அயோத்தி பாபர் மசூதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில் மக்களின் மனநிலை என்ன?

ராம ஜென்மபூமியில் பூசாரியாக இருக்கும் சத்யேந்திர தாஸ்
Image caption ராம ஜென்மபூமியில் பூசாரியாக இருக்கும் சத்யேந்திர தாஸ்

ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், அயோத்தியில் வசிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனநிலையை பதிவு செய்கிறது பிபிசி.

வனவாசம் முடிந்து ராமர் அயோத்திக்கு திரும்பியதாக கூறப்படும் நாளன்று ராம ஜென்மபூமியில் அமைந்துள்ள கோயிலில் பூசாரியாக இருக்கும் சத்யேந்திர தாஸ், 'அன்னகூட்' என்று அழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் பாபர் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இக்பால் அன்சாரியும் கலந்துகொண்டு, அங்கு வழங்கப்பட்ட 56 விதமான உணவுப் பதார்த்தங்களையும் ரசித்து ருசித்து உண்டார். அது மட்டுமல்ல, திருவிழாவில் கலந்து கொண்ட இக்பால் அன்சாரிக்கு பண்டிகை நாள் பரிசாக 100 ரூபாய் அன்பளிப்பையும் சத்யேந்திர தாஸ் கொடுத்தார்.

சத்யேந்திர தாஸ் மற்றும் இக்பால் அன்சாரி இருவருமே, ஒன்றாக ஊடகங்களின் முன் தோன்றி, இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பேசினார்கள்.

எது எப்படி இருந்தாலும், பாபர் மசூதி இருந்த இடத்துக்கு கீழே இந்து ஆலயத்தின் 'கட்டமைப்பு' இருக்கிறது என்பதில் சத்யேந்திர தாஸ் உறுதியாக இருக்கிறார். கோயிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, உண்மையில் அங்கு ஒரு மசூதி இருந்திருந்தால், 1961ஆம் ஆண்டில் சுன்னி வக்ஃப் வாரியம் ஏன் தாங்கள் சட்டபூர்வ உரிமை கோரலை கைவிட்டது என்று கேட்கிறார்.

''ராம் லல்லா கடந்த 26 ஆண்டுகளாக கூடாரத்தில் அமர்ந்திருக்கிறார். இப்போது அவர் பெரிய கோயிலுக்குள் பிரவேசிக்கும் நேரம் வந்துவிட்டதாகத் தெரிகிறது,'' என்கிறார் சத்யேந்திர தாஸ். தனது வீட்டின் முதல் மாடியில் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்புறத்தில் உள்ள சுவரில் வில்-அம்பை கையில் ஏந்திய மிகப் பெரிய சுவரொட்டி இருக்கிறது.

பழைய தகராறில் சங் பரிவார்

ராம ஜென்மபூமியின் பழைய பூசாரியும், ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தளத்தை கடுமையாக விமர்சிப்பவருமான லால் தாஸ் நீக்கப்பட்ட பிறகு, சந்த் கபீர் நகரைச் சேர்ந்த ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், பாபர் மசூதி இடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் இங்கு பூசாரியாக நியமிக்கப்பட்டார்.

மசூதி இடிக்கப்பட்ட 11 மாதங்களுக்குப் பிறகு 1993-இல் லால் தாஸ் படுகொலை செய்யப்பட்டார்.

ராம ஜென்மபூமி வழக்கில், உள்ளூர் இந்து அமைப்புகளான நிர்மோஹி அகாரா போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி, தங்கள் பிடியை இந்துத்துவா அமைப்புகள் வலுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது.

அதே நேரத்தில், இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடம், ராமரின் பிறப்பிடமா அல்லது மசூதிக்கு உரியதா என்பதை உச்ச நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்பது அயோத்தியில் உள்ள சாமியார்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் தெளிவாகத் தெரியும்,

இங்கு நடக்கும் விவாதத்தில் மோதி மற்றும் யோகியின் பெயர் மீண்டும் மீண்டும் வருகிறது.

ராம ஜென்மபூமி அறக்கட்டளையைச் சேர்ந்த நிருத்ய கோபால் தாஸின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மற்றும் யோகியின் ஆட்சியின் கீழ் ராம் லல்லா அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு பெரிய கோயில் கட்டப்படும்.

"தற்போது அயோத்தி விவகாரத்தில் முடிவு ராமர் கோவிலுக்கு ஆதரவாக மட்டுமே வரும்," என்று உறுதியாக கூறுகிறார் ராம ஜென்மபூமி கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் ஜன்மேஜய் ஷரண்.

Image caption கோபால் தாஸ்

ராம ஜென்மபூமி கட்டுமான அமைப்பு உருவான விதம்

ராமர் பெயரில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற அமைப்புகள் எதுவும் அயோத்தி வழக்கில், நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் நிருத்ய கோபால் தாஸ் அரசாங்கத்திற்கு நெருக்கமாக கருதப்படுகிறார். மேலும் கோயிலுக்கு ஆதரவாக முடிவெடுத்தால், கோவில் கட்டும் பணியானது அவரது அமைப்புக்கு கிடைக்கும் என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது.

சிலர் சோம்நாத் ஆலயத்தில் வாரியம் இருப்பது போல, அயோத்தி கோவிலுக்கும் வாரியம் உருவாக்கலாம் என்பது குறித்தும் பேசுகிறார்கள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக ராம ஜென்மபூமியின் தரப்பில் நீதிமன்றத்தில் போராடிய நிர்மோஹி அகாரா மற்றும் இந்து மகாசபை போன்ற அமைப்புகள், சங் பரிவாரின் ராமர் கோயில் அரசியலில் ஒரு பகுதியாக இல்லாததால் இப்போது ஓரங்கட்டப்பட்டுவிட்டன.

நிர்மோஹி அகாராவின் சேதமடைந்திருக்கும் இடத்தில், அசோக மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் தீனேந்திர தாஸ், ''நிர்மோஹி அகாரா தனது பணிகளை விளம்பரப்படுத்தவில்லை, அவர்கள் செய்கிறார்கள், ராமரின் பெயரை யார் வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம்,'' என்று கூறுகிறார்.

இருப்பினும், அடுத்து என்ன செய்வது என்பதை அனைத்து இந்து தரப்பினரும் ஒன்றாக சேர்ந்துதான் முடிவு செய்யும் என்று அவர் கூறுகிறார்.

கள நிலவரம்

ராமர் பிறந்ததாக கருதப்படும் இடத்திற்கு தேவையான பொருட்கள் தயாரிக்கப்படும் பட்டறையில் அமைதி நிலவுகிறது. அருகிலுள்ள கோயிலில் இருந்து பஜனை செய்யும் சத்தம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் உள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தின்போது கொல்லப்பட்ட கர சேவகர்களின் படங்கள் அங்கு காட்சிப்படுத்தபட்டுள்ளன. வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும், ராமர் கோயிலை இடிக்க பாபர் அனுமதிக்கும் காட்சியும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தியிலும் சுற்றுலா வழிகாட்டிகள் இருக்கிறார்களா என்ற கேள்வியை உள்ளூர் பத்திரிகையாளர் மகேந்திர திரிபாதியிடம் கேட்டோம். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அவர், "ராமர் பெயரில் ஏராளமானோர் தொழில் நடத்தி வருகிறார்கள்" என்று கூறுகிறார்.

கடைசியாக கைவினைஞர் சமீபத்தில் இறந்துவிட்ட பிறகு வேலை நிறுத்தப்பட்டதாக கர்சேவாக் புரத்தில் உள்ள அந்தப் பட்டறையின் மேற்பார்வையாளர் அன்னு பாய் சோன்புரா கூறுகிறார்.

ஒரு காலத்தில், இங்கு 250 கைவினை கலைஞர்கள் பணிபுரிந்தனர். ஆனால் தயாராக இருக்கும் சிவப்பு கல் தூண்கள் மற்றும் செதுக்கல்கள் கருப்பு நிறமாக மாறி வருகின்றன, அன்னு பாய் சோன்புராவின் கூற்றுப்படி, அவை பயன்படுத்தப்படுவதற்கு முன்பு கடுமையாக எடைபோட வேண்டும்.

கர சேவகர்களின் இடத்திற்கு சற்று வெளியே தேநீர் கடையை நடத்தி வரும் சந்தோஷ் செளராசியா, ராமர் கோயில் கட்டப்படாதது குறித்து மிகுந்த அதிருப்தியில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபொத்ஸவத்தின் (தீபத் திருவிழா) குறித்து கேள்வி எழுப்பும் இவர், "இந்த ஐந்து லட்சம் விளக்குகளை ஏற்றினார்கள். ஆக்ரா, தாஜ்மஹாலை பார்ப்பது போல இங்கும் பார்க்க வருகிறார்கள். இதுவே ராம் லல்லாவின் கோயில் அயோத்தியில் கட்டப்பட்டிருந்தால், மக்கள் அதைப் பார்க்க வருவார்கள்," என்று கூறுகிறார்.

பிறகு, அவரே பேசத்தொடங்குகிறார். "அவர்கள் கோயில் கட்ட அனுமதிக்க மாட்டார்கள், இல்லாவிட்டால் அவர்களின் வருமானம் போய்விடுமே, அவர்களின் செல்வாக்கு குறைந்துவிடுமே," என்கிறார்.

கரசேவக் புரத்தில், அயோத்தி நகரம் கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. ஆனால் நகரத்தின் பல பகுதிகளைப் போலவே இங்கும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர்.

போலீஸ் ஏற்பாடுகளுக்கு பழக்கமாகிவிட்ட அயோத்திவாசிகள், தங்கள் தினசரி வாழ்க்கை போராட்டங்களில் மும்முரமாக உள்ளனர்.

வழக்கம்போல ஹனுமான் கோயிலின் பாதையில், கத்ரியா பேடா மற்றும் தேங்காய் பத்தை விற்பனை செய்யப்படுகின்றன, பக்தர்கள் வழக்கம் போலவே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செய்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

அயோத்தியில், இன்றும்கூட மக்கள் ஒற்றுமையாக, அண்ணன் தம்பிகளாக, உறவினர்கள் போல இயல்பாகவே பழகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று முஜிபுர் அகமது கூறுகிறார். 'இங்கு நிலைமை மோசமாக இருப்பதாக ஊடகங்கள்தான் காண்பிக்கின்றனர்,' என்று அவர் கூறுகிறார்.

எது எப்படி இருந்தாலும், கோயிலின் கட்டுமானம் 2022க்கு முன்னர் அதாவது தேர்தலுக்கு முன்பு தொடங்காது என்கிறார் ரோஹித் சிங். முஸ்லிம்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், இந்துக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள், அல்லது இந்துக்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார் அதிகூர் ரஹ்மான் அன்சாரி.

நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமாக சரியானதாக இருந்தால் அதை ஏற்க முஸ்லிம் தரப்பு தயாராக உள்ளது, இல்லையெனில் அது மேலும் நடவடிக்கை எடுக்க நினைக்கும் என்றும், தேவைப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் பாபர் மசூதி தரப்பின் காலிக் அஹ்மத் கான் கூறுகிறார்.

காலிக் அஹ்மத் கானும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்தியஸ்தக் குழுவைச் சந்தித்தார். பாபர் மசூதியின் நிலத்தின் உரிமை கோரலைக் கைவிட வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

பழைய உரிமை கோரல்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுள்ளதாகவும், 120X40 அடி நிலத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமை கோரல் தொடர்வதாகவும் பாபர் மசூதி தரப்பு கூறுகிறது. மசூதியின் நிலத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்றும் பாபர் மசூதி தரப்பு கூறுகிறது.

"இந்த நிலத்தை விட்டுவிட்டு, வேறு எங்கு கோயிலைக் கட்டினாலும், எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இந்த இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என்றும் கூட நாங்கள் கோரவில்லை, ஆனால் சிலர் கோவில் கட்டுவதை விட இந்து-முஸ்லிம் பிரச்சனைகள் குறித்துதான் அதிக அக்கறை கொண்டுள்ளனர்," என்று காலிக் கூறுகிறார்.

தீர்ப்புக்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

அயோத்தியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீர்ப்புக்கு பின் நிலைமையை கட்டுக்குள் வைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியருடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபின் பதற்றத்தை தூண்டும் வகையில் வெளியிடப்படும் சமூக ஊடகப் பதிவுகளை நீக்க 16,000 'டிஜிட்டல் தன்னார்வலர்களை' மாநில அரசு களமிறக்கியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. கூடுதலாக பல்லாயிரம் பாதுகாப்பு படையினரும் நாடு முழுவதும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

"பதற்றத்தை தூண்டும் பதிவுகளைக் கண்காணிக்கவும், அவை குறித்து தகவல் தெரிவிக்கவும், அயோத்தி பகுதியில் உள்ள 1600 கிராமங்களில் இருந்து 16000 டிஜிட்டல் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்," என அயோத்தியா காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார்.

அடுத்த வாரம் அங்கு நடக்கவுள்ள விழாவையொட்டி, சரயு நதியில் நீராட அயோத்திக்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது," என்று அயோத்தியா மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :