திருக்குறள் பிரசாரம் செய்யும் பினாயில் வியாபாரி: 3,000 சிலைகள், 700 வகுப்புகள்

திருவள்ளுவர்

"மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் திருக்குறள் தீர்வு சொல்கிறது. மருத்துவர், விவசாயி, ஆசிரியர் என எந்தத் துறையை சேர்ந்தவரும் திருக்குறளை படித்துணர்ந்து தன்னை அதன் பொருளோடு இணைத்து தெளிவுபெறலாம்.

இப்படிப்பட்ட அரிய நூலான திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது சவாலான பணியாக இருந்தாலும், அதனை வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே இருப்பேன்" என்கிறார் நித்தியானந்த பாரதி.

கோயம்புத்தூரில் வசித்துவரும் நித்தியானந்தபாரதி, பினாயில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். சிறுவயதில் இருந்தே தமிழ் மொழி மீது பற்றுகொண்ட இவர், திருக்குறளையும் திருவள்ளுவரையும் இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணியை கடந்த 17 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

மாதத்தில் 15 நாட்கள் வேலைக்காகவும், 15 நாட்கள் திருக்குறளுக்காகவும் தான் ஒதுக்குவதாக இவர் கூறுகிறார்.

கணபதி தமிழ்ச் சங்கம் எனும் சங்கத்தை தொடங்கி, மொழி ஆர்வலர்கள் பலரை ஒருங்கிணைத்து வாரந்தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார் இவர்.

'2002 முதல் தொடர்ந்து 700 வாரமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறேன். பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், பெரியவர்கள், எனது குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் இந்த வகுப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக எத்தனையோ வேலைகள் செய்தாலும், நான் செய்யும் திருக்குறள் பணி ஆத்ம திருப்தியை எனக்களிக்கிறது' என்கிறார்.

இவரின் வீடு முழுவதும் ஒரு அடி முதல் ஐந்து அடி வரையிலான திருவள்ளுவர் சிலைகள் நிரம்பியுள்ளன. திருக்குறள் பிரசாரத்தின் முக்கிய பணியாக திருவள்ளுவர் சிலைகளை உருவாக்கி பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நிறுவும் பணிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

'ஒரு விஷயத்தை நேரில் காணும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல் திருக்குறளை மக்களிடம் எடுத்துச்செல்ல திருவள்ளுவரின் சிலைகள் உதவும் என கருதினேன். ஆதலால், கடந்த 2009 ஆம் ஆண்டில் சொந்த செலவில் 3,000 திருவள்ளுவர் சிலைகளை தயாரித்து இலவசமாக வழங்கினேன். இதற்குபின்னர், திருவள்ளுவர் சிலைகளை பல உயரங்களில் உருவாக்கி தருமாறு கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கேட்டுக்கொண்டனர். பின்னர், திருவள்ளுவர் சிலை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தேன். இப்போது, வெளிநாடுகளில் இருந்து பல ஆர்டர்கள் வந்துள்ளன. திருமண விழாக்களில் இந்த திருவள்ளுவர் சிலைகள் அன்பளிப்பாக கொடுக்கப்படுகின்றன. சிரமங்கள் பல இருந்தாலும், உற்பத்தி விலையில் மட்டுமே சிலையை விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என கூறுகிறார்.

தற்போது, எழுந்துள்ள திருவள்ளுவரின் மதம் குறித்த சர்ச்சைகள் குறித்து அவரிடம் கேட்டபோது, 'திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை, பொது என்ற சொல் அனைவருக்குமானது என்ற பொருளைத் தருகிறது. அதனை எழுதிய திருவள்ளுவரும் அனைவருக்கும் பொதுவானவர்தான். இறைவனை தனக்கு பிடித்த வடிவத்தில் வழிபடுவது போன்றதுதான் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளும். திருவள்ளுவரை எந்த மதத்தினரும் சொந்தமாக்கிக் கொள்ளலாம், ஆனால் அதன்படி வாழ்ந்து காட்டுவதே முக்கியமாகும்' எனக் கூறி நித்தியானந்தபாரதி திருவள்ளுவர் சிலைகளின் மீது படிந்திருந்த தூசிகளை துடைக்கச் சென்றுவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்