அயோத்தி தீர்ப்பு: 'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம்'

Ayodhya dispute: Indian Supreme Court

இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில், பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது.

'இந்துக்களுக்கே சொந்தம்'

சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும்.

சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுமையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும். 1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் சுன்னி வக்ஃப் வாரியம் அளிக்கவில்லை.

1992ஆம் ஆண்டு பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது.

'கோயில் கட்ட அறக்கட்டளை'

கோயில் கட்டுவதற்கு 3 - 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

'மக்களின் நம்பிக்கையை கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும்'

பாபர் மசூதியை கட்டியது மீர் பாகி. இறையியல் தொடர்பான விஷயங்களில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. வழிபடும் மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது. ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் இருந்ததை தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது; அதைப் புறந்தள்ள முடியாது என்று கோகோய் கூறினார்.

அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தற்போது மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

'தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரமாட்டோம்' - உத்தரப்பிரதேச சுன்னி வக்ஃப் வாரியம்

அயோத்தி நிலத் தகராறு தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தங்கள் தரப்பு எந்த விதமான மறு ஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்யப் போவதில்லை என்று உத்தரப்பிரதேச மாநில சுன்னி மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

வேறு எந்த தனி நபரோ, வழக்கறிஞரோ, அமைப்போ உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தால் அது தங்கள் நிலைப்பாடு இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் 2010இல் வழங்கிய தீர்ப்பில், வழிபாட்டுக்குரிய இடங்கள் சட்டத்தின் சரத்துகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தெரிவித்த கருத்துகளை, தங்கள் கருத்தில் கொள்ளாமல் வைத்ததற்காக அவர் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சி.ஆர்.பி.எஃப் காவல்

சி.ஆர்.பி.எஃப்-இன் 63வது படாலியான் அங்கு காவலில் ஈடுபட்டுள்ளது. பிரச்சனைக்குரிய இடம் உள்ள பகுதியை தங்கள் படையினர் பாதுகாப்பார்கள் என்றும் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பாதுகாக்கும் என்றும் பிபிசியிடம் தெரிவித்தார் 63வது படாலியான் கமாண்டன்ட் விசேன்.

உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் இந்தத் தீர்ப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சமூகம், மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கணிக்கப்படுகிறது.

144 தடை உத்தரவு

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் இடமான, பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளதுடன் அங்கு காவலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மற்றும் தீர்ப்பின் தன்மையை உண்மையை உணர்ந்து செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம், ஊடகங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், தீர்ப்பு தொடர்பான செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தன.

அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி - பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அக்டோபர் 16ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை நடைபெற்ற நாட்களின் அடிப்படையிலும், நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் மணி நேரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் இரண்டாவது நீண்ட விசாரணையாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பட்டியலில் 68 நாட்கள் நடைபெற்ற கேசவனாந்தா பாரதி வழக்குதான் முதலிடத்தில் உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, ஓய்வுப்பெற்ற நீதிபதி கலிஃப்புல்லா தலைமையில் ஒரு மத்தியஸ்த குழுவும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு, அந்த குழுவும் அதன் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துவிட்டது.

அயோத்தி நிலத்தகராறு வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்தது.

இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துதான் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :