இந்தியா-பாகிஸ்தான் சீக்கிய குருத்துவாராக்களை இணைக்கும் சாலை பிறந்தது

புனித பயணிகள்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் டேரா பாபா நானக் நகரம் மிகவும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு உள்ளது.

இந்திய எல்லையில் உள்ள டேரா பாபா நானக் குருத்துவாராவிலிருந்து பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் குருத்வாரா வரை இரு நாடுகளுக்கு இடையில் புதிய சாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் டேரா பாபா நானக் குருத்துவாராவில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

சனிக்கிழமையன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தத்தமது நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாதைகளை திறந்து வைத்து லட்சக்கணக்கான சீக்கியர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்றினர்.

இது பெரிய விஷயம். இதை விட பெரிய தருணம் இருக்க முடியாது என 65 வயதான ஹரிந்தர் சிங் கூறியுள்ளார். அவர் தாந்தரன் மாவட்டத்திலிருந்து வந்துள்ளார். மேலும் அவர்“எங்கள் வாழ்நாள் முழுவதும் இதற்காகவே காத்திருந்தோம். நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” எனக் கூறினார்.

மற்றொரு யாத்திரீகர் பல்வந்த் சிங் , வாழ்வில் ஒரு தடவையாவது இந்த குருத்துவாராவுக்கு சென்று காண அனுமதிக்குமாறு நாங்கள் தினமும் குரு நானக்கை வேண்டி கொண்டுள்ளோம். கடைசியாக அது நடக்கவிருக்கிறது என கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள புனிதத்தலம் சீக்கியர்களுக்கும் பிற பஞ்சாபிகளுக்கும் மிக முக்கியமானதொன்று. சீக்கிய மதத்தை உருவாக்கிய குரு நானக் தேவ் தன்னுடைய கடைசி 18 ஆண்டுகளை அங்கே கழித்தார். குரு நானக்கின் 550வது பிறந்தநாள் நவம்பர் 12 அன்று வருவதையொட்டி இந்த எல்லைப்பகுதி திறக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

இந்த புதிய பாதைக்கான ஒப்பந்தம் இரு நாடுகளால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள குருத்துவாராவுக்கு செல்ல முடியும். இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாளுக்கு 5000 இந்திய புனிதப்பயணிகள் கர்தார்பூரில் இருக்கும் குருத்துவாரா தர்பார் சாகிப்புக்கு செல்ல முடியும்.

நகரமும் சாலையும்

டேரா பாபா நானக் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குரு நானக்கை பின்பற்றுபவர்களால் இந்த நகரம் உருவாக்கப்பட்டு அவரின் பெயரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது டேரா பாபா நானக் குருத்வாரா. இது ராவி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. ராவி ஆற்றுக்கு மேற்கு கரையில் பாகிஸ்தானின் கர்தார்பூர் நகரம் அமைந்துள்ளது. கர்தார்பூர் குருத்வாரா பாகிஸ்தான் நாரோவல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்து 4.5 கிலோமீட்டரில் உள்ளது.

இந்தியாவில் உள்ள டேரா பாபா நானக் மற்றும் கர்தார்பூர் பாதை மொத்தம் 4.1 கிலோமீட்டர் நான்கு வழிச் சாலை. இது டேரா பாபா நானக்கிலிருந்து சர்வதேச எல்லையைத் தொட்டு அங்கிருக்கும் பயணிகள் தங்குமிடம் வரைக்கும் அமைந்துள்ளது.

நவ்ஜோத்சித்து

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் மேலும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஹர்சிம்ரத் கௌர் பாதல் ஆகியோரை சேர்த்து மொத்தம் 550 இந்திய பிரபலங்கள் சனிக்கிழமையன்று இந்த பாதையில் செல்ல பயணத் திட்டமிட்டனர்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல் தலைவர் நவ்ஜோத் சித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து இந்த விழாவில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு மூன்று முறை கடிதம் எழுதினார். அமைச்சகம் ,ஒரு நல்ல இந்திய குடிமகனாக சட்டத்தை மதிப்பவராக மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்தால் விழாவில் பங்கேற்க கூடாது என்றது. ஆனால் தகுந்த விசாவில் ஒரு சீக்கியராக பாகிஸ்தானுக்கு செல்வேன் என்று சித்து பதில் கடிதம் அனுப்பினார்.

கடைசி நிமிட ஏற்பாடு

இதற்கிடையில் இந்த விழாவுக்கான எல்லா ஏற்பாட்டுகளையும் செய்வது மழையின் காரணமாக கடினமாகியிருந்தது. ஏற்கனவே பஞ்சாப் அரசால் 4 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட தற்காலிக தங்குமிடம் மழையால் சேதமடைந்தது. பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடம், சமைக்குமிடம் மேலும் அலுவலகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. பல பதாகைகள் சரிந்து விழுந்தன. இதனால் பிரதமர் தங்குமிடம் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சதியா?

இந்த சாலையால் சில புனிதப்பயணிகள் மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலர் இதை பாகிஸ்தானின் சதி என்ற நோக்கில் பார்க்கின்றனர். ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் இதன்பின் எதிர்மறையான திட்டம் வைத்திருப்பார்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரு புறம் மனிதநேயத்தையும் நட்பையும் வெளிபடுத்தும் பாகிஸ்தான் மற்றொரு புறம் இந்த பாதையின் மூலம் ஐஎஸ்ஐ தீவிர வாதிகளை அனுப்பி காலிஸ்தானுக்காக போராட இந்திய சீக்கியர்களை தூண்டிவிடலாம் மேலும் ஸ்லீப்பர் செல்லை உருவாக்கலாம் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்திர் சிங் கூறினார்.

அதேசமயம் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். அந்தப் பகுதி காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களும் நிறைய முக்கிய பிரமுகர்களும் அங்கு வருகின்றனர். இதனால் அமிர்தசரசில் இருக்கும் காவல் படையும் இணைந்துள்ளது என மூத்த காவல்துறை அதிகாரி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :