ரஜினிகாந்த்: "திருவள்ளுவரைப் போல எனக்கும் காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்"

நடிகர் ரஜினி படத்தின் காப்புரிமை Mail Today / getty images

"திருவள்ளுவரை போலவே எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள், நானும் மாட்ட மாட்டேன், திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்" என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு இன்றும் வெற்றிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை போடப்பட்டு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது விமர்சன கருத்து எழுதப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அடுத்ததாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை அணிவித்து, ருத்திராட்ச மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபட்டு கைதானார்.

திருவள்ளுவர் மீது மதசாயம் பூசப்படுவதாக தமிழகத்தின் எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை வைத்துள்ள இந்த நேரத்தில், ரஜினிகாந்திடம் பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா என்றும் திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசப்படும் சர்ச்சை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

''திருவள்ளுவர் ஒரு சித்தர். அவருக்கு எந்த மதத்தின் சாயமும் பூச முடியாது. மேலும் அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆத்திகர் என்பது திருக்குறளை படித்தாலே தெரியும். அவர் ஆத்திகர். நாத்திகர் அல்ல அதனை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. பாஜகவினர் தங்களது விருப்பத்திற்கு செய்யும் விஷயங்களை பொதுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் காவி உடை போட்டதற்காக ஊரில் உள்ள எல்லா திருவள்ளுவர் சிலைகளுக்கும் அதுபோல செய்யவேண்டும் என அவர்கள் சொல்லவில்லை,'' என்று கூறினார்.

பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ரஜினி பாஜகவில் சேரவேண்டும் என தொடர்ந்து பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ''யாரும் அழைப்பு விடவில்லை. யாரும் என்னிடம் பாஜகவில் சேரவேண்டும் என கேட்கவில்லை,'' என்றார்.

திருவள்ளுவருக்கு சாயம் பூச நினைப்பது போல, எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள். இருவரும் தப்பித்துவிடுவோம் என்று ரஜினி கூறினார். மேலும், பாரதிய ஜனதா கட்சி தன்னை நம்பி இல்லை என்று அவர் தெரிவித்தார்.

பாஜக சொல்வதென்ன?

இந்நிலையில், ரஜினி தனக்கு காவி சாயம் பூசும் வேலைநடக்கிறது என வெளிப்படையாக பேசியதை தொடர்ந்து ரஜினி தங்கள் கட்சியில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என பாஜகவின் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

''ரஜினி எங்கள் கட்சியில் சேருவார் என எப்போதும் நாங்கள் சொல்லவில்லை. இந்த ஊகங்களில் எங்களுக்கு விருப்பம் இல்லை. தற்போது நாங்கள் உள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகிகொண்டிருக்கிறோம்,'' என தெரிவித்தார்.

அவர் வேறு என்ன பேசினார்?

திருவள்ளுவர் விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதாக்குவதாக ரஜினி குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேட்டபோது இந்த முறை போட்டியிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தான் எப்போதும் வெளிப்படையாக பேசிவருவதாக கூறிய ரஜினி, தமிழகத்தில் ஆளுமை கொண்ட தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றும் அரசியல் கட்சி தொடங்கும் வரை படத்தில் நடிக்கபோவதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்

அயோத்தி வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை இருப்பதை தாம் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலில் முழுமையாக வரும் வரை தொடர்ந்து தான் திரைப்படங்களில் நடிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவாதிக்கப்படவேண்டிய மக்கள் பிரச்சனைகள் பலவும் இருக்கும்போது ஊடகத்தினர் தேவையற்றவகையில் திருவள்ளுவரை வைத்து சர்ச்சையை உருவாகிவிட்டதாக தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பின் அறிவிப்பு வந்தபோது, அதனை ஆதரித்த ரஜினி தற்போது என்ன கருதுகிறார் என்று கேட்டபோது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகுகூட தனது கருத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்