதிவாகவில்லை.

இதைப் பார்க்க நீங்கள் விரும்பலாம்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கை கால் நீட்டினாலும் எலும்பு முறிவு: அரிய நோயால் அவதிப்படும் சிறுமியின் தளராத நம்பிக்கை

சிம்ஹாத்ரியின் உறவினரான ராஜமகான்திரவரத்தை சேர்ந்த கோட்டப்பள்ளி ராகவம்மாவுக்கு நீரழிவை கட்டுப்படுத்தவதற்கு மருந்து வழங்குகின்ற பாணியில் சயனைடு கொடுத்து கொன்றுள்ளார்.

இந்த பெண்ணின் உடலில் இருந்து 24 கிராம் தங்கத்தை சிம்ஹாத்ரி எடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த மரணத்திற்கும் எந்த வழக்கும் பதியப்படவில்லை.

2019ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சிம்ஹாத்ரியின் இன்னொரு உறவினரான சமந்தகுர்த்தி நாகமணி கொல்லப்பட்டார். இவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயையும், 20 சவரன் தங்கத்தையும் சிம்ஹாத்ரி திருடியுள்ளார். இது சந்தேக மரணமாக பதிவாகியுள்ளது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏலூரு மாவட்டத்தில் வீட்டு உரிமையாளரான பெண் ராமுலம்மாவை சிம்ஹாத்ரி கொன்றுள்ளார். அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயையும், 40 கிராம் தங்கத்தையும் திருடியுள்ளார். இந்த மரணத்திற்கு எந்த வழக்கும் பதியப்படவில்லை.

இந்த குற்றங்களை எல்லாம் தான் செய்ததாக சிம்ஹாத்ரி ஒப்புகொண்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிம்ஹாத்ரி சயனைடு பெற்றது எப்படி?

விஜயவாடாவை சேர்ந்த பாபு என்று அழைக்கப்படும் ஷேக் அமீனுல்லாவிடம் இருந்து சிம்ஹாத்ரி சயனைடு பெற்றுள்ளார்.

சயனைடு விநியோக உரிமம் பெற்றுள்ள சென்னையிலுள்ள ஒருவரிடம் இருந்து அமீனுல்லா சைனைடு பெற்றுள்ளதாக ஏலூரு காவல் ஆய்வாளர் அனசூரி சீனிவாசராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

எலெக்ட்ரோ நிக்கல் பிளேட் நிலையம் நடத்தி வரும் தனது தம்பி ஆசாத் சென்னையிலுள்ளவரிடம் இருந்து இதனை வாங்கி வந்துள்ளார். மோட்டார் உதிரி பாகங்களுக்கு நிக்கல் கோட்டிங், வழுவழுப்பாக்குதல், ஆகியவற்றுக்கு அசாத் சயனைடு, துத்தநாக உப்பு, குரோம் உப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளார்.

பொருட்களை வாங்குவதற்கு தனது சகோதரருடன் செல்லும் அமீனுல்லா, அசாத்துக்கு தெரிந்தே சயனைடு வாங்கி, பின்னர் சிம்ஹாத்ரிக்கு விநியோகித்துள்ளார்.

அமீனுல்லாவுக்கும் குற்றப் பின்னணி உள்ளதாகவும், அவருக்கு எதிரான பல வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவரை பற்றி அறிய வந்த சிம்ஹாத்ரி, சைனைடு பெற்றுகொள்வதற்கு அமீனுல்லாவோடு பழகியுள்ளார்.

இரண்டு சந்தேக நபர்களும் இப்போது காவலில் உள்ளனர்.

"அரிசி இழுக்கும் நாணயம்" என்பது என்ன?

செம்பு மற்றும் இரிடியத்தால் செய்யப்பட்ட உலோகப் பொருள்தான் "அரிசியை இழுக்கும் நாணயம்" எனப்படுகிறது. இதற்கு அரிசை இழுக்கும் சக்தி நம்பப்படுகிறது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இரிடியம் விண்வெளியிலும், ராணுவ ஆய்வு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறான ஒவ்வொரு நாணயமும் 100 கோடி மதிப்புள்ளது என்றும் இதற்கு செல்வத்தை பெருக்கும் சக்தி உள்ளது என்றும் என்று மக்கள் பொய்யாக நம்பி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்